தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் எழுதிய விடுதலை நாள் சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் பின்வருமாறு:
கூட்டாட்சியின் சமநிலைதான் துடிப்பான மக்களாட்சியின் அடையாளம்! மாநிலத்துக்குக் கிடைக்க வேண்டிய, தரப்பட வேண்டிய நிதியானது எப்போதும் போராடி, வாதாடி, வழக்கு போட்டு பெற வேண்டிய நிலைமையில் இருப்பது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல. இது மாநிலத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும், இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் பாதிக்கும்.
இந்திய நாடு தனது அரசியல் சுதந்திரத்தை 1947-ஆம் ஆண்டு பெற்றது. இது சாதாரணமாகக் கிடைத்த சுதந்திரம் அல்ல. முந்நூறு ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பின்பு கிடைத்த சுதந்திரம் இது.
அடக்குமுறை மூலம் ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தூக்கி உயிரையே தந்த தியாகிகள் எத்தனையோ பேர் இம்மண்ணில் வாழ்ந்தார்கள். அமைதி வழியிலான போராட்டத்தை நடத்தி, அதில் உயிர் துறந்த தியாகிகளும் இம்மண்ணில் உண்டு. இந்தியாவுக்குச் சுதந்திரம் பரிசளிக்கப்படவில்லை. இரத்தம், வியர்வை, மூச்சு, உடல், உணர்வு, தியாகம் ஆகிய அனைத்தையும் கொடுத்துப் பெற்றதுதான் இந்திய நாட்டின் சுதந்திரம்.
குமரி முதல் இமயம் வரை விரிந்த இந்த இந்திய நாட்டின் ஏதோ ஒரு பகுதியில், குறிப்பிட்ட ஒரு பிரிவினரால் மட்டும் இப்போராட்டங்கள் நடத்தப்படவில்லை. நாடு முழுவதும் நடைபெற்றது. அனைத்து மாநில மக்களும், அனைத்து தேசிய இன மக்களும், அனைத்து மொழியினரும், அனைத்து மதப் பிரிவைச் சேர்ந்தவர்களும், அனைத்துப் பண்பாட்டைப் பின்பற்றுபவர்களும் இப்போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அதனால்தான் இது தேசம் முழுவதும் நடைபெற்ற தேசியப் போராட்டமாக அமைந்தது. இப்படிப் பெற்ற அரசியல் விடுதலையானது, அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதால்தான் 'அனைவருக்குமான இந்தியாவாக' இது அமைய வேண்டும் என்று நமது தலைவர்கள் கனவு கண்டார்கள்.
'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற உன்னதமான தத்துவத்தை வகுத்துக் கொடுத்தார்கள் நமது தலைவர்கள். பல்வேறு இனங்கள், பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்கள் இருந்தாலும் அனைவரும் இந்தியர்கள், அனைவருக்குமான இந்தியா என்ற பொதுமையான நோக்கத்தை நமது தலைவர்கள் உருவாக்கினார்கள். நமக்குள் இருக்கும் வேற்றுமையைப் பார்த்த அந்நிய சக்திகள், ' சுதந்திரம் கிடைத்த இந்தியா சில ஆண்டுகள் கூட ஒன்றாக இருக்காது' என்று நினைத்ததும் உண்டு. அதற்கு மாறாக 75 ஆண்டுகளையும் கடந்து நாம் ஒற்றுமையாக இருக்கக் காரணம், 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பது ஆகும்.
பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டது இந்தியா. இவர்களுக்குள் மோதல் வரக் கூடாது என்பதற்காக, 'மொழிவாரியாக மாகாணங்கள்' பிரிக்கப்பட்டன. 'மாநிலங்களின் ஒன்றியம்' என இந்திய அரசமைப்புச் சட்டமே வரையறுக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் திட்டங்கள் முறையாகச் சென்றடைய திட்டக் கமிஷன் உருவாக்கப்பட்டது. ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன.
பல்வேறு மொழிகள் கொண்டது இந்தியா. 'இங்கு இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தி மொழியானது திணிக்கப்படாது' என்று இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் உறுதி அளித்தார்கள். இந்திக்கு ஆதரவாக ஒன்றிய அரசு முடிவுகள் எடுக்கும்போது, அதற்கு எதிரான போராட்டங்கள் கிளர்ந்தெழுந்தால் உடனே அந்த உத்தரவுகள் திரும்பப் பெறப்பட்டன. தமிழும் ஆங்கிலமும் போதும், இந்தி தேவையில்லை என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட சட்டமானது, ஒன்றிய அரசால் ஏற்கப்பட்டது என்பதும் வரலாறு.
பல்வேறு மத நம்பிக்கை கொண்டவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். ஆனாலும் இந்திய அரசானது, 'மதச்சார்பற்ற அரசு'. மதச்சார்பற்ற தன்மையை இந்திய அரசமைப்புச் சட்டமே ஏற்றுக் கொண்டு முகப்புரையில் முழங்குகிறது. இவை அனைத்தும் சேர்ந்து இந்திய சுதந்திரத்தை, அனைவர்க்குமான சுதந்திர நாடாக மாற்றி வருகின்றன.
ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, சமூகநீதி, மத நல்லிணக்கம்,மொழி உரிமை என நாங்கள் பேசுவது குறுகிய நோக்கமாகச் சிலரால் குற்றம் சாட்டப்படுகிறது. பிரிவினைவாதமாக, இனவாதமாகச் சொல்லப்படுகிறது. இதில் துளியும் உண்மை இல்லை. இந்திய ஒன்றியமானது கூட்டாட்சி நாடாகச் செயல்பட வேண்டுமானால் சுயாட்சி உரிமை கொண்டவையாக மாநிலங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அதற்குப் போதுமான சான்றுகளை நாங்கள் வழங்கியுள்ளோம்.
அதனால்தான் இராணுவம், வெளியுறவு, பாதுகாப்பு, கரன்சி போன்றவை நீங்கலாக மற்ற உரிமைகள் அனைத்தும் மாநிலங்கள் வசம் இருக்க வேண்டும் என்று மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்த தலைவர்கள் சொன்னார்கள். ஒன்றியப்பட்டியல், மாநிலப் பட்டியல், ஒத்திசைவுப் பட்டியல் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ள உரிமைகள் கூட முறையாகச் செயல்படுத்தப்படுவது இல்லை. ஒத்திசைவுப் பட்டியலை, ஒன்றியப் பட்டியலாகவே மாற்றிக் கொண்டார்கள். மாநிலப் பட்டியலில் உள்ள உரிமைகளையும் பறிக்கிறார்கள். ஒன்றியப் பட்டியலின் மூலமாக மாநிலங்களுக்கு செய்து தர வேண்டியதையும் செய்வது இல்லை. இதுதான் 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்குப் பிறகு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் எதிர்கொள்ளும் மாபெரும் நெருக்கடி.
எங்கள் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக ஆட்சி அமைத்ததும் செய்த மிக மிக்கியமான முன்னெடுப்பு என்பது மாநில – ஒன்றிய அரசு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுத்தளிப்பதற்காக இராஜமன்னார் குழுவினை அமைத்ததுதான். அக்குழு அளித்த பரிந்துரைகள் 1974-ஆம் ஆண்டு சட்டமன்றத் தீர்மானம் ஆனது. கூட்டுறவுக் கூட்டாட்சியியலை வலியுறுத்திய முன்னோடி மாநிலமாக இருந்தும், ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பால், தமிழ்நாடு வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருப்பதற்காகவே தண்டிக்கப்பட்டது.
எங்கள் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு மாநிலத்தின் வளர்ச்சியானது மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுவருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 11.19 விழுக்காடாக அதிகரித்து இருக்கிறது 14 ஆண்டுகளுக்குப்பின், மீண்டும் இரட்டை இலக்க வளர்ச்சியைத் தமிழ்நாடு எட்டி இருக்கிறது. இந்தியாவிலேயே மிக விரைவாக வளரும் பொருளாதாரமாகத் திகழ்கிறது தமிழ்நாடு. இது வேறு எந்தப் பெரிய மாநிலமும் பெற்றிராத மாபெரும் வளர்ச்சி. பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளோம். இது இந்திய நாட்டிலேயே மிக அதிகமான விழுக்காடு. ஆனால், இத்தகைய சிறப்பான வெற்றியைப் பெற்று வரும் மாநிலத்தை ஒன்றிய அரசு தண்டிக்கிறது.
ஏற்றுமதியில், குறிப்பாக மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு அண்மை ஆண்டுகளில் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மின்னணு ஏற்றுமதி ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி பதிவுகளின் அடிப்படையில், ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி அதிகரித்துள்ளது. இந்த செழிப்பான வளர்ச்சியின் அடிப்படையில், 2047-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
'நாங்கள் மட்டும் வளர்ந்தால் போதும்' என்று நினைக்கவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது இந்தியாவின் வளர்ச்சியைக்குத்தான் அடிநாதமாக அமையப் போகிறது. “2047-ஆம் ஆண்டுக்குள் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இந்தியாவின் தொலைநோக்கு இலக்கை அடைய தமிழ்நாட்டின் செயல்திறன் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்" என்று மாண்புமிகு இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் உறுதிமொழியை அளித்திருக்கிறேன்.
எனவே தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டையும் உள்ளடக்கிய இந்திய வளர்ச்சியாகப் பார்ப்பதில் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு என்ன தயக்கம் என்பது எனக்குப் புரியவில்லை. 12 ஆண்டு காலம் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் இன்றைய தலைமை அமைச்சர் அவர்கள். மாநில உரிமைகள் குறித்து அவர் பலமுறை ஆவேசமாகப் பேசி இருக்கிறார். இருப்பினும் மாநில உரிமைகள் பற்றிய பேச்சு வரும்போது பிரதமர் அவர்களின் பேச்சின் தொனி மாறுவது ஏன்?
தமிழ்நாட்டுக்காக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு மாண்புமிகு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்களால் அது அறிவிக்கப்பட்டது. 2019 தேர்தலுக்கு முன்னதாகத் தலைமை அமைச்சர் மாண்புமிகு மோடி அவர்கள் மதுரை வந்து அடிக்கல் நாட்டினார்கள். 6 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை கட்டடம் அமைக்கப்படவில்லை. இந்த அலட்சியத்துக்கு பின்னால் இருக்கும் அரசியலைக் கேள்வி எழுப்பக் கூடாதா?
பிரதம மந்திரி ஸ்ரீ-திட்டம் தொடர்பான கல்வி அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், சமக்ர சிக்ஷா அபியான் (SSA)-ன்கீழ் நிதி மறுக்கப்பட்டுள்ளது. இரண்டும் வேறு வேறு திட்டங்கள். பள்ளி வளர்ச்சித் திட்டத்தையும் மாநிலத்தின் மொழிக் கொள்கையையும் எதற்காக இணைக்க வேண்டும்?
2024-2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ரூ.2200 கோடி ஒன்றிய நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது அரசுப் பள்ளிகளில் பின்தங்கிய குழந்தைகள் மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கிறது. இது பாசிசத் தன்மை கொண்டது அல்லவா?
ஒன்றிய அரசின் சார்பில் திட்டம் அறிவிக்கிறார்கள். ஆனால் முழுமையான நிதியை ஒதுக்குவது இல்லை. மாநில அரசு தனது பங்கையும் கொடுத்துவிட்டு, ஒன்றிய அரசு தர வேண்டிய பங்கையும் போட்டு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத்தொகை தொடர்ந்து உயர்ந்து வருவதும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி நிலையை மேலும் பாதிக்கின்றது. 'நம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது' என்ற எதேச்சாதிகார எண்ணத்தின் வெளிப்பாடு அல்லவா இது?
கடந்த 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள். ஆனால் இந்தப் பரிந்துரைக்கு மாறாக கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. இது மாநிலங்களை வஞ்சிப்பது ஆகும். ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஆளுநர்கள், மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் தடுப்புச் சுவர்களாக இருக்கிறார்கள். இதனை உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளின் மூலமாகச் சுட்டிக்காட்டிய பிறகும் தமிழ்நாடு ஆளுநர் உட்பட பல மாநில ஆளுநர்கள் திருந்தவில்லை. ஆளுநருக்கு ஒரு கோப்பினை அனுப்பும்போதே, அதே நாளில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு பதிய வேண்டிய சூழலை உருவாக்குவது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் அரசமைப்புச் சட்ட, மக்களாட்சித் துரோகம் ஆகும்.
எனவேதான், மாநிலங்களின் உரிமைகளை வென்றெடுக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு. குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை ஆராய ஓர் உயர்நிலைக் குழுவினை அமைத்துள்ளோம். இந்தக் குழுவின் பரிந்துரையாவது தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தற்போது ‘ஒன்றியம் – மாநில’ங்களுக்கு இடையே நிலவும் ‘ஆதிக்கம் – சார்பு’ எனும் நிலையை மாற்றி, மாநிலங்களுக்குரிய உரிமைகள் நசுக்கப்படாமல் உண்மையான கூட்டாட்சி அமையும் என நம்புகிறேன்.