Tamilnadu

நாமக்கல் மாவட்டத்திற்கு புதிய மத்தியக் கூட்டுறவு வங்கி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14.8.2025) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து பிரித்து நாமக்கல் மாவட்டத்தை செயல் எல்லையாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் 165 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களும், 4 மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களும், 393 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களும், 86 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும்;

26 பணியாளர் கூட்டுறவுக் கடன் சங்கங்களும், 3 வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களும், 5 கூட்டுறவு நகர வங்கிகளும், 7 தொடக்கக் கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளும் மற்றும் ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட 746 சங்கங்கள் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி ரூ.76.19 கோடி பங்குத் தொகையுடனும் ரூ.1826.56 கோடி இட்டு வைப்பும் ரூ.1636.07 கோடி கடன் நிலுவையும் கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளது. இவ்வங்கியில் 2024- 2025-ஆம் நிதியாண்டில் 55,583 விவசாயிகளுக்குப் பயிர்க்கடனாக ரூ.625.81 கோடியும், கால்நடை பராமரிப்புக்கடனாக 14,346 விவசாயிகளுக்கு ரூ.117.86 கோடியும்;

மத்திய காலக் கடனாக 1,324 விவசாயிகளுக்கு ரூ.13.78 கோடியும், நகைக்கடனாக 1,64,969 நபர்களுக்கு ரூ.1,489.81 கோடியும், மகளிர் சுய உதவிக்குழு கடனாக 1,878 குழுக்களுக்கு ரூ.162.65 கோடியும், 473 மாற்றுத்திறனாளிகளுக்குக் கடனாக ரூ.2.69 கோடியும், 180 விவசாயிகளுக்கு தானிய ஈட்டுக்கடனாக ரூ.11.85 கோடியும், 776 கூட்டுப்பொறுப்பு குழுக்களுக்குக் கடனாக ரூ.3.99 கோடியும் வழங்கப்பட்டு உள்ளன.

மேலும், தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டமான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.34 இலட்சமும், டாம்கோ திட்டத்தின் கீழ் ரூ.82 இலட்சமும், டாப்செட்கோ திட்டத்தின் கீழ் ரூ.3.91 கோடியும், தாட்கோ திட்டத்தின் கீழ் ரூ.45 இலட்சமும், கல்விக்கடனாக ரூ.63 இலட்சமும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறகுகள் திட்டத்தின் கீழ் ரூ.2.50 இலட்சமும், விதவைகளுக்குக் கடன் தொகையாக ரூ.68 இலட்சமும் இவ்வங்கியின் மூலம் வழங்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 15,273 மகளிருக்கும், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 33 மாணவிகளுக்கும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 397 மாணவர்களுக்கும் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் எளிதில் பணம் பெறும் வகையில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டு வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளித்து வருகின்றது.

நடமாடும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மற்றும் POS இயந்திரங்கள் வாயிலாகவும் சிறப்பான சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. அனைத்து கிளைகளிலும் பாதுகாப்பு பெட்டக வசதிகள் உள்ளன.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதலாவதாக உருவாக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி ஒரு மேலாண்மை இயக்குநர், ஒரு முதன்மை வருவாய் அலுவலர், ஒரு பொது மேலாளர், 2 உதவிப் பொது மேலாளர்கள், 23 மேலாளர்கள், 34 உதவி மேலாளர்கள், 93 உதவியாளர்கள், 4 அலுவலக உதவியாளர்கள் ஆகிய 159 பணியாளர்களுடன் செயல்படும்.

Also Read: “தூய்மைப் பணியாளர்கள் மீது தனிக் கரிசனத்தோடு செயல்படும் முதலமைச்சர்!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!