Tamilnadu
”கல்வி மூலம் மக்களுக்கு அதிகாரம் அளிப்போம்” : The Hindu-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கட்டுரை!
Tamil Nadu's engine of progress: education for all என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள சிறப்புக் கட்டுரையை தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த நூற்றாண்டில் தமிழ்நாட்டின் மகத்தான பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளதாகவும், அதில் ஒன்றை மட்டும் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், அது கல்வியாகத்தான் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சமூக நீதி நமது சித்தாந்தம் என்றால், அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு கல்வி மிகவும் பயனுள்ள கருவியாகும் - கல்வி என்பது, அதனை பெறும் "தகுதி" உடையவர்கள் மட்டுமின்றி அனைவருக்ககுமான சமத்துவத்தையும் செயல்படுத்தும் ஒரு அடித்தளமாகும் - சமத்துவமான தமிழ் சமூகத்தை நாம் தொடர்ந்து கட்டியெழுப்புவதற்கான அடித்தளமும் கல்விதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த தொலைநோக்குப் பார்வைக்கான விதைகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே விதைக்கப்பட்டன 1920 ஆம் ஆண்டு, அப்போதைய சென்னை மாநகராட்சியின் கீழ் இருந்த ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு பள்ளி, இந்தியாவில் முதன்முதலில் தனது மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியதாகவும், அப்போதைய சென்னை மாநகராட்சி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டு, நீதிக்கட்சித் தலைவர் பி.தியாகராய செட்டியால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி, கருணையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட முன்னோடிச் செயலாகும்.
தற்போது, இந்த திட்டம் உலகின் மிகப்பெரிய, பயனுள்ள பள்ளி உணவுத் திட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாகவும், 2022 இல் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டத்துடன் இது முழுமை பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கற்றல் திறனை மேம்படுத்துவதுடன், சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவதையும் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை நோக்கமாக கொண்டுள்ளதாகவும், இதற்கான சீர்திருத்தங்களில் பள்ளி உணவுத் திட்டம் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில், தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையின் மற்றொரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐஐடி, என்ஐடி, தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள், டெல்லி பல்கலைக்கழக முன்னணி கல்லூரிகள் போன்ற இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 135 மாணவர்கள் சேர்ந்துள்ளதையும், மேலும், ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகத்தில் பட்டியல் பழங்குடியினருக்கான மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆறு இடங்களையும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த வெற்றியின் பின்னணியில் மாணவர்களின் தனிப்பட்ட முயற்சிகள் இருந்தபோதிலும், தமிழ்நாட்டின் நீண்டகால இலக்குகளான சமத்துவத்தின் சாதனை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் கல்வி பெறுவதில் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதற்காக ஒரு வலுவான கற்றல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தொடக்கப்பள்ளி முதல் ஆய்வுக் கல்வி வரை ஒவ்வொரு கட்டத்திலும், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், கல்வி உதவித்தொகை, இலவசக் கல்வி, பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடை உள்ளிட்டவை அளிக்கப்படுவதால், ஏழைக் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பாமல், பள்ளிகளுக்கு அனுப்புவதை எளிமையாக்கி உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் உயர் கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 47 சதவீதமாக உள்ளதை சுட்டிக்காட்டி உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதன் தேசிய சராசரி 28.4 சதவீதம் என்றும், பெண்களைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 47.3 சதவீதமாக உள்ள நிலையில், இதன் தேசிய விகிதம் 28.5 சதவீதம் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சாதனைகளின் வேர்கள் நீதிக் கட்சியால் செயல்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களிலும், பின்னர் திராவிட இயக்கத்தால் உறுதி செய்யப்பட்ட திட்டங்களிலும் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சமூக சமத்துவத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதில் சில சவால்கள் உள்ளதை உணர்ந்துள்ளதாகவும், முன்னோக்கி செல்வதற்கான பாதை மற்றும் நடவடிக்கைகள் குறித்து தெளிவாக உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளதாகவும், நீதி, வளம் மற்றும் மனிதாபிமானம் கொண்ட ஒரு தமிழ்நாட்டை தொடர்ந்து கட்டியெழுப்ப, கல்வி மூலம் மக்களுக்கு அதிகாரம் அளிப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The Hindu ஆங்கில நாளேட்டின் கட்டுரையை, தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எளிமையான தொடக்கத்திலிருந்து இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்கள் வரை, கல்வியில் சமூகநீதி எதிர்காலத்தை மாற்றுகிறது என்பதற்கு தமிழ்நாட்டின் மாணவர்கள் உறுதியான சான்றாக நிற்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
பாலியல் வன்கொடுமை : முன்னாள் பிரதமரின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை... நீதிமன்றம் அதிரடி !
-
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் பேசுகிறார் பழனிசாமி - அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம் !
-
"வெளிமாநிலத்தில் இருந்து வாக்காளர்களை இறக்குமதி செய்வதை தமிழ்நாடு ஏற்காது" - அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!
-
வாக்காளர் பட்டியலில் எனது பெயரே நீக்கப்பட்டுள்ளது - பீகார் எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி குற்றச்சாட்டு !
-
"உலகத்தில் தந்தையை உளவு பார்த்த பிள்ளை என்றால் அது அன்புமணிதான்" - மருத்துவர் ராமதாஸ் வருத்தம் !