Tamilnadu
“அமித்ஷாவின் பஹல்காம் கேலிக்கூத்து... மோடி எங்கே இருக்கிறார் ?” : மக்களவையில் ஆவேசமான திருச்சி சிவா MP !
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்புக்கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன, இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் பஹல்காம் தாக்குதல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உரையாற்றினார்.
இதன்பின்னர் திமுக எம்.பி.க்கள் உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகளின் எம்பி.க்கள் நாடாளுமன்ற அவைகளில் உரையாற்றினார். இந்நிலையில் இன்று திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க மறுப்பது ஏன்? மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின. ஆனால் இதுவரை பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை. வெளிநாடுகளுக்கு செல்லும் மோடியை நாடாளுமன்றத்தில் பார்க்க முடிவதில்லை!
பிரதமர் மோடிக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்... நாடாளுமன்றம் தான் வலிமையான அதிகாரமிக்க இடம். இங்கு பேசுவது உலகம் முழுவதும் செல்லும். எனவே பிரதமர் அவைக்கு வரவேண்டும். இப்போது பிரதமர் எங்கே இருக்கிறார்?
பிரதமர் மோடி அவர்கள் தன்னை கடவுளின் குழந்தை என்று பெருமையுடன் குறிப்பிடுவார். அதை ஒரேயொரு காரணத்திற்காக ஏற்றுக்கொள்கிறோம். அவர் யார் கண்களுக்கும் தெரிவதில்லை. பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதம் நடைபெறுகிறது. ஆனால் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை.
நாடாளுமன்ற அவையில் எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது மைக் துண்டிக்கப்பட்டு, ஆளும் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதுதான் ஜனநாயகமா? எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிப்பதில்லை.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தான் அந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்பதற்கான ஆதாரம் என்ன இருக்கிறது? அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதற்கான அடையாளமாக நம் தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கும் வாக்களர் அடையாள அட்டையையும், அவர்கள் வைத்திருந்த சாக்லேட் ’Made in Pakistan’ என்று இருந்ததாகவும் குறிப்பிடும் அமித்ஷாவின் கூற்று கேலிக்கூத்தாக இருக்கிறது. Made in China பொருட்களை இந்த அவையிலே வைத்திருக்கும் நான் என்ன சீனாக்காரனா?
பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்வதாக இருந்தார். பின்னர் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே தீவிரவாத தாக்குதல் அங்கு நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பிரதமருக்கு அனுமதி இல்லாத போது, சுற்றுலா பயணிகளை மட்டும் அனுமதித்தது ஏன்? அவர்களுக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை?
இந்தியாவில் 310 தீவிரவாத ஊடுருவல் அண்மையில் நடந்துள்ளது. அதனை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மல்யுத்த வீரர்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? அவர்கள் மீது அநீதி அளித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இராணுவ அதிகாரியை விமர்சித்த பாஜகவினர் உள்ளிட்ட நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லாதது ஏன்? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி” : அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!
-
சென்னை பறக்கும் ரயில் நிறுவனத்தை மெட்ரோவுடன் இணைப்பது எப்போது? - கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!
-
"திராவிட மாடல் ஆட்சியில் கோயம்புத்தூர், மதுரை IT நகரங்களாக உருப்பெறுகிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
இனி பேரிடர் குறித்து கவலையில்லை... நாசாவுடன் சேர்ந்த இஸ்ரோ : விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள் !
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் : "நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும்" - உச்சநீதிமன்றம் கருத்து !