Tamilnadu
நடுத்தர குடும்பங்களை பாதிக்கும் ரயில் கட்டண உயர்வு : நாடாளுமன்றத்தில் திமுக MPக்கள் கண்டனம்!
ஜூலை 1, 2025 முதல் பயணிகள் ரயிலில் ஏசி பெட்டிகளுக்கான கட்டணங்கள் உயர்ந்துள்ளதை கண்டித்து திமுக மக்களவை உறுப்பினர்கள் சி.என் அண்ணாதுரை, ஜி.செல்வம் மற்றும் ச.முரசொலி ஆகியோர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த கட்டண உயர்வால் மெயில்/எக்ஸ்பிரஸ், பயணிகள், சூப்பர்ஃபாஸ்ட், வந்தே பாரத் போன்ற ரயில்களின் ஸ்லீப்பர், ஏசி, ஜெனரல் என அனைத்து வகுப்புகளும் பாதிக்கப்படும், மேலும் முன்மொழியப்பட்ட கட்டண உயர்வு காரணமாக, நீண்ட தூர மற்றும் புறநகர் அல்லாத வழித்தடங்களில், குறைந்த/நடுத்தர வருமானம் கொண்ட குழு மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளின் அன்றாட பயணிகள் மீது ஏற்படக்கூடிய நிதிச் சுமையை ஒன்றிய அரசு உணரவேண்டும், குறைந்த வருமானம் கொண்ட பயணிகள், EWS, மூத்த குடிமக்கள் மற்றும் அத்தியாவசிய பயண வகைகளுக்கான சலுகைகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளார்கள்.
அதேபோல் அதிகரித்து வரும் கட்டணங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தூரத்தின் விவரங்கள் மற்றும் சமீபத்திய கட்டண உயர்வின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் வருவாய் அதிகரிப்பு எவ்வளவு? வருவாய் உருவாக்கத்துடன் சுலுகைகளையும் வழங்க எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் என்ன? என்றும் கேட்டுள்ளனர்.
வெவ்வேறு வகுப்புகளுக்கான கட்டண உயர்வுகளை முடிவு செய்வதற்கு முன் ஏதேனும் பொது ஆலோசனையை ஒன்றிய அரசு கேட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய திமுக மக்களவை உறுப்பினர்கள், அதற்கான விவரங்களை வெளியிட கோரியுள்ளனர். புறநகர் ரயில் சேவைகளின் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும் மற்றும் வண்டிகளை அதிகப்படுத்தவும் அரசாங்கம் வகுத்துள்ள திட்டங்கள் மற்றும் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்றும் கேட்டுள்ளனர்.
திறன் இந்தியா திட்டம் தோல்வி
ஒன்றிய அரசின் திறன் இந்தியா திட்டம் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தவறியதை சுட்டிக்காட்டி திமுக எம்.பி. கே. ஆர். என். ராஜேஷ்குமார் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
திறன் இந்தியா திட்டம் தோல்வியுற்றதற்கான காரணங்கள் என்ன? லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்திருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது ஆனால் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு இன்னும் வேலைவாய்ப்பு அளிக்காமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன?
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன்களை வழங்குவதில் முறையான பயிற்சி உள்கட்டமைப்பை அரசாங்கம் உறுதி செய்யாததற்கான காரணங்கள் என்ன மற்றும் பயிற்சி பெற்ற நபர்கள் வேலைவாய்ப்பு பெறத் தகுதியானவர்களாகவும், நல்ல வேலைகளைப் பெறவும் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு தரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
வேளாண்மை கடன் சங்கங்களின் பற்றாக்குறை ஏன்?
கிராமப்புறப் பொருளாதாரத்தின் குறுகிய மற்றும் நடுத்தர கால கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய முதன்மை வேளாண்மை கடன் சங்கங்களின் (PACS-கள்) வளங்கள் போதுமானதாக இல்லை என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறதா என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. எம். எம். அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பிரச்சினையைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? திறமையான செயல்பாடுகள் மற்றும் முடிவெடுப்பதற்காக கூட்டுறவுகளில் தொழில்முறை மேலாண்மை கட்டமைப்புகளை மேம்படுத்த கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன மற்றும் கூட்டுறவு நிறுவனம் இல்லாத பஞ்சாயத்துகளில் PACS-களை நிறுவ அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
Also Read
-
இந்தியாவை இயக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்...பா.ஜ.க. அரசை பின் வாங்க வைத்த தமிழ்நாடு : முரசொலி !
-
“பா.ஜ.க.வின் ஆயுதமாக ED பயன்படுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?” : ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை!
-
தமிழ்நாட்டில் நீர்ப்பாசன பரப்பளவை விரிவுபடுத்த வேண்டும் : ஒன்றிய அரசுக்கு ஆ.மணி MP வலியுறுத்தல்!
-
பரமக்குடி - இராமநாதபுரம் இடையே 4 வழி சாலை எப்போது பயன்பாட்டிற்கு வரும்? : நாடாளுமன்றத்தில் ஆ.ராசா கேள்வி!
-
“நாங்கள் அமித்ஷா வீட்டு கதவை தட்டவில்லை! உரிமையோடு மக்களை சந்திக்கிறோம்!” : துணை முதலமைச்சர் பேச்சு!