Tamilnadu
”கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது” : அமர்நாத் ராமகிருஷ்ணன் !
தமிழர்களின் பாரம்பரியத்தையும், தொன்மையையும் பறைசாற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, கீழடியில் நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழாய்வுகளில் பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்து ஏராளமான ஆதாரங்கள் கிடைத்தன. இந்த ஆய்வுகளை மேற்கொண்ட தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர், தங்கள் ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், இந்த ஆய்வுகள் அறிவியல் பூர்வமாக இல்லை எனக்கூறி ஆய்வு முடிவுகளை வெளியிடாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில், கீழடியில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழாய்வு தொடர்பாக, ஓய்வு பெற்ற ஆய்வாளர் ஸ்ரீராமனிடம் ஒன்றிய அரசு அறிக்கை கேட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு கீழடியில் அகழாய்வு செய்த ஸ்ரீராமன், அங்கு ஒன்றுமே இல்லை என்று தெரிவித்ததால் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவை நியமித்தது. 2014 ஆம் ஆண்டு முதல் 2016 வரை முதற்கட்ட ஆராய்ச்சியிலும், 2017 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை இரண்டாம் கட்ட ஆராய்ச்சிகளை அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழு கீழடியில் மேற்கொண்டது.
அந்த குழுவினர், ஆய்வு மேற்கொண்ட பிறகுதான், கீழடியில் தமிழர்கள் பயன்படுத்திய மண்சுவடுகள், குண்டங்கள், கலைப்பொருட்கள், செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்ட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தனது 982 பக்க அகழாய்வு முடிவுகளை அமர்நாத் ராமகிருஷ்ணா ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், இந்த ஆய்வு முடிவுகள் அறிவியல் பூர்வமாக இல்லை என ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரன் சிங் செகாவத் கூறி வருகிறார். தனது ஆய்வு முடிவுகளை திருத்தம் செய்யுமாறு ஒன்றிய அரசு அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் கேட்டது.
ஆனால், கீழடியில் தனது தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வுகள், அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளதால், கண்டுபிடிப்புகளை மாற்றங்கள் செய்ய முடியாது என ஒன்றிய அரசிடம் தெளிவாக தெரிவித்து விட்டார். இருப்பினும், ஒன்றிய பா.ஜ.க. அரசு விடாப்பிடியாக, இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட முடியாது என கூறி வருகிறது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அமர்நாத் ராமகிருஷ்ணன் , "எனது கண்டுபிடிப்பை திருத்தினால் நான் குற்றவாளியாகிவிடுவேன். 982 பக்க ஆய்வறிக்கையில் எழுத்துப்பிழையை வேண்டுமானால் திருத்துவேன், உண்மையை திருத்த மாட்டேன்.
கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது. கீழடி நாகரிகத்தின் தொன்மையை சிதைக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபடுகிறது. ஆய்வின் அடிப்படையில் கீழடி நாகரிக காலத்தை கண்டுபிடித்தேன், அனுமானத்தின் அடிப்படையில் அல்ல.
கீழடியை பற்றி அறியாத ஒருவர் எப்படி அங்கு ஒன்றுமில்லை என்று கூறமுடியும்?. கீழடி அகழாய்வு அறிக்கையை அளிக்க தொல்லியல் துறை ஆய்வாளர் ஸ்ரீராமனிடம் ஒன்றிய அரசு அறிக்கை கேட்டிருந்தது. சங்ககால வரலாற்றை பற்றி ஒன்றிய அரசு ஏன் ஆய்வு மேற்கொள்ளவில்லை. கீழடி ஆய்வறிக்கையை முதலில் ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவத் படித்துப் பார்க்கட்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பீகார் - வாக்காளர் பட்டியல் சீரமைப்பு முறை ஆபத்தானது : இந்திய தேர்தல் ஆணையம் மீது தேஜஸ்வி புகார்!
-
”இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
”இது நாங்கள் உருவாக்கிய கூட்டணி” : எடப்பாடி பழனிசாமிக்கு தொல்.திருமாவளவன் பதிலடி!
-
”ஓரணியில் தமிழ்நாடு” கைகோக்கும் குடும்பங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
ஆகஸ்ட் மாதத்தில் ‘முதலமைச்சர் கோப்பை - 2025’ : முன்பதிவை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!