Tamilnadu

#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க கட்சியை பா.ஜ.கவிடம் அடகுவைத்தது போதாது என்று தற்போது, பா.ஜ.க கட்சிக்காரராகவே மாறிவிட்டார். அண்ணாவின் கொள்கைகளை பேசுவதற்கு பதில் பா.ஜ.க கட்சியின் கொள்கைகளை, வீதி வீதியாக பேசி பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கு பெயர் தேர்தல் பிரச்சாரம் என்று வேறு சொல்லி வருகிறார்.

“பா.ஜ.க.வுடன் 2026 ஆம் ஆண்டு மட்டுமல்ல; 2032 ஆம் ஆண்டும் கூட்டணி இல்லை என்று பழனிசாமி சொல்லி வந்தார். ஆனால் இப்போது பழனிசாமியின் பயணத்தை பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், ஒன்றிய அமைச்சர் எல்.முருகனும் தொடங்கி வைத்தார்கள்.

நேற்று வரை கசப்பான கட்சியாக இருந்த பா.ஜ.க., இன்று நல்ல கட்சியாக அவருக்கு தெரிகிறது. அதனால்தான் “தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யக் கூடிய பல்வேறு திட்டங்களை வழங்கி வரும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு?” என்று கேட்கிறார் பழனிசாமி. தமிழ்நாட்டை பா.ஜ.க வஞ்சித்து வருவது எல்லாம் அவரது கண்ணுக்கும் தெரியவில்லை போல?

தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க என யார் ஆட்சியில் இருந்தாலும் அறநிலையத்துறை சார்பில் பள்ளி கல்லூரிகள் கட்டப்பட்டு வருவது பொதுவான ஒன்று. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் பாலிடெக்னிக் கல்லூரியை 1981ஆம் ஆண்டு உருவாக்கினார். அடுத்த ஆண்டே பெண்கள் பாலிடெக்னிக் தொடங்கினார். இவை இரண்டையும் ஒரே பாலிடெக்னிக்காக 2003ஆம் ஆண்டு ஆக்கினார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. இது எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா ? தெரியாதா?

இப்படி இருக்க திடீர் என்று அறநிலையத்துறை சார்பில் கல்லூரி கட்டுவது ஏன்? என்று பா.ஜ.கவின் குரலாக பேசி நான் முழு சங்கி என மக்கள் மன்றத்தில் தன்னை வெளிக்காட்டி இக்கிறார் பழனிசாமி. இதனைத் தொடர்ந்து சமூகவலைதளங்களில் பழனிசாமியின் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு மக்களுக்கு அநீதி இழைக்கு பாஜகவோடு கைகோர்த்து, மக்களுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கு எதிராகவும் பேசி வரும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து '#சங்கி_பழனிசாமி' என்ற ஹேஷ்டாக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Also Read: ”பா.ஜ.க. புகுந்தால் தமிழ்நாடே நாசமாகிவிடும்” : ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை!