Tamilnadu

”கலைஞர் இன்று இல்லை.. ஆனால் அவர் பேசப்படுகிறார் ”: எழுத்தாளர் இமையம்!

‘நம் நாடு’ இதழில் சில கடிதங்களை எழுதியிருக்கிறார். பிறகு தொடர்ச்சியாக ‘முரசொலி’யில் எழுதியிருக்கிறார். 22.10.1968 முதல் 28.1.1969 வரையிலான கடிதங்களில் ‘அன்புள்ள மறவன்’ என்றும், 1.1.1971 முதல் 10.7.1972 வரையிலான கடிதங்களில், ‘மு. கருணாநிதி’ என்றும், பிறகு 17.7.1972 முதல் 2016 வரையிலான கடிதங்களில் ‘அன்புள்ள மு.க.’ என்றும் எழுதியிருக்கிறார். கடிதத்தின் இறுதியில் ‘மறவன்’, ‘மு.க. கருணாநிதி’, ‘அன்புள்ள மு.க.’ என்று எழுதியதுபோல, கடிதத்தின் தொடக்கத்தில், ‘அன்பு நண்பா’, ‘ஆருயிர்த் தோழா’, ‘இன்நாட்டு மன்னர்களுக்கு’, ‘அன்பின் ஊற்றே’ என்றெல்லாம் எழுதியிருக்கிறார். 1971க்குப் பிறகுதான் ‘உடன்பிறப்பே’ என்று எழுத ஆரம்பித்திருக்கிறார். அவருடைய ஆரம்பகாலக் கடிதங்கள் ‘மறவன் மடல்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

இலக்கிய வகைமைகளில் ஒன்று ‘கடித இலக்கியம்’. உலகம் முழுவதும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என்று பலர் கடிதம் எழுதியுள்ளனர். அவை படிக்கப்பட்டு கொண்டாடப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் பல பேர் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அதில் அறிஞர் அண்ணா, ‘திராவிட நாடு’, ‘காஞ்சி’ இதழில் 1952இல் ‘தம்பி’க்கு எழுதிய கடிதங்களும், கலைஞர் ‘உடன்பிறப்பே’ என்ற பெயரில் முரசொலியில் எழுதியுள்ளார். கடிதங்களும் பெற்ற வரவேற்பை, மதிப்பைப் பிற கடித இலக்கிய நூல்கள் பெறவில்லை. அண்ணாவையும் கலைஞரையும் தவிர்த்து மற்றவர்கள் எழுதிய கடிதங்கள் எல்லாம் தனிமனிதர்களுக்கிடையில் நிகழ்ந்த அன்பு, உறவு, காதல், அறிவுரை குறித்து எழுதப்பட்டவை. ஆனால், அறிஞர் அண்ணாவும், கலைஞரும் எழுதிய கடிதங்கள் முற்றிலும் வேறுபட்டவை. தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு அரசியல் அறிவு, சமூக அறிவு, மொழி, இனப் பற்றை இலக்கிய அறிவை உண்டாக்குவதற்காக எழுதப்பட்டவை. தனிமனித அன்பை, துயரைச் சொல்வதற்காக எழுதப்பட்டவையல்ல.

“உடன்பிறப்புகளான கழகத்தினருக்குக் கூறவேண்டியவற்றையும் அவர்களை முன்வைத்து நாட்டுக்கு, சமுதாயத்துக்குச் சொல்லவேண்டியவற்றையும் ஒரு பாச உணர்வுடன் வெளியிட இந்தக் கடிதம் எழுதும்முறை எனக்கு மெத்தவும் பயன்பட்டிருக்கிறது” என்று கலைஞர் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியையும், கட்சிக்காரர்களையும், தன்னையும் இணைத்துக்கொள்வதற்கான ஒரு இணைப்பு பாலமாகத்தான் அவர் கடிதங்களை எழுதியுள்ளார். சமூக நடப்புகள், அரசியல் நிகழ்வுகள், தனது கட்சியின் கடைசித் தொண்டனும் அறிய வேண்டும், அரசியல் அறிவைப் பெற வேண்டும் என்பதற்காக எழுதியிருக்கிறார். ஒரு விதத்தில், சமூகப் பாடத்தை, அரசியல், இலக்கியப் பாடத்தை நடத்தியிருக்கிறார். பொதுவாக கலைஞருடைய கடிதங்கள், சிறை நிரப்பும் போராட்டம், உண்ணாவிரத போராட்டம், சட்ட நகல் எரிப்புப் போராட்டம், சாலை மறியல், ரயில் மறியல் போன்ற போராட்டத்திற்கான அறிவிப்பாகவும், கொள்கை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்துங்கள் என்ற அறிவிப்பாகவும், மாநாட்டிற்கான அழைப்பாகவும் இருக்கும். இல்லையெனில் மாநில எதிர்க் கட்சிகள் செய்கிற, ஒன்றிய அரசுகள் செய்கிற மக்கள் விரோத, சட்ட, சமூக விரோத செயல்களை விளக்குகின்றன வகையில், கண்டிக்கின்ற வகையில், “ஏ தாழ்ந்த தமிழகமே” என்று விளித்து எழுதியிருப்பார்.

சமூக நடப்புகளையும் அரசியல் நிகழ்வுகளையும் அப்படியே தகவல்களாகச் சொன்னால், தன்னுடைய கடிதத்தைப் படிக்காமல் போய்விடலாம் என்று, தான் சொல்லவரும் விஷயங்களை வெறும் புள்ளிவிவரங்களாகத் தராமல், தான் தருகின்ற செய்திகளுக்குப் பொருத்தமான கதைகளையும் கவிதைகளையும் சேர்த்து ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.

தன்னுடைய கடிதங்களில் புறநானூற்றிலிருந்து 15 பாடல்களையும், குறுந்தொகையிலிருந்து 7, கலித்தொகையிலிருந்து 4, நற்றிணை 2, அகநானூறு 1, ஐங்குறுநூறு 1, பட்டினப்பாலையிலிருந்து 1 பாடல் என்று பயன்படுத்தி எழுதியிருக்கிறார். சங்க இலக்கியத்தில் மட்டும் அரசியல் நோக்கில் 18 பாடல்களையும் இலக்கிய நோக்கில் 12 பாடல்களையும் பயன்படுத்தியிருக்கிறார். அவர் தன்னுடைய எழுத்துக்களில் பயன்படுத்தியிருக்கிற கதை, கவிதை, மேற்கோள்களை மட்டும் தனியாகத் தொகுத்தால் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட ஒரு நூலாக வரும். அந்த அளவுக்கு அவர் இலக்கிய மேற்கோள்களைப் பயன்படுத்தியிருக்கிறார். தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு அவர் அரசியல் அறிவை மட்டும் சொல்லித் தரவில்லை, இலக்கியத்தையும் சொல்லித் தந்திருக்கிறார். இதனால்தான் கலைஞரின் கடிதங்கள் மதிப்பு வாய்ந்தவையாகவும், பிற எழுத்தாளர்களின் இலக்கிய நூல்களைக் காட்டிலும் மேம்பட்ட கடிதமாகவும் உள்ளன.

கலைஞர் தன்னுடையவற்றை எளிய தமிழில் கேள்வி கேட்டு பதில் சொல்கிற முறையில் எழுதியிருக்கிறார். கவிதை வடிவிலும் எழுதியிருக்கிறார்.

1968 மாநகராட்சித் தேர்தலில் 96 இடங்களில் போட்டியிட்டு 54 இடங்களில் மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்றது. 42 இடங்களில் தோற்றதற்காகக் கட்சிக்காரர்கள் மீது கோபப்படாமல் 31.10.1968இல் எழுதிய கடிதம் இது:

“நாம் முயலைப் போல கொஞ்சம் தூங்கிவிட்டோம். நல்ல வேளை, ஆமை நம்மைத் தாண்டிப்போவதற்குள் விழித்துவிட்டோம். முயலே! முன்புபோல சுறுசுறுப்பாக இரு. துடிப்போடு செயலாற்று.” கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்துவதற்கு இதைவிட சிறந்த வாக்கியங்கள் இருக்க முடியாது. நயமாக எடுத்துச் சொல்வது அதை உரைநடை கவிதை வடிவில் சொல்வது என்பது அவருடைய எழுத்தின் பெருமைகளில் ஒன்று.

‘கலைஞருடைய கடிதங்களைப் படிப்பதற்காகக் காத்திருந்தோம், அதைப் படித்துத்தான் தமிழ் பயின்றோம்’ என்று பலர் சொல்வதைக் கேட்கும்போது இன்றைக்கு இருப்பவர்களுக்கு அது மிகக் கூற்றாக இருக்கலாம். ‘மிகை’ என்று சொல்கிறவர்கள் அவருடைய கடிதங்களைப் படித்துப் பார்க்க வேண்டும்.

‘ஜமீன்தார், ஜாகிந்தார் நம்மிடமில்லை. மிட்டாமிராசுகள் நம்மிடமில்லை. ஆலை அரசர்கள், பணமுதலைகள் நம்மிடமில்லை’ என்று காங்கிரஸ்காரர்கள் அறிக்கை விட்டதற்கு கலைஞர் 31.10.1968இல் தன்னுடைய கடிதத்தில் இப்படித்தான் பதில் சொல்லியிருந்தார்:

‘தவளைகள் எல்லாம் ஒரு மாநாடு போட்டு எங்களிடத்திலே மழைக்காலத்தில் கத்துவோர் யாருமில்லை என்று பேசினால் எப்படி இருக்கும்? பெருச்சாளிகள் எல்லாம் ஒன்றுகூடி, நாங்கள் பிறர் பொருள்களைச் சுரண்டி வாழ்ந்ததே கிடையாது என்று பெருமை பேசினால் எப்படி இருக்கும். வேங்கை வேதாந்தம் பேசிக் கேட்டிருக்கிறாயா? கேட்டிருக்க மாட்டாய். ஆனால் இதோ அரசியலில் அந்த அற்புதம் நிகழ்ந்துள்ளது. கனிவு என்ற தலைப்பில் கரடியார் பேசுகிறார். காட்டில் காண முடியாத விளம்பரத்தை நாட்டில் காண்கிறோம்.’இதைவிட மேம்பட்ட பதிலோ, விளக்கமோ, பகடியோ இருக்க முடியுமா? இதைவிடக் கேவலமாக காங்கிரஸார்களை மட்டம்தட்டி எழுதவும் முடியாது.

கலைஞர் எழுதிய கடிதங்கள், ஏன் மற்றவர்கள் எழுதிய கடிதங்களிலிருந்து வேறுபட்டிருக்கின்றன, இலக்கியத் தகுதி பெற்றிருக்கின்றன, இன்றும் படிக்கப்படுகின்றன என்பதற்கு இந்தக் கடிதம் ஒன்றே போதும்.

தாய் காவியம்

இலக்கிய வடிவங்களில் என்னென்ன விதமான முயற்சிகளை மேற்கொள்ள முடியுமோ அத்தனை விதமான முயற்சிகளையும் மேற்கொண்டவர். சங்கத் தமிழ், தொல்காப்பியப் பூங்கா, தாய் காவியம் எழுதியது அவர் தனது எழுத்து வாழ்க்கையில் மேற்கொண்ட புதிய முயற்சிகள். ஒரு புத்தகத்தை மொழியாக்கம் செய்வது, தழுவலாக எழுதுவது ஓரளவுக்குச் சுலபமான காரியம்தான். ஆனால், ஒரு புத்தகத்தை அப்படியே உரைநடைக் கவிதை வடிவில் மாற்றி எழுதுவது சவாலானது.

மார்க்சிய இலக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக உலகெங்கும் பேசப்படுகின்ற, கொண்டாடப்படுகின்ற மாக்சிம் கார்க்கி எழுதிய (1904–1907) தாய் நாவலை 2004இல் உரைநடைக் கவிதை வடிவில் மாற்றி, ‘தாய் காவியம்’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் “என்ன அழகான தமிழ், சரளமான நடைக்காகவே கலைஞரைப் பாராட்டுகிறேன்” என்று ஜெயகாந்தன் பேசியிருக்கிறார்.

கலைஞர் தன்னுடைய வாழ்க்கையில் எத்தனயோ புத்தகங்களைப் படித்திருப்பார். அவற்றில் அவருக்கு ‘தாய் நாவல்’ முக்கியமானது என்று தோன்றுவதற்கு, அதை உரைநடைக் கவிதை வடிவில் மாற்றி எழுத வேண்டும். காரணமாக இருந்திருக்கும் என்ற கேள்விக்கு “நான் சிறை செல்ல நேரிட்டபோதெல்லாம் மறவாமல் ‘தாய் நாவலை’ எடுத்துச் செல்வேன்” என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார்கள். சங்கப் பாடல்களைப் போல, திருக்குறளைப் போல, சிலப்பதிகாரத்தைப் போல கலைஞருக்கு மிகவும் பிடித்தமான புத்தகங்களில் ஒன்றாக ‘தாய் நாவ’லும் இருந்திருக்கிறது.

“என் நெஞ்சில் எப்போதும் மணம் வீசும் பூ

மாக்சிம் கார்க்கியாய் மனிதநேய மாண்பு

மன்பதைக்குத் தந்திட்ட சிகப்பூ - செம்பூ

அன்னை என்றும் ‘தாய்’ என்றும்

அழைக்கப்படும் அற்புதப் பூ”

என்று தொடக்கத்திலேயே பாவெலின் தாய் நிலோவ்னாவை அறிமுகம் செய்கிறார். ‘சிகப்பூ’ என்று கலைஞர் குறிப்பிடுவது. மார்க்சியவாதிகள் முன்னிருத்துகிற செங்கொடியைத்தான்.

தாய் நாவல் ரஷ்ய, கலாச்சாரப் பண்பாட்டுப் பின்னணியில் எழுதப்பட்டது. அதை மொழிபெயர்த்தால் எளிதாக எழுதிவிடலாம். ஆனால் மறுஉருவாக்கமாக உரைநடை கவிதையில் எழுதும்போது ரஷ்யா தேசத்தின் வாழ்க்கையை, கலாச்சார பண்பாட்டுக் கூறுகளை எழுதும்போது அதை தமிழ் வாசகர்கள் புரிந்து கொள்ளும்படி அணுக்கமாக எழுத வேண்டும் என்பதற்காகத் தமிழ் சார்ந்த பல மேற்கோள்களைப் பயன்படுத்துகிறார்.

“ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்தன் மகனை

சான்றோன் எனக் கேட்ட தாய்”என்ற திருக்குறளையும்,

“காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்

அவன் காணத் தகுந்தது வறுமையும் பூணத்தகுந்தது பொறுமையுமா”என்ற பாரதியின் கவிதை வரிகளையும், பாரதிதாசனின் புகழ்பெற்ற கவிதையான,

“சித்திரச் சோலைகளே

உமைநன்கு திருத்த இந்தப் பாரினிலே – முன்னர்

எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ

உங்கள் வேரினிலே”என்ற கவிதை வரிகளையும் மிகவும் பொருத்தமான இடத்தில் சேர்த்திருக்கிறார். இப்படியான மேற்கொள்கள் தமிழ் வாசகர்கள் பிரதியினின்று விலகிப் போய்விடக் கூடாது என்ற எண்ணத்தில்தான் பயன்படுத்த வேண்டும்.

தொழிற்சாலையிலிருந்து வீட்டுக்குச் செல்கின்ற தொழிலாளர்கள், வீட்டிலிருந்து தொழிற்சாலைக்குச் செல்கிறார்கள் தொழிலாளர்கள் இரு தரப்பினரின் மனநிலையையும் மிகவும் அழகாக‘கரையை விரும்பும் அலை போலும், கடலுக்குத் திரும்பும் அலை போலும்’ என்று எழுதியிருக்கிறார். உவமையைக் கையாள்வதில் கைதேர்ந்தவர்.

“குருதி வெள்ளத்தில் எங்களை

மிதக்க விட்டாலும், எங்கள்

கொள்கையை குலைக்க முடியாது”

என்று நிலோவ்னா ஓர் இடத்தில் சொல்வதாக எழுதியிருக்கிறார். அதே மாதிரி பாவெல் ஓர் இடத்தில் தன் தாயிடம் கூறுவதுபோல எழுதியிருக்கிறார்:

“ஆம் அம்மா…

அந்த வேள்வித் தீயில் நான்

வெந்து கருகிப் போகலாம்

தீ பரவாமல் தடுப்பதும்

தீயோரை ஒழிப்பதுதான் என் குறிக்கோள்

தீரச் செயல் புரிவதல்ல என் திட்டம்

தீமைகள் தெய்வத்தின் பெயரால் வந்தாலும்

தீர்த்துக்கட்டுவதே என் கொள்கை."

இது பாவெலின் கொள்கை மட்டுமல்ல கலைஞரின் கொள்கையும்தான். கலைஞர் தாய் காவியத்தில் சின்னச் சின்ன விஷயங்களைக்கூட விட்டுப்போகாமல் கவனத்துடன் எழுதியிருக்கிறார் என்பதை தேர்ந்த வாசகர்கள் அறிவார்கள். ‘தாய் காவியம்’ கலைஞரின் பெரும் முயற்சிகளில் ஒன்று. காலம் கடந்தும் பேசப்படும் படைப்பு. தன்னுடைய பாணியில் தாய் காவியத்தைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து படிக்க வைத்திருக்கிறார். இதுவும் முக்கியமான சமூகப் பணிதான்.

மொழி வளம்

கலைஞர் இன்று இல்லை. ஆனால் பேசப்படுகிறார். அதற்குக் காரணம் அவர் எழுதிய அடுக்கு மொழி வசனங்களும் வாக்கியங்களும்தான். அண்ணாவுக்குப் பிறகு அடுக்கு மொழியில் வசனங்கள், வாக்கியங்கள் எழுதி புகழ்பெற்ற ஒரே மனிதர் கலைஞர் மட்டும்தான். அவருடைய வளமான அடுக்கு மொழி வசனங்களையும் வாக்கியங்களையும் கொண்டாடியவர்கள் உண்டு. ‘மொழி விளையாட்டு’ என்று கேலி செய்தவர்களும் உண்டு. ஏற்றாலும் நிராகரித்தாலும் அவருடைய அடுக்கு மொழி வசனங்களும் வாக்கியங்களும் இன்றும் பேசுபொருளாக இருக்கிறது.

கலைஞருடைய சிறுகதைகளில், நாவல்களில் எழுதப்பட்டிருக்கும் ‘தாமரையெனும் முகமுடைய மங்கையர்கள்’, ‘அவனது தோள்கள் குன்றாய் வெல்லும் தோற்றமுடையவை’ என்பன போன்ற வாக்கியங்களைக் குறைகூறுபவர்களும் உண்டு. மிகையென்று சொல்பவர்களும் உண்டு. குறிப்பாக நவீன எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் கலைஞருடைய எழுத்துக்கள் ‘இப்படி’, ‘அப்படி’ என்று சொல்வார்கள். கலைஞர் சிறுகதை, நாவல்கள் எழுத்திய காலத்தைக் கருத்தில் கொண்டால் விவரம் புரியும். கலைஞர் தன்னுடைய எழுத்துக்களில் சமஸ்கிருதத்தைக் கலந்து எழுதுவதை முற்றிலுமாகத் தவிர்த்தவர். தன்னுடைய உரைநடையால் மொழியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர். அடுக்கு மொழி வசனம், அடுக்கு மொழி வாக்கியங்கள் என்பதைக் கடந்து அவருடைய உரைநடைத் தமிழ் குறித்து இன்றைய தலைமுறையினர் பேச வேண்டும், சிந்திக்க வேண்டும்.

கலைஞரும் பிற திராவிட இயக்க எழுத்தாளர்களும் எழுதுவதற்கு முன் தமிழ் உரைநடை இலக்கியம் எப்படி இருந்தது, மொழி எப்படி இருந்தது? கலைஞரும் பிற திராவிட இயக்க எழுத்தாளர்களும் எழுதிய பிறகு, தமிழ் உரைநடை இலக்கியம் எப்படி இருந்தது? இலக்கிய மொழி எப்படி இருந்தது என்பதை ஆராய வேண்டும்.

பழைய காலத்தில் தமிழ் சினிமாவின் கதை, வசனம், பாடல் எப்படி இருந்தது, கலைஞர் கதை வசனம் எழுதிய பிறகு தமிழ் சினிமாவின் வசனங்கள் எப்படி இருந்தது மாறியது என்பது ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் அவரால், அவரால் எழுதப்பட்ட மொழியால் ஏற்பட்ட மாற்றம் தெரியும்.

1940இல் வெளிவந்த ‘சகுந்தலை’ என்ற திரைப்படத்தில் வரும் ஒரு வசனம் இது: ‘ஒரு பக்கம் ரிஷிகளின் ஆக்ஞை, இன்னொரு பக்கம் தாயாரின் ஆக்ஞை’. போன்ற வசனங்கள்தான் தமிழ் சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. உயர் வழக்காகவும் கொண்டாடப்பட்டது. 1950இல் வெளிவந்த ‘மருத நாட்டு இளவரசி’ என்ற படத்தில் ‘நீதியின் நிலைக்களமாய், நேர்மையின் உளைக்களமாய் வாழ்ந்த வண்டமிழ் வளநாடே! நீ சூதர்களின் உறைவிடமாய், சூழ்ச்சிகளின் இருப்பிடமாய் ஆனது ஏன்?’ என்று கலைஞர் எழுதியிருப்பார். ‘சகுந்தலை’ படத்தில் வரும் வசனம் சிறந்ததா? ‘மருத நாட்டு இளவரசி’ படத்தில் இடம்பெற்ற வசனம் சிறந்ததா?

1952இல் ‘பராசக்தி’யில்‘சிங்கத் திருநாடே, நீ சிலந்திக் கூடாக மாறியது எப்போது? வந்தாரை வாழ வைக்கும் தமிழகமே! நீ சொந்த நாட்டானையே சுரண்டுவது எத்தனை நாளாக?’ என்று வரும் வசனமும் 1963இல் வெளிவந்த ‘காஞ்சித் தலைவன்’ படத்தில் வரும் ‘மகிமை கொண்ட மண்ணின் எதிரிகளின் கால்கள், மலர்கள் பறிப்பதில்லை வீரர்களின் கைகள்’என்று வரும் வசனமும், 1950இல் வெளிவந்த ‘மந்திரி குமாரி’ படத்தில்,‘சித்திரத்தை அழகுபடுத்தும் நிழல் கோடுகள் போல், உன் கண்ணின் கடைக்கூட்டில், கனி இதழின் ஓரத்தில், கன்னக்குழி சரிவுகளில் ஒளிந்து கொண்டிருக்கும் இருளை நான் விரும்புகிறேன்’என்று வரும் வசனத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் தெரியும் - தமிழ் சினிமாவின் மொழியையே மாற்றி அமைத்தவர் கலைஞர் என்பது. புராண இதிகாசக் கதைகளும் சமஸ்கிருத வார்த்தைகளும் இன்றைய தமிழ் சினிமாவில் இல்லை. அதற்குத் தன் கதையால், தன் வசனத்தால் இதற்கு அடித்தளமிட்டவர் கலைஞர்.

‘மகன் பெற்ற மகன்’ நாடகத்தில் முத்தாய்க்கும் அவளுடைய தந்தை திருச்சங்கும் உரையாடும் காட்சிக்குரிய வசனத்தைப் படிக்கும்போது அவருடைய வாக்கிய அமைப்பைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. ‘படைகளிழந்தனர், பாராளும் உரிமை இழந்தனர். பாளையக்காரர் குடும்பத்தினர் பாவையோடு பழகும் பண்பையும் இழந்தனர்’ என்று எழுதி தனது மொழி வல்லமை காட்டியதோடு, ‘அவன் நினைத்தால் ஊர்வசி, ரம்பை எல்லாம் ஓடி வருவார்கள்’ என்று எழுதி, அதற்குப் பதிலாக, ‘இதிலென்ன ஆச்சரியம்? ஆசிரமத்து முனிவர்களிடமே ஓடிவந்தவர்கள், அரண்மனைக்காரர் அழைத்தால் அட்டியா சொல்லவாப் போகிறார்கள்?’ என்று எழுதியிருப்பார்.

இது போன்ற வசனங்கள்தான் பலரை எரிச்சலடைய வைத்தது. இலக்கியத் தரமில்லை என்று சொல்ல வைத்தது. ‘அலங்கார மொழி’ என்று சொல்ல வைத்தது. ஏன் அப்படிச் சொன்னார்கள் என்றால் அவர்களுடைய மொழியை நிராகரித்தார், அவர்களுடைய கருத்தை நிராகரித்தார், அதுதான் காரணம். கலைஞரைப் போல் மொழி ஆளுமை கொண்ட வேறொரு எழுத்தாளரைப் பார்ப்பது கடினம்.

தொல்காப்பியப் பூங்கா

தமிழின் மிகவும் தொன்மையான இலக்கணத் தொகை நூல் தொல்காப்பியம். அதன் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு. இதற்கு உரை எழுதியவர்களில் முக்கியமானவர்கள் ஆறு பேர். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் மூன்றுக்கும் உரை எழுதியவர் இளம் பூரணர். சேனாவரையாரும், தெய்வச்சிலையாரும், கல்லாடரும் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உரை எழுதியவர்கள். எழுத்து, சொல், பொருளதிகாரத்தில் சில இயல்களுக்கு மட்டுமே உரை எழுதியவர் பேராசிரியர். எல்லாக் காலத்திலும் தொல்காப்பியம் குறித்த பேச்சு, எழுத்து, விவாதமும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் கடந்த எளிய உரை எழுதியவர்கள் என்று புலியூர் தேசிகன் (1961), வெள்ளை வாரணனார் (1983), ச.வே.சுப்ரமணியன் போன்றவர்களைக் குறிக்கலாம். அண்மைக்காலத்தில் தொல்காப்பியத்திற்கு முக்கியமான ஆய்வு நூல்களை எழுதியவர்கள் என்ற வகையில் சோம.சுந்தர பாரதியார், ந.சுப்பு ரெட்டியார், புலவர் குழந்தை, ச.பாலசுந்தரனார் ஆகியோரைக் குறிப்பிடலாம். மேலும் இது தொடர்பான பல நூல்களும் ஆய்வேடுகளும் உள்ளன.

- தொடரும்

எழுத்தாளர் இமையம்