Tamilnadu
”திராவிட மாடல் அரசின் திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும்” : துணை முதலமைச்சர் உதயநிதி வேண்டுகோள்!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (2.7.2025) திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேலூர் மாவட்டம் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் ஜி.வன்னியராஜா அவர்களின் மகள் வ.விஷ்ணுபிரியா – ஹெச்.சுரேஷ்குமார் இணையரின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
இந்த திருமண விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை:-
வேலூர் மாவட்டம் காட்பாடி வடக்கு பகுதியின் செயலாளர் அண்ணன் வன்னியராஜா அவர்களின் அன்பு மகள் விஷ்ணுபிரியா மற்றும் சுரேஷ்குமார் இணையரின் திருமணத்தை உங்களின் முன்னிலையில் இன்றைக்கு நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். எத்தனையோ முறை இந்த காட்பாடிக்கு நான் வருகை தந்திருக்கின்றேன். என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டது இந்த காட்பாடி தொகுதிதான். அந்த விதத்தில் நான் மீண்டும் இங்கு வருகை தந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
அது மட்டுமல்ல, இந்த காட்பாடி தொகுதிதான் நம்முடைய கழகத்தினுடைய பொதுச் செயலாளரை தந்திருக்கின்ற மண், இந்த காட்பாடி மண். அப்படிப்பட்ட பெருமை மிகுந்த இந்த காட்பாடிக்கு வருகை தந்து உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த பெருமையடைகின்றேன்.
நேற்று இரவில் இருந்து சிறப்பான வரவேற்பை அளித்த வேலூர், இராணிப்பேட்டை மாவட்டங்களின் மாவட்ட கழகத்தை, மாநகர கழகத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். அண்ணன் வன்னியராஜாவை பொறுத்தவரைக்கும் 1984 -ல் இருந்து கழகத்திற்காக தொடர்ந்து உழைத்து வருகின்றார். 2003 முதல் 2014 வரை தாராபடவேடு நகர செயலாளர் பொறுப்பில் இருந்து சிறப்பாக கழக பணியும் மக்கள் பணியும் ஆற்றி வருகின்றார். அதன் பிறகு தற்போது வரை பகுதி கழக செயலாளராக கழகத்திற்காக உழைத்து வருகின்றார்.
அண்ணன் கழக பணி ஆற்றுகின்ற அதே நேரத்தில் அவருடைய துணைவியார் அக்கா புஷ்பலதா அவர்கள் வேலூர் மாநகராட்சியின் இந்த பகுதிக்கான மண்டலக்குழு தலைவராக மக்கள் பணியும், கழகப் பணியையும் சிறப்பாக ஆற்றி வருகின்றார். இப்படிப்பட்ட ஒரு கழக குடும்பத்தின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்ற இந்த வாய்ப்பை அளித்ததற்கு நான் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதேபோல, பொதுச்செயலாளர் துரைமுருகன் மாமா அவர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்தாக வேண்டும். இந்த திருமணத்திற்கு நான் வந்திருக்கக் கூடிய முழுகாரணம், முதல் காரணம் நம்முடைய பொதுச்செயலாளர் அவர்கள்தான்.
சட்டமன்றத்தில சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன், பிறகு அமைச்சராக பொறுப்பேற்றேன். அப்பெல்லாம் பொதுச்செயலாளர் அவர்களுக்கு பின்னாடி சீட்தான், 2 வரிசை தள்ளிதான் உட்கார்ந்து இருப்பேன்.
அதன் பிறகு கழகத் தலைவர் அவர்கள் துணை முதலமைச்சர் என்ற பொறுப்பை கொடுத்தபோது எல்லோரும் வாழ்த்தினார்கள். நம்முடைய பொதுச்செயலார் அவர்களும் என்னை வாழ்த்தினார். வாழ்த்தும்போது இனிமே நீ என்னோட பக்கத்து சீட்தானே, வா, வா உன்னை பார்த்துக்கிறேன் என்று சொல்லிதான் வாழ்த்தினார்.
தற்போது கடந்த ஒன்பது மாதமாக சட்டமன்றம் கூடும்போதெல்லாம் அவர் பக்கத்தில் தான் நான் உட்காரவேண்டும். அதில் கடந்த மூன்று மாதமாக இந்த திருமண விழாவிற்காக தேதி வாங்கி, அதை பாலேஅப் செய்து, இதை என்னிடம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது நம்முடைய பொதுச் செயலாளர் அவர்கள்தான்.
எனவே இந்த தேதியை வாங்கி மணமக்களை வாழ்த்துவதற்கான வாய்ப்பை அளித்த நம்முடைய பொதுச்செயலாளர் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்றைக்கு இந்த திருமண விழா கிட்டத்தட்ட ஒரு பொதுக்கூட்டம் மாதிரி நிறையபேர் வந்திருக்கின்றீர்கள். நிறைய மகளிர் வந்திருக்கின்றீர்கள். ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் இருந்தது. இன்றைக்கு இவ்வளவு பெண்கள் வந்திருக்கின்றீர்கள் என்றால் தந்தை பெரியார் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள், நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், இவங்க எல்லாம் கண்ட கனவுதான் காரணம். இதற்கெல்லாம் திட்டம் தீட்டியது நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். அவற்றை எல்லாம் செய்து காட்டி கொண்டிருப்பது நம்முடைய தலைவர் அவர்கள். அதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பெண்கள் படிக்க வேண்டும். பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு திட்டமாக நம்முடைய தலைவர் அவர்கள் செய்து கொண்டிருகின்றார். இந்த திட்டங்களை பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருத்தருக்கும் உள்ளது. அதையெல்லாம் நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
நம்முடைய தலைவர் அவர்கள் நாளை முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை தொடங்கியிருக்கின்றார்.
ஒவ்வொரு பூத்திலயும் இருக்கின்ற 30 சதவீத வாக்காளர்களை நம்முடைய கழகத்தில் இணைக்க வேண்டும் என்ற திட்டத்தை தீட்டியிருக்கின்றார். இதையெல்லாம் செய்து முடிக்க வேண்டுமென்றால் இங்கு வந்திருக்கக்கூடிய நீங்கள் ஒவ்வொருவரும் நம்முடைய அரசினுடைய தூதுவர்களாக செயல்பட்டு அரசினுடைய திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
மணமக்களுக்கு நம்முடைய தலைவர் அவர்கள் சொல்வது போல ஒரே ஒரு வேண்டுகோள்தான். உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, வந்திருக்கக் கூடிய அனைவரின் சார்பாக மணமக்களை மீண்டும் வாழ்த்துகின்றேன்.
இவ்வாறு துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !
-
“ஓரணியில் தமிழ்நாடு” - வீடு வீடாகச் சென்று முதலமைச்சர் பரப்புரை - மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய பொதுமக்கள்!
-
“தடித்த தோலுக்கு ‘மன்னிப்பின்’ மகத்துவம் தெரியுமா?” - பழனிசாமியை வறுத்தெடுத்த முரசொலி கட்டுரை!
-
“இதுதான் உண்மையான சமநீதி - சமூகநீதி” : ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் குறித்து முரசொலி தலையங்கத்தில் புகழாரம்!
-
"இளைஞர் அஜித்குமார் விவகாரத்தில் சாத்தான் வேதம் ஓதும் பழனிசாமி" : ஆர்.எஸ். பாரதி பதிலடி!