Tamilnadu

”காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களை அலைக்கழிக்க கூடாது” : காவலர்களுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலைய மரணத்தை தொடர்ந்து அனைத்து காவல்துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், காவல்துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார். அதன் விவரம் வருமாறு:-

Social Media வில் தற்போது ஒரு தவறான செய்தி பதிவிடப்பட்டுள்ளது எனில் அதுதான் அதிகமாக பொதுமக்கள் மத்தியில் பரவுகிறது. அது போல ஏதும் பதிவிடப்பட்டிருந்தால் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் உண்மை தன்மை குறித்து மீடியாவில் பேட்டியாக கொடுக்கலாம். மேலும், State Fact Team-க்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை கண்டிறிய வேண்டும். அது பொய் செய்தியாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது Legal opinion பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

காவல் நிலையத்துக்கு யாரும் புகார் அளிக்க வந்தால் உடனடியா FIR / CSR கொடுக்க வேண்டும். அதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது. காவல் நிலையத்தில் இதற்காகவே தான் RECEPTIONIST நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இதில் எந்த ஒரு தங்கு தடையும் இருக்கக் கூடாது. மேலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களிடம் பேப்பர் இல்லை பேப்பர் வாங்கிட்டு வா என்றோ, அதிகாரி இல்லை என்று சொல்லி அலைக்கழிக்கவோ திருப்பி அனுப்பவோ கூடாது.

ஏதாவது பாதுகாப்பு அலுவல் என்றால் காவல் நிலையத்திலிருந்து காவலர்களை மொத்தமாக எடுக்கக்கூடாது. தேவை இல்லாமல் அதிகமான காவலர்கள் ஒரே இடத்தில் நியமிக்க கூடாது.

பாதுகாப்பு பணிகள் குறித்து Proper Assessment வேண்டும். அதை பொறுத்து தான் பாதுகாப்பு பணிக்கு காவலர்களை நியமிக்க வேண்டும். எவ்வளவு Bandobust இருந்தாலும், ஸ்டேஷன்ல Minimum Strength இருக்க வேண்டும். அதாவது Light Station என்றால் 5 காவலர்களும், Medium Station என்றால் 10 காவலர்களுக்கு குறையாமலும், Heavy Station என்றால் 15 காவலர்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். Station Empty ஆக இருக்க கூடாது.

சோசியல் மீடியாவில் காவல்துறைக்கோ அரசுக்கு எதிராகவோ, அரசின் திட்டங்களுக்கு எதிராகவோ, தவறான பதிவுகளை யாரும் பதிவு செய்திருப்பின் அப்பதிவின் மீது சரியான சட்ட கருத்துரை பெற்று சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் தங்கள் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் யாரேனும் அபாயகரமான ஆயுதங்கள் வைத்துக்கொண்டோ அல்லது பைக் ஸ்டண்ட் செய்தோ ரீல்ஸ் போன்ற பதிவுகள் செய்யக்கூடாது. அதற்கு அனுமதிக்கவும் கூடாது. அப்படி பதிவு செய்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில்களில் சாமி கும்பிடுவது, திருவிழா நடத்துவது, போன்ற நிகழ்வுகளில் சாதிய ரீதியான பாகுபாடு மற்றும் மோதல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தகுந்த முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.

Drive against Drugs போதை பொருட்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வுகள் நடத்தப்பட வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தகுந்த கவுன்சிலிங் வழங்க வேண்டும்.

முக்கிய பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை நியமித்தலை தவிர்க்க வேண்டும். முக்கிய பாதுகாப்பு பணிகளுக்கு முன்கூட்டியே Mirror தயார் செய்ய வேண்டும். அதில் காவலர்கள், பெண் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படையினர் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

சாலை மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு தகுந்த பயிற்சி கொடுக்க வேண்டும் தேவையில்லாமல் லத்தியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

யாரையேனும் கைது செய்யும்போது பொதுமக்களுக்கு தெரியும் அளவிற்கு செய்யாமலும், அதன் மூலம் ஏதாவது பிரச்சனை ஏற்படும் அளவிற்கு உள்ளதாகவும் இருக்கக் கூடாது. தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து கைது செய்ய வேண்டும். அதனை பிரபலப்படுத்தும் அளவிற்கு இருக்கக் கூடாது. அதன் முலம் ஏதும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமுக விரோதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும். அதிகப்படியான தடுப்புகாவல் சட்டத்தில் வைக்க முயற்சிகளை எடுக்க வேண்டும்.

சட்ட ஒழுங்கு பிரிவில் பணிபுரிவதற்கு தகுந்த துணை காவல் கண்காணிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்து உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் சரியாகப் பணி புரியாத துணை காவல் கண்காணிப்பாளர்களை பணி மாறுதல் செய்ய இருப்பின் அவர்களின் பட்டியல்களையும் தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக திருட்டு குற்றங்களில் கொள்ளை, கூட்டுக் கொள்ளை, ஆதாய கொலை போன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும், அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அத்தகைய குற்றங்கள் நடைபெறாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வழங்கி உள்ளார்.

Also Read: இவ்வாட்சியில் உண்மைகள் பலியாகாது : சிபிஐ விசாரணை - கி.வீரமணி வரவேற்பு!