Tamilnadu

”பள்ளி மாணவர்களுக்கான ’வாட்டர் பெல்’ திட்டம்” : பெற்றோர்கள் வரவேற்பு!

தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. பசியின்றி மாணவர்கள் வகுப்பறையில் பாடங்களை கவனிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ’காலை உணவு திட்டம்’ நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகிறது.

தற்போது மாணவர்கள் சரியாக தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் அவர்களுக்கு நீர்சத்து துறைபாடு ஏற்படுகிறது. இதை போக்கும் வகையில் 'வாட்டர் பெல்' திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் தண்ணீர் குடிக்க 5 நிமிட இடைவெளி அளித்து, பள்ளி நேரங்களில் நினைவூட்டும் வகையில் ’வாட்டர் பெல்” அடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அண்மையில் உத்தரவிட்டது.

நீர்ச்சத்து இழப்பு மாணவர்களின் அறிவாற்றல் செயல்பாடு, கவனம் மற்றும் செயல்திறனை கணிசமாக பாதிக்கும் என்றும், பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஊக்குவிப்பது ஏராளமான நன்மைகளைத் தரும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்டர் பெல் அடித்ததும், வகுப்பறைக்கு உள்ளேயே மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், இதற்காக 5 நிமிடங்கள் வரை ஒதுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வாட்டர் பெல் திட்டம் தமிழ்நாட்டில் இன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.

சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 11 மணிக்கு வாட்டர் பெல் அடிக்கப்பட்டதும் மாணவிகள் தண்ணீர் பருகினர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இன்று இந்த வாட்டர் பெல் திட்டம் அமலுக்கு வந்ததுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள், மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Also Read: “Data-ல் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் திராவிட மாடல்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!