Tamilnadu
”தமிழர்களுக்கு குடியிருப்பு வசதி வேண்டும்” : டெல்லி முதல்வருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
டெல்லியில், மதராசி குடியிருப்பு பகுதி இடிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி தர வலியுறுத்தி, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை, மாநிலங்களவை தி.மு.க குழு தலைவர் டி.ஆர். பாலு, டெல்லி முதலமைச்சரிடம் நேரில் வழங்கினார்.
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஒன்றாம் தேதி, டெல்லியின் ஜங்புரா பகுதியில் உள்ள மதராசி குடியிருப்பு இடிக்கப்பட்டதாகவும், டெல்லி பொருளாதாரத்திற்கு பல ஆண்டுகளாக பங்களிப்பு செய்த 370 தமிழ் குடும்பங்கள், வீடற்றவர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும் மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குடியிருப்புகள் இடிக்கப்பட்டதால், 189 குடும்பங்களுக்கு, நரேலா பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்குமாறும், அங்கு அத்தியாவசிய தேவைகளான மின்சாரம், தெருவிளக்கு, குடிநீர், மருத்துவ வசதி, சாலை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகள் படிப்பை தொடர வசதியாக, அருகே உள்ள பள்ளிகளில் சேர்க்கையை அனுமதிக்கவும், ஆரம்ப சுகாதாரங்கள், நியாய விலைக்கடைகள், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்.
நரேலாவில் 189 குடும்பங்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அடிப்படை வசதிகள் முழுமையாக வழங்கப்படாததால், அங்கு மக்கள் வசிக்க முடியாத நிலையில் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், 150-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வியை தொடருவதற்கான வசதிகளும் ஏற்படுத்தி தரப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். எஞ்சியுள்ள 181 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படாததால், அவர்கள் ஆதரவற்ற நிலையிலேயே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ள 189 குடும்பங்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதுடன், எஞ்சிய 181 குடும்பங்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இடப்பெயர்வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதுடன் மானியத்துடன் கூடிய குறு தொழில்கள் தொடங்க உதவ வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தை டெல்லி நிர்வாகம் மனிதநேயத்துடன் கையாளும் என நம்புவதாகவும், இடம்பெயர்ந்த அனைத்து குடும்பங்களின் கண்ணியமான மறுவாழ்வை உறுதி செய்ய, அனைத்து வகையிலும் உதவ தாம் தயாராக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!