Tamilnadu
விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகையாக ரூ.97.77 கோடி நிதி - அரசாணை வெளியீடு!
கூட்டுறவு ற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகை வழங்குவதற்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு- சுற்றுலா மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் அவர்கள் தகவல்
கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன.
கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட இவ்வரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி வருகின்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, 2025-26ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2024-25 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு முன்எப்போதும் இல்லாத அளவிற்கு, டன் ஒன்றுக்கு ரூ.349/- சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்து, இத்திட்டத்தினை செயல்படுத்த ரூ.297/- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், ஒன்றிய அரசு நிர்ணயம் செய்த கரும்பு விலைக்குமேல் சிறப்பு ஊக்கத்தொகையாக 2020-21 அரவைப் பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.192.50/- எனவும், 2021-22 மற்றும் 2022-23 அரவைப் பருவங்களுக்கு ரூ.195/- எனவும், 2023-24 அரவைப் பருவத்திற்கு ரூ.215/-எனவும் 2024-25 அரவைப் பருவத்திற்கு ரூ.349/- என வழங்கி கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.2,750/-லிருந்து ரூ.3,500/- என உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பு ஊக்கத்தொகையாக 4,79,030 கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.848.16/-கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2024-25 அரவைப் பருவத்திற்கு சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.297/- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரவைப் பருவம் நிறைவு பெற்றபின் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் 6,09,030 கரும்பு விவசாயிகள் ரூபாய் 1,145.12 கோடி சிறப்பு ஊக்கத்தொகை பெற்று பயனடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்கிட ஏதுவாக எட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார்கள். இத்தொகை சம்மந்தப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விரைவில் அனுப்பிவைக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் வரலாற்றில் முதன்முறையாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு கிரயத் தொகையாக சுமார் ரூ.1,945.25 கோடி வழங்கப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடிப் பரப்பினை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்தவும் முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசால் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரும்பு விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, அதிக பரப்பளவில் கரும்பு சாகுபடி மேற்கொண்டு, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கரும்பு விவசாயிகளின் நலனுக்காகவும், சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்காகவும், சிறப்பு ஊக்கத்தொகை, மானியங்கள், கரும்பு கிரயத் தொகையை உரிய காலத்தில் வழங்க நிதி உதவி உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கரும்பு விவசாயிகளின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!