Tamilnadu

”உழைக்கும் மக்களின் கடன் பெறும் உரிமையை பறிக்கும் ரிசர்வ் வங்கி” : இரா.முத்தரசன் கடும் கண்டனம்!

நகைக் கடன் மீதான ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகள் திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தங்க நகைக் கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி கடுமையான நிபந்தனைகளை அறிவித்துள்ளது. இது ஏழை, எளிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை, சிறு, குறு விவசாயிகள் முதல் சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் வரை பெரும்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

அவசரத் தேவைக்கு தங்கள் வசம் உள்ள தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து கடன் பெறுவது பெறும் உதவியாக இருந்து வருகிறது. இப்படி பெறப்படும் கடனுக்கான வட்டித் தொகையை ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தி விட்டு, கடனை அப்படியே புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்து வருகிறது. கையில் பணம் சேரும் போது கடனை அடைத்து நகையை திரும்பப் பெற்று வந்தனர். இந்த வாய்ப்பை ரிசர்வ் வங்கியின் நிபந்தனை பறித்து விட்டது.

கடன் தொகையின் அசல், வட்டி இரண்டையும் வங்கியில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையால், கடன் பெறுவோர், தனியார்களிடம் அதீதமான வட்டிக்கு கடன் வாங்கும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஒரு வார காலக் கடனுக்கு, ஒரு முழு மாத வட்டியை செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இப்போது மேலும் நகைக்கு வழங்கும் கடன் அளவை வெட்டிக் குறைத்துள்ளது.

அடகு வைக்கும் நகை தங்களுக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரம் கேட்பது, நகைகளை 22 காரட் மதிப்பின் அடிப்படையில் தான் கணக்கிடப்படும் என்பது போன்ற புதுப்புது நிபந்தனைகள் விதித்து சாமனிய மக்களை வங்கி எல்லைக்கு வெளியே நிறுத்தும் திசையில் ரிசர்வ் வங்கி செயல்படுவது ஏற்கதக்கதல்ல.

நகைக் கடன்கள் தான், வங்கிகளுக்கு பாதுகாப்பான கடன்களாகும். இதன் மூலம் கடந்த மூன்று வருடங்களில் 23 சதவீதம் வருடாந்திர வளர்ச்சி பதிவு செய்துள்ளது என்பதை ரிசர்வ் வங்கி கருத்தில் கொள்ளவில்லை. பெரும் குழும நிறுவனங்களின் வராக் கடன்களுடன் ஒப்பிடும் போது, நகைக்கடன் நிலுவை ஒன்றுமில்லை என்பதே உண்மையாகும்.

கடந்த பத்தாண்டுகளில் பெரும் குழும நிறுவனங்களுக்கு ரூபாய் 25 லட்சம் கோடியை தள்ளுபடி செய்து ஆதரவு காட்டும் ரிசர்வ் வங்கி, உழைக்கும் மக்களின் கடன் பெறும் உரிமையை பறிக்கும் வகையில் போட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, ரிசர்வ் வங்கியின் தலைவரையும், இயக்குநர் குழுவையும் வலியுறுத்துவதுடன், ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் இதில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து நிபந்தனைகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளை முடக்க முயற்சி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரலை வழிமொழிந்த ராகுல் காந்தி!