Tamilnadu

”தமிழ்நாட்டில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது” : DGP சங்கர் ஜிவால் தகவல்!

தமிழ்நாட்டில் காவல்துறை மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால், 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் கொலை, காயம் மற்றும் கலவரங்கள் உள்ளிட்ட மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ள என தமிழ்நாடு காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

கொலைகளின் நீண்டகால போக்கின் பகுப்பாய்வின் படி 2017-2020 ஆம் ஆண்டில், கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து, 2019 ஆம் ஆண்டில் 1745 வழக்குகளுடன் உச்சத்தை எட்டின. இருப்பினும், 2021 மற்றும் அதற்குப் பிறகு, கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து வருகின்றன, 2024 ஆம் ஆண்டில் மிகக் குறைவாக கொலை வழக்குகள் (1563 வழக்குகள்) பதிவாகியுள்ளன. உண்மையில், கடந்த 12 ஆண்டுகளில் எந்தவொரு ஆண்டையும் விட 2024 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக 161 கொலை வழக்குகள் பதிவாகியிருந்தாலும், இது 2024 ஆம் ஆண்டில் மாத சராசரியுடன் ஒப்பிடும் போது கொலை வழக்குகள் 130 ஆகக் குறைந்துள்ளன, இது மேலும் 2025 ஆம் ஆண்டில் (ஏப்ரல் வரை) மாதத்திற்கு 120 கொலை வழக்குகளாகக் குறைந்துள்ளது.

ரவுடி கொலை வழக்குகள் குறைவு

கடந்த 4 ஆண்டுகளில், காவல்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், கடந்த 6 ஆண்டுகளில் மிகக் குறைந்த கொலை வழக்குகள் பதிவான 2024 ஆம் ஆண்டில், ரவுடி கொலைகளும் குறிப்பிட்ட அளவு குறைந்துள்ளன.

2025-ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் கொலை வழக்குகளின் குறைவு

2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) கொலை வழக்குகள் குறைந்து வரும் போக்கின் தொடர்ச்சியாக, முந்தைய ஆண்டின் (2024) முதல் நான்கு மாதங்களில் 501 கொலைகளுடன் ஒப்பிடும்போது, 483 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

ரவுடிகளின் செயல்பாடுகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

திடீர் தூண்டுதல், குடும்ப தகராறுகள், திருமணத்தை தாண்டிய உறவு போன்றவற்றால் நிகழும் பிற வகையான கொலைகளைத் தடுப்பது கடினம் என்பதால், ரவுடி மற்றும் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் கொலைகளைக் குறைப்பதிலும், பிற வகையான மனித உடலுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதிலும் நல்ல பலனைத் தந்துள்ளன.

1. ரவுடிகளுக்கு எதிரான அதிகபட்ச தண்டனைகள்: நீதிமன்ற விசாரணை முடியும் தருவாயில் உள்ள வழக்குகளில் தண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ள வழக்குகள் அடையாளம் காணப்பட்டு, தண்டனை பெறுவதற்காக வழக்கு விசாரணையை விரைவுபடுத்துவதை கண்காணிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

அ) கடந்த 2024 ஆம் ஆண்டில், 188 வழக்குகள் அடையாளம் காணப்பட்டன. இதன் காரணமாக, 2024 ஆம் ஆண்டில் 242 சரித்திரப் பதிவேட்டு ரவுடிகள் தண்டிக்கப்பட்டனர், இதில் 150 ரவுடிகளுக்கு எதிராக 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட தண்டனை பெறப்பட்டுள்ளது, இது கடந்த 12 ஆண்டுகளில் மிக அதிகமாகும்.

ஆ) 2025 ஆம் ஆண்டில், இதுபோன்று 376 வழக்குகள் நெருக்கமாக மேற்பார்வையிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை (ஏப்ரல், 2025 வரை), சரித்திரப் பதிவேடு ரவுடிகள் சம்பந்தப்பட்ட 52 குறிப்பிடத்தக்க வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன, 2024 ஆம் ஆண்டில் (ஏப்ரல் வரை) 48 சரித்திரப் பதிவேடு ரவுடிகள் சம்பந்தப்பட்ட 26 வழக்குகளில் இதுவும் அடங்கும். நீதிமன்ற விசாரணை வழக்குகளை கண்காணித்தல் மற்றும் தண்டனை பெறுவதில் ஏற்பட்ட இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கொலை வழக்குகள், குறிப்பாக ரவுடி மற்றும் பழிவாங்கும் கொலைகளைக் குறைப்பதில் முக்கிய பங்களித்துள்ளது.

2. திட்டமிட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் (OCIU) நெருக்கமான கண்காணிப்பானது ரவுடி மற்றும் பழிவாங்கும் கொலைகளைக் குறைப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது.

அ) கடந்த 2021 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் பழிக்குப்பழி / ரவுடி கொலைகள் 35, அது 2022 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 29, பின்னர் 2023 ஆம் ஆண்டில் 25 மற்றும் 2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 22 பழிக்குப்பழி / ரவுடி கொலைகள் கொலைகள், 2025 ஆம் ஆண்டில் (ஏப்ரல் வரை) பழிக்குப்பழி / ரவுடி கொலைகள் இது மேலும் 18 கொலைகளாகக் குறைந்துள்ளது. பழிக்குப்பழி / ரவுடி கொலைகளில் இந்த குறைவு முக்கியமாக சரித்திரப் பதிவேடு ரவுடிகளை நெருக்கமாக கண்காணித்ததாலும், OCIU பிரிவால் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கக்கூடிய உளவுத்துறை எச்சரிக்கை தகவல்களை பகிர்ந்து கொண்டதாலும் இந்த குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2021 முதல் 2025 வரையிலான நான்கு ஆண்டு காலத்தில், OCIU பிரிவால் 4,460 உயிருக்கு எதிரான அச்சுறுத்தல் எச்சரிக்கை வெளியிடப்பட்டது இதன் விளைவாக 326 கொலைகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

3. அதிக எண்ணிக்கையிலான (குண்டர்) தடுப்புக்காவல்கள். கடந்த 2024 ஆம் ஆண்டில், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சரித்திரப் பதிவேட்டு ரவுடிகள் (3645) தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். 2021 ஆம் ஆண்டுக்கு முன்பு அதிகபட்சமாக 2019 ஆம் ஆண்டில் 1929 சரித்திரப் பதிவேடு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், 2021 ஆம் ஆண்டில் 2484 சரித்திரப் பதிவேடு ரவுடிகளும், 2022 ஆம் ஆண்டில் 3380, 2023 ஆம் ஆண்டில் 2832 மற்றும் 2024 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 3645 சரித்திரப் பதிவேடு ரவுடிகளும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் (ஏப்ரல், 2025 வரை), 1325 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4. தற்போதைய செயல்பாட்டின் அடிப்படையில் கவனம் செலுத்துதல் மற்றும் பயனுள்ள கண்காணிப்பிற்க்காக சரித்திரப் பதிவேடு ரவுடிகளை மறு வகைப்படுத்திய பிறகு, A+ மற்றும் A பிரிவின் கீழ் உள்ள ரவுடிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது 50% க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. இது ரவுடிகள் மீது கவனம் செலுத்தவும் அவர்களை திறம்பட கண்காணிக்கவும் உதவுகிறது.

5. ஒவ்வொரு தீவிர செயல்பாடுடைய சரித்திரப் பதிவேடு ரவுடிக்கும் காவல் நிலைய சரகத்தில் DARE (Drive Against Rowdy Element) அதிகாரிகளை நியமித்தல். இந்த DARE அதிகாரிகள், ரவுடிகள் தொடர்பான சம்பவங்களைத் தடுக்க, அவர்களின் தற்போதைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணியை மேற்கொள்கின்றனர்.

6. பழிவாங்கும் மற்றும் ரவுடிகள் தொடர்பான கொலைகளைத் தடுக்கவும், சிறைக்குள் அவர்களின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பெறவும், சிறைச்சாலைகளில் ரவுடிகளை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றனர். பல சந்தர்ப்பங்களில், சிறைச்சாலைக்குள் ரவுடிகள் மற்றும் பழிவாங்கும் கொலைகளைச் செய்ய சதித்திட்டம் தீட்டப்படுகிறது.

ரவுடிகள் மற்றும் பிற சமூக விரோத சக்திகளுக்கு எதிரான இந்த முறையான, முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் பழிக்குப்பலி மற்றும் ரவுடி கொலைகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்து நல்ல பலனைத் தந்துள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: "பேரிடர் காலங்களில் எப்போது மின்சாரம் வரும் என SMS அனுப்ப வேண்டும்" - அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு!