Tamilnadu

“உழைப்பாளர் ஒற்றுமை ஓங்கட்டும்! வெல்லட்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

உலகின் பல்வேறு நாடுகளில் மே 1ஆம் நாள் உழைப்பாளர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. ஐரோப்பியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் என பல நாடுகள் இந்நாளை கொண்டாடி வந்தாலும், இந்தியாவை பொறுத்தவரை, இந்நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்படவில்லை.

எனினும், உழைக்கும் மக்களை என்றும் போற்றும், மதிக்கும் தமிழ்நாட்டில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் தமிழ்நாடு அரசால், பொதுவிடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உழைப்பாளர் நாள் குறித்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது X சமூக வலைதளப்பக்கத்தில், “மே 1 - உழைக்கும் மக்கள் தம் உரிமைகளை வென்றெடுத்த பொன்னாள். உலக உழைப்பாளர் தினமான இன்று உழைப்பால் உலகை இயக்கும் அத்தனை தோழர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்றைக்கு உழைப்பாளிகள் சிந்திய ரத்தத்தின் பலனே இன்றைக்கு உழைப்பாளர்களுக்கு கிடைத்துள்ள உரிமைகள்.

உழைப்பாளர் தினத்தன்று ஊதியத்தோடு விடுமுறை - மே தின பூங்கா - தொழிலாளர் நல வாரியம் என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செய்த சாதனைகள் ஏராளம்.

கலைஞர் அவர்கள் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய திராவிட மாடல் அரசும் தொழிலாளர் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்வழி, உழைப்பாளர்களின் உற்றத் தோழனாக நம் திராவிட மாடல் அரசு என்றும் அவர்களுடன் கரம் கோத்து நிற்கும்.

உழைக்கும் மக்களின் உரிமைகளை என்றென்றும் பாதுகாப்போம்! உழைப்பாளர் ஒற்றுமை ஓங்கட்டும்! வெல்லட்டும்!” என தெரிவித்துள்ளார்.

Also Read: “குழந்தை & கொத்தடிமைத் தொழிலாளர் முறைகளை அகற்றிடுவோம்..” - மே தினத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!