Tamilnadu
தொடர்ந்து தவறுகள், "CBI மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்" - உயர்நீதிமன்றம் அதிருப்தி !
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் சிலர் போலியான ஆவணங்களை கொடுத்து கடன் வாங்கி மோசடி செய்தனர். இதனால் வங்கிக்கு 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்த மோசடி தொடர்பாக வங்கியின் மேலாளர் உட்பட 13 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த மதுரை சி.பி.ஐ நீதிமன்றம், 8 பேருக்கு தண்டனை வழங்கியது. 5 பேரை விடுதலை செய்தது.
தண்டனை பெற்றவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் சில கருத்துக்களை தெரிவித்தார். அப்போது: "சி.பி.ஐ மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். சில வழக்குகளில் போலீஸ் விசாரணை வேண்டாம் என சி.பி.ஐ விசாரணைக்கு கோரி மனுதாக்கல் செய்கின்றனர். ஏனென்றால் சி.பி.ஐ எந்த ஒரு நிர்பந்தத்திற்கும் ஆளாகாமல் விசாரணை மேற்கொள்ளும் என பொதுமக்கள் நம்புகின்றனர்."
ஆனால், சி.பி.ஐ விசாரணையில் சில தவறுகள் நடப்பதாக தெரிகிறது. முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டு, சிலரை மட்டும் சி.பி.ஐ வழக்கில் சேர்ப்பதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். மேலும், பண மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் பணத்தை திருப்பி செலுத்தினாலும், அவர்களை சாட்சிகளாக சி.பி.ஐ சேர்த்து விடுகிறது. இதனால் சி.பி.ஐ மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சி.பி.ஐ மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். சி.பி.ஐ விசாரணை அமைப்பானது யாரும் கேள்வி கேட்க முடியாது என நினைக்கிறார்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சி.பி.ஐ தனது நம்பகத்தன்மையை மீண்டும் பெற சில பரிந்துரைகளை நீதிமன்றம் வழங்குகிறது. சி.பி.ஐ வழக்குகளில் குற்றவாளிகளின் பெயரை சேர்ப்பது, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது போன்ற அனைத்தையும் சி.பி.ஐ இயக்குநர் கண்காணிக்க வேண்டும். மேலும், அந்த வழக்குகள் தொடர்பான விசாரணை அதிகாரியையும் கண்காணிக்க வேண்டும். சி.பி.ஐ விசாரணை அதிகாரிகள் தேவையான அறிவியல் பூர்வமான தொழில்நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும்.
இந்த வழக்கில் சி.பி.ஐ சரியாக விசாரிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. எனவே, விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி கூறினார். சி.பி.ஐ தனது விசாரணையில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், மக்கள் நம்பிக்கையை பெறும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!