Tamilnadu
தமிழ்நாடு அரசை பாராட்டிய சென்னை உயர்நீதிமன்றம் : காரணம் என்ன?
மேற்கு தொடர்ச்சி மலைகளின் வனப்பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கருவேல மரங்கள் மற்றும் யூகலிப்டஸ் மரங்களை அகற்ற உத்தரவிடக் கோரி சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வனப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ஏ.சீனிவாசன், ”அன்னிய மரங்களை அகற்றுவது குறித்து தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து, இந்தியாவிலேயே அன்னிய மரங்களை அகற்றும் மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது” என தெரிவித்தார்.
வனப்பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவதில் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பாக எவ்வளவு மரங்கள் அகற்றப்படுகிறது என்பது குறித்து வனத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற உத்தரவுப்படி வனத்தை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
25 மாவட்ட வனப்பகுதிகளின் மண் வளத்தை பாதிக்கும் வகையில் 4038 ஏக்கர் ஆக்கிரமித்துள்ள அன்னிய வகை, உண்ணி செடி வகைகள் இருப்பது கண்டறியப்பட்டு, அதில் 3605 ஏக்கர் பரப்பில் பரவிய இருந்த உண்ணி செடிகள் அகற்றப்பட்டுள்ளது. இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து உண்ணி செடி வகைகளும் வனப்பகுதியில் இருந்து அகற்றப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல் வனப்பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் விதமான சீமை கருவேலம், மஞ்சள் கொடி எனப்படும் சீமை அகத்தி, யூகலிப்டஸ் மரங்கள் மற்றும் உண்ணி செடி இனங்கள் 20,339 ஏக்கர் பரப்பளவில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளாகவும் அதன் விவரங்கள் வனத்துறையின் இணையதளத்தில் பிரத்யோக பக்கங்கள் உருவாக்கப்பட்டு அதில் அந்நிய மரங்களை அகற்றுவதற்கானதரவுகள் பதிவேற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளுக்கு, நீதிபதிகள் பாராட்டு தெரிவித்து வழக்கு விசாரணை வரும் 25ம் தேதி ஒத்தி வைத்துள்ளனர்.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!