Tamilnadu
”RSS-இன் கட்டளைப்படி செயல்படும் பிரதமர் மோடி” : CPM அகில இந்திய மாநாட்டில் பிரகாஷ் காரத் பேச்சு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24- ஆவது அகில இந்திய மாநாடு இன்று மதுரையில் தொடங்கி ஏப்.6 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இம்மாநாட்டை துவக்கிவைத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பண்டைய தமிழ் இலக்கிய மற்றம் கலாச்சார பண்பாடுகளால் செழிப்புற்றிருக்கும், தொழிலாளி வர்க்கம் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் 80 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை உணர்வுபூர்வமாக ஒருங்கிணைக்கும் நகரமாகிய மதுரையில் இந்த காங்கிரசை நாம் நடத்துவது பொருத்தமானதாகும்.
டொனால்டு டிரம்பின் நண்பன் என யார் தன்னைக் கூறிக் கொள்கிறார்?, கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானியின் நெருங்கிய நண்பர் யார்?,ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு முழுமையான விசுவாசத்தோடு இருப்பவர் யார்? இந்த மூன்று கேள்விகளுக்கும் நரேந்திர மோடி மற்றும் பாஜக என்பதே விடையாகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள இந்துத்துவா - கார்ப்பரேட் இணைப்பையே பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அரசும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பாஜக-ஆர்எஸ்எஸ்சும், அதற்கு அடித்தளமாக அமைந்திருக்கிற இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டும் எதிர்க்கப்படுவதோடு, தோற்கடிக்கப்பட வேண்டும். இத்தகைய எளிதானதொரு முடிவுக்கு வருவதிலிருந்து, பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டை தனிமைப்படுத்தி, வலதுசாரி திருப்பத்தை மாற்றியமைக்க எவ்வாறு இந்த கூட்டை எதிர்ப்பது என்பதில் மிக சிக்கலானதொரு கேள்வி எழுகிறது. இந்துத்துவா சக்திகள் இன்று செயல்படுத்திடும் அரசியல் ஆதிக்கம் என்பது தேர்தல் வழிமுறைகளால் மட்டுமே அல்ல என்பதை மார்க்சிஸ்டுகள் என்ற வகையில் நாம் அறிவோம். தத்துவார்த்த, கலாச்சார மற்றும் சமூக தளங்களில் இந்துத்துவா சக்திகள் செலுத்தும் செல்வாக்கின் மூலமே இத்தகைய ஆதிக்கத்தை அவர்களால் செலுத்த முடிந்தது. ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் ஆகியவற்றின் மீதான சர்வாதிகார தாக்குதல்கள் மூலம் செலுத்தப்படும் ஆதிக்கம் ஆகும்.
இந்த மாநாட்டில் நாம் நிறைவேற்றுகிற அரசியல்-நடைமுறை உத்தியானது, பாஜக-ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக நடத்துகிற பன்முகப் போராட்ட இயக்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், நவீன தாராளவாத கொள்கைகளின் தாக்குதல்களுக்கு எதிராகவும் கட்சியும் இடதுசாரிகளும் பல போராட்ட இயக்கங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், இப்போராட்டங்களில் திரட்டப்பட்ட வெகுமக்களிடையே திரிபுவாத மற்றும் பிரிவினைவாத இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான தீவிரமான பிரச்சாரம் செய்யப்பட்டால்தான் அவர்கள் அரசியல்படுத்தப்படுவார்கள். இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தையும், நவீன தாராளவாத கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும் ஒருங்கிணைப்பதே தேவையாகும்.
மோடி அரசு தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில், ஆர்எஸ்எஸ்சின் கட்டளைப்படி இந்துத்துவா நிகழ்ச்சி நிரல், தீவிரமான நவீன தாராளவாத கொள்கைகள் மற்றும் யதேச்சதிகார போக்கை வலுப்படுத்துவது ஆகியனவற்றை முன்னெடுத்துச் செல்கிறது. இத்தகைய செயல்பாட்டில், அது பாசிச பண்புகளை வெளிப்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ்சின் பாசிச நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவது என்பது இஸ்லாமிய சிறுபான்மையினரை தொடர்ந்து குறிவைப்பதை உள்ளடக்கியுள்ளது. இந்துத்துவா அமைப்புகளால் நடத்துகிற வகுப்புவாத வன்முறைகளாலும், பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் அரசு இயந்திரம் இத்தகைய வகுப்புவாத வன்முறைக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும் இருந்து நடத்துகிற தாக்குதல்களுக்கு இவர்கள் ஆளாகிறார்கள். இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிராக தொடர்ச்சியாக தொடுக்கப்படும் வன்முறை மற்றும் மிரட்டல் ஆகியன, நிரந்தரமானதொரு வகுப்புவாத பிரிவினையை உருவாக்குவதற்கும், ‘பான்-இந்துத்துவா’ ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்குமான நடவடிக்கையின் பகுதியேயாகும்.
கூட்டு களவாணி முதலாளித்துவத்திற்கான வழக்குச் சொல்லாக பாஜக அரசு ஆகிவிட்டது. புதிய துறைகளை தனியார்மயமாக்க அது முயல்கிறது. மேலும், பெரும் ஏகபோகங்கள் தங்களது லாபத்தை அதிகரிக்கச் செய்திட புதிய துறைகளை அளிக்கிறது. இதன் விளைவாக, மக்கள் தொகையில் 1 சதவீதத்தினராக உள்ள பெருஞ்செல்வந்தர்கள் நாட்டின் மொத்த சொத்துக்களில் 40 சதவீதத்தை கொண்டுள்ளனர். முன்னெப்போதும் இருந்திராத இத்தகைய அசமத்துவத்தை நாம் பார்க்கிறோம். வேலையில்லாத் திண்டாட்டம் - குறிப்பாக இளைஞர்களிடையே - அதிக அளவில் காணப்படுகிறது. காண்டிராக்ட்மயமாக்கல் மற்றும் தொழில்துறையில் உருவாக்கப்படும் நிகர மதிப்பில் கூலியின் பங்கு ஆகியவற்றின் மூலம் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது அதிகரித்துள்ளது. மோசமாகி வரும் விவசாய நெருக்கடி காரணமாக விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நிலை சீரழிந்து வருகிறது.
மக்களைவையில் பாஜக தனது பெரும்பான்மையை இழந்திருப்பதும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாதிருப்பதும், இந்திய அரசையும், அரசியல் சாசனத்தையும மாற்றியமைப்பதற்கான மோடி அரசின் யதேச்சதிகார முயற்சிகளை தடுத்து நிறுத்திடவில்லை. மக்களவைக்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக அரசியல் சாசன திருத்த மசோதாவைக் கொண்டு வருவது என்பது கூட்டாட்சி கோட்பாடு மற்றும் மாநிலங்களின் உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். நாடாளுமன்றத்தை முடக்குவது, நீதித்துறையை பலவீனப்படுத்துவது மற்றும் தேர்தல் ஆணையத்தின் சுயேட்சையான நிலையில் அரிப்பை ஏற்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் இன்னமும் தொடர்கின்றன.
உபா மற்றும் பிஎம்எல்ஏ போன்ற கொடூரமான சட்டங்கள் எதிர்கட்சித் தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, ஊழல் குற்றச்சாட்டு என்ற பெயரில் இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். யதேச்சதிகார மையமாக்கல் நடவடிக்கைகள் கூட்டாட்சி கொள்கையையும், மாநிலங்களின் உரிமைகளையும் காலில் போட்டு மிதித்து வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் வெளிப்படையான பாகுபாடு காணப்படுகிறது.
இந்தியாவில் சமூக உறவுகளின் அடிப்படை கட்டமைப்பாக சாதிய நடைமுறையை நீடிக்கச் செய்ய உபசாதி அடையாளங்களை பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டணி கையாள்கிறது. சமூக மற்றும் கலாச்சார தளங்களில் மனுநீதி கொள்கைகள் நயவஞ்சமாக ஊடுருவி வருகின்றன. பெண்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளின் உரிமைகள் மீது தாக்குதல்களைத் தொடுக்கும் மனுநீதி-ஆணாதிக்க நடைமுறைக்கு எதிரான போராட்டங்கள், இந்துத்துவா சக்திகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
இருண்ட சக்திகளை பின்னுக்குத் தள்ள அனைத்து இடதுசாரி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும். மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் முற்போக்கு எண்ணங்களுடனான ‘புதிய இந்தியா’வை கட்டமைத்திட நாம் கூட்டாக செயல்படுவோம். மக்கள் ஜனநாயகம் மற்றும் சோசலிசத்தை நோக்கி முன்னேறுவோம்.
இவ்வாறு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!