Tamilnadu

“தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 2,500 நியாய விலைக் கடைகள் புதுப்பிக்கப்படுகின்றன!” : அமைச்சர் பெரியகருப்பன்!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புடன், கடந்த மார்ச் 14ஆம் நாள் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 2) வேளாண்மை - கால்நடை - மீன்வளம் - பால்வளம் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

விவாதம் நடைபெறுவதற்கு முன்னதான, வினா - விடை நேரத்தில் பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், “தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 100-க்கும் குறைவான குடும்ப அட்டைகள் கொண்ட பகுதிக்கு நியாய விலைக் கடைகள் தேவை என்கின்றனர். இந்த கோரிக்கைகள், விதிமுறைகளை தளர்த்தினால்தான் சாத்தியப்படும் என்ற வகையில் அமைந்துள்ளது.

காரணம், 2006ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசாணையின்படி, நியாய விலைக் கடைகள் அமைக்க, நகரப்பகுதிகளில் குறைந்தபட்சம் 800 குடும்ப அட்டைகள், கிராமப்பகுதிகளில் குறைந்தபட்சம் 500 குடும்ப அட்டைகள் மற்றும் மலைப்பகுதிகளில் 400 குடும்ப அட்டைகள் இருக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

பகுதி நேர நியாய விலைக்கடைகள் அமைப்பதற்கு கூட, தாய்க்கடைக்கும் பகுதி நேரக்கடைக்கும் 1.5 கி.மீ இடைவெளி இருக்க வேண்டும், 150 அட்டைகள் குறைந்தபட்சம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, தேவையின் அடிப்படையில், மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு நியாய விலைக் கடைகள் அமைக்கப்படும்.

இவை தவிர்த்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் ஆண்டுதோறும் 2,500 நியாய விலைக் கடைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.

Also Read: தமிழ்நாடு முழுவதும் சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன! : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!