தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புடன், கடந்த மார்ச் 14ஆம் நாள் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 2) வேளாண்மை - கால்நடை - மீன்வளம் - பால்வளம் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
விவாதம் நடைபெறுவதற்கு முன்னதான, வினா - விடை நேரத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் இருக்கிற 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதுப்பிப்பு பணிகள் தேவையின் அடிப்படையில், நடைபெற்று வருகின்றன. இதுவரை 1,300க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனை வளாகத்தில் பழைய கட்டடங்களுக்கு மாற்றாக, ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் ஒன்றிய அமைச்சரை சந்தித்தபோது, 500 துணை சுகாதார நிலையங்களும், 50 ஆரம்ப சுகாதார் நிலையங்களும், 100 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும் தரம் உயர்த்தப்படுவதற்கான அனுமதி கேட்டிருக்கிறோம். விரைவில் இது குறித்த அனுமதி கிடைத்தால், தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்படும்” என தெரிவித்தார்.