Tamilnadu

விதிமுறைகளை பின்பற்றாத அ.தி.மு.க - 234 MLA-க்களுக்கும் கடிதம் எழுதும் அமைச்சர் அன்பில் மகேஸ்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்றப் போது பள்ளிக் கல்வித்துறையை சீரமைத்து மேம்படுத்தும் பணியும் அவர் முன் இருந்த மிகப்பெரிய சவால்களில் ஒன்று.

ஏனென்றால் 2011 முதல் 2021 வரையிலும் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தாமல் இருந்து வந்தது. அதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். அ.தி.மு.க அரசு எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் 515 பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக 2017ஆம் ஆண்டு தரம் உயர்த்தியது.

இன்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட புதுக்கோட்டை பள்ளியையும் விதிமுறைகளை பின்பற்றாமல் தரம் உயர்த்தியது அவர்களின் “படா தோஸ்து அ.தி.மு.க”தான்!

மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பிறகோ அல்லது அதற்கு முன்னதாகவோ மேல்நிலைப் பள்ளிகளுக்கான கட்டமைப்பை அ.தி.மு.க அரசு உருவாக்கவில்லை. அதாவது உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியிருக்கும் பட்சத்தில் உயர்நிலைப் பள்ளிக்கான கட்டமைப்பிலேயே மேல்நிலைப் பள்ளிகளையும் நடத்தி வந்தது அ.தி.மு.க அரசு. இந்த தகவலை சி.ஏ.ஜி அறிக்கைதான் வெளியிட்டது!

அதுமட்டுமல்லாமல் புதிய கல்விக் கொள்கை போன்ற ஒன்றிய அரசின் ஆரியக் கொள்கைத் திணிப்பிற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் மெளனம் காத்து வந்தது அ.தி.மு.க அரசு. இந்நிலையில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக்கினார்.

அதுமுதல் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இயங்கி வந்த பள்ளிக் கல்வித்துறை புத்துயிர் பெற்றது. 2021 முதல் இதுவரையிலும் 500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் பன்னாடுகளில் உள்ள தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளார்கள். மண்டல அளவிலான மாபெரும் பெற்றோர் ஆசிரியர் மாநாடுகள் மற்றும் காமராஜர் ஆட்சிக்கு பிறகு பள்ளிச் சீர் மாநாடுகளும் திராவிட மாடல் அரசில் புது எழுச்சி பெற்றது.

பாரத சாரண சாரணிய இயக்க வைரவிழா-முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணியை நாடே போற்றும் வகையில் நடத்திக்காட்டினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

இவைகள் மட்டுமல்லாமல் தன்முனைப்பாக 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நேரடியாக சென்று துறைசார் ஆய்வுகளை மேற்கொள்ளும் பயணத்தையும் மேற்கொண்டார். அப்பயணத்தின் போது ஆசிரியர்களும், பொதுமக்களும் தெரிவித்த கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றியும் வருகிறது பள்ளிக் கல்வித்துறை. அதிமுக அரசால் நிபந்தனைகள் இல்லாமல் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளிலும் கட்டுமான மேம்பாட்டை தற்போது தி.மு.க மேற்கொண்டு வருகிறது.

இத்துனை முன்னெடுப்புகள் மேற்கொண்டாலும் ஒன்றிய அரசிடம் இருந்து போதுமான நிதியும் கிடைக்காமல் தவித்தது பள்ளிக் கல்வித்துறை. பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கும் நிதியை நிறுத்தியது ஒன்றிய அரசு. புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் எனும் நிபந்தனையை விதித்தது. அதை எதிர்த்து முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி குரல் கொடுத்து வந்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

‘எக்காரணத்தை கொண்டும் கொள்கையை விட்டுத்தர மாட்டேன். மும்மொழிக் கொள்கையை, புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டேன். ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியை நானே தருகிறேன்’ என்று சொல்லி பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை வழங்கினார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

நிலைமை இப்படியிருக்க பாசிச பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆசிரியப் பெருமக்களின் கற்பித்தல் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை 2021 முதல் கட்டியுள்ள பள்ளிக் கட்டடங்களின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.

‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ எனும் திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இத்திட்டத்தின் மூலம் இதுவரையிலும் 3497 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8171 வகுப்பறைகள், 52 ஆய்வகங்கள், 184 யூனிட் கழிப்பறைகள், 752 மீட்டர் சுற்றுச்சுவர்கள், 28 நூலகக் கட்டடங்கள், 5 மாணவர் விடுதிகள், 5 மாணவியர் விடுதிகள் ஆகியவை கட்டப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மேலும் 4412 வகுப்பறைகள், 105 ஆய்வகங்கள், 323 கழிப்பறைகள், 2290 மீட்டர் சுற்றுச்சுவர் ஆகியவை கட்டப்பட்டு வருகிறது. இந்த 2025-26 நிதியாண்டிலும் ரூ.1000 கோடி நிதி பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இவைகள் அல்லாமல் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித் திட்டத்தின் கீழ் 1204 வகுப்பறைகள் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுமான தகவல்களை அனைத்து சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 2021 முதல் இதுவரையிலும் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டடங்களையும், தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்த தகவலையும், வருங்காலத்தில் புதிதாக கட்டப்படவுள்ள பள்ளி கட்டடங்களின் தகவலையும் கடிதம் மூலம் அனைத்து சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்து வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு அவலங்களையும் தோளில் சுமந்து வருகிறது பள்ளிக் கல்வித்துறை. அதை மீட்டெடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தி.மு.க அரசிற்கு உள்ளது. அதை சிறப்போடு செய்து வருகிறார்கள் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

Also Read: “தமிழ்நாட்டின் தாயுமானவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : அமைச்சர் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி!