Tamilnadu
”பேரிடர் முன்னறிவிப்பிலும் இந்தி திணிப்பு” : சு.வெங்கடேசன் MP ஆவேசம்!
ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே இந்தியை திணிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு அதற்கான முன்னெடுப்புகளை வேகமாக எடுத்து வருகிறது. மேலும் ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
தற்போது மும்மொழி கொள்கை மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க பார்க்கிறது. மேலும் மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்றால் கல்விக்கான நிதியை தரமுடியாது என மாநிலங்களை மிரட்டி வருகிறது.
மும்மொழி கொள்கை மூலம் இந்தி திணிப்பை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணிச்சலுடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை தற்போது இந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளது.
இந்த இந்தி திணிப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியைத் திணிக்கிறது என விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொட்ங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியைத் திணிக்கிறது. பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும்." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!