Tamilnadu

”கலைஞர் வழியில் தேசிய அளவில் தேர்ந்த அரசியல்வாதியாக செயல்படுகிறார் மு.க.ஸ்டாலின்” : The Times of India!

மாநில உரிமைகளுக்காக முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் மிகத் தேர்ந்த அரசியல்வாதியாக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒருங்கிணைத்து வருவதாக 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேடு பாராட்டியுள்ளது.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது;-

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் சென்னையில் (22.3.2825) நடக்கும் கூட்டுக்குழு கூட்டம் என்பது, மாநில சுயாட்சியை நிலைநாட்டுவதில் கலைஞர் படைத்த வரலாற்று நிகழ்வை மீண்டும் நினைப்படுத்து வதாக அமைந்துள்ளது.

கலைஞர் எப்படி தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றினாரோ, அரசியல் தலைவர்களை ஒருங்கிணைப்பதில் முன்னோடியாக திகழ்ந்தாரோ, அதே வழியில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பயணிக்கிறார். 1960-களில் இந்திரா காந்தி, ஷேக் அப்துல்லா முதல் என்.டி. ராமாரா ராவ், தேவகவுடா வரை பல்வேறு விவகாரங்களில் கலைஞர் பேச்சுவார்த்தை நடத்தியவர். மாநில சுயாட்சியை கட்டமைப்பதில் கலைஞர் ஒரு முன்னோடி.

அவர் 1969-ல் முதலமைச்சரான போது, ஒன்றிய - மாநில அரசுகள் இடையிலான உறவுகள், அதிகாரப் பகிர்வு, கூட்டாட்சித் தத்துவம் குறித்து ஆராய ராஜமன்னார் குழுவை அமைத்தவர். 1974-ல் ராஜமன்னார் குழு அறிக்கை தமிழ்- நாட்டு சட்டப்பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதன்பிறகு, 8 ஆண்டுகள் கழித்து, தமிழ்நாடு அரசின் அறிக்கையை மேற்கோள்காட்டி அப்போதைய கர்நாடக முதலமைச்சர் ராமகிருஷ்ணா ஹெக்டே தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தை கூட்டினார்.

மண்டல் ஆணைய பரிந்துரையில், கலைஞரின் ஆதரவை அப்போதைய பிரதமர் வி.பி.சிங் நாடியதையும், தேவகவுடா, ஐகே. குஜ்ரால் ஆகியோர் பிரதமர்களாக வருவதில் தேசிய அரசியலில் கலைஞரின் பங்கு அளப்பரியது. கலைஞர் நிகழ்த்திய வரலாற்று நிகழ்வுகளை பல ஆண்டுகளுக்குப்பிறகு தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் நிகழ்த்தி வருகிறார்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களை ஒருங்கிணைத்து, சென்னையில் நடக்கும் கூட்டுக்குழு கூட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் வடமாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்பதுடன், தென்மாநில பிரதிநிதிகள் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிப்பதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜகவின் கொள்கைகளை எதிர்ப்பதிலும் தெளிவான செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை தொடர்ந்து வலிமையுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிநடத்தி வருகிறார்.

இவ்வாறு ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளோடு வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்துள்ளது.

Also Read: “தமிழ்நாட்டின் தாயுமானவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : அமைச்சர் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி!