Tamilnadu

ரூ.200 கோடி முதலீடு - 500 பேருக்கு வேலை : அமெரிக்க நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்காவைச் சேர்ந்த ஈட்டன் குழுமத்தின் துணை நிறுவனமான, ஈட்டன் எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை சோழிங்கநல்லூரில் உயர்தர மின் மேலாண்மை கருவிகள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.

ஈட்டன் எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்

ஈட்டன் குழுமம் ஒரு ஃபார்ச்சூன் 500 பன்னாட்டு நிறுவனமாகும். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இக்குழுமத்தின் துணை நிறுவனமான ஈட்டன் எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (முன்னர் MTL இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்) தரவு மையங்கள், வாகனங்கள், வான்வெளி, தொழில், வணிகம் மற்றும் ஆற்றல் என பல்வேறு துறைகளுக்குத் தேவையான உயர்தர மின் மேலாண்மை கருவிகள் உற்பத்தி, விநியோகம் மற்றும் மின் தீர்வுகள் அளிப்பதில் ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுமுறைப் பயணமாக, 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றபோது, இந்நிறுவனத்தால், சென்னையில் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாடு மற்றும் பொறியியல் மையம் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட ஆறே மாதங்களில், இத்திட்டம் அமைப்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 1 இலட்சம் சதுர அடி பரப்பளவுடன், மேம்பட்ட உற்பத்தித் தளங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வசதிகளுடன் இம்மையம் அமைக்கப்பட உள்ளது.

Also Read: தொகுதி மறுவரையறை - மக்களின் பாதுகாவலர்களாக ஒன்றிணைய வேண்டும் : 6 மாநில முதலமைச்சர்களுக்கு TN CM கடிதம்!