Tamilnadu

சிறுபான்மை மக்கள் மனதில் பெரும்பான்மை இடத்தைப் பிடித்துள்ள திராவிட மாடல் அரசு : துணை முதலமைச்சர் உதயநிதி!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (4.3.2025) சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இஃப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:-

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் ஏற்பாட்டில் நடக்கின்ற இந்த சிறப்புக்குரிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புனித இரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

முதலில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய புனித ரமலான் வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ரமலானுக்கு நாம் வாழ்த்து சொல்வதை பார்த்தால் பல பேருக்கு கோபம் வரும். அதை பற்றியெல்லாம் நமக்கு கவலை இல்லை. ரமலானுக்கு வாழ்த்து சொல்வதால் பலபேருக்கு கோபம் வருகிறது என்றால், இன்னும் நூறு முறை கூட மீண்டும், மீண்டும் நாங்கள் ரமலான் வாழ்த்துகளை சொல்லிக் கொண்டே இருப்போம். 

இன்றைக்கு வஃப் வாரியத்தின் சார்பாக, ரம்ஜான் நோன்புக்குத் தேவையான தொகுப்புகளை இங்கே வழங்கிக் கொண்டிருக்கிறோம். இதற்காக 25-க்கும் அதிகமான தர்காக்கள் அந்தப் பொருட்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறார்கள். அதற்கு, அந்த தர்கா நிர்வாகத்துக்கும், அதன் நிர்வாகிகளாக இருக்கின்ற அத்தனை நல் உள்ளங்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் எங்களுடைய நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவிலேயே இன்றைக்கு சிறுபான்மை மக்கள் உங்களுக்கு சொந்த வீடு போல இருக்கின்ற ஒரு மாநிலம் அப்படியென்றால், அது நம்முடைய தமிழ்நாடு என்று நாம் தைரியமாக சொல்லலாம். சிறுபான்மை மக்களுடைய மனதில், பெரும்பான்மை இடத்தை பிடித்த ஒரு அரசு என்றால், அது நம்முடைய திராவிட மாடல் அரசு தான். அதற்கு உங்களிடம் இருக்கின்ற அந்த மகிழ்ச்சியும், உணர்வும், பாசமுமே சாட்சி.

திராவிட இயக்கத்துக்கும் – இஸ்லாமிய மக்களுக்குமான உறவு இன்று நேற்று தொடங்கிய உறவு கிடையாது. பெரியவர் மறைந்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுடைய காலத்தில் இருந்தே திராவிட இயக்கம் இஸ்லாமிய மக்களுடைய அன்பை பெற்று செயல்பட்டு வருகின்றது. 

குறிப்பாக, கலைஞர் அவர்கள் மேல் பெரியவர் காயிதே மில்லத் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் மரியாதையும், மதிப்பும் இருந்தது. அதே போல, கலைஞர் அவர்களும், காயிதே மில்லத் அவர்களும் உற்ற தோழர்களாக இருந்தார்கள். ஏன் இதை சொல்கிறேன் என்றால், காயிதே மில்லத் அவர்கள் இறுதி காலத்தில் உடல்நலம் சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், பெரியவர் காயிதே மில்லத் அவர்களிடம் உடல்நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கே கலைஞர் அவர்களுடைய கைகளை பற்றிக் கொண்ட பெரியவர் காயிதே மில்லத் அவர்கள், “நீங்கள் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு செய்து கொண்டிருக்கின்ற நன்மைகளுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்று திரு.காயிதே மில்லத் அவர்கள் கலைஞர் அவர்களின் கரங்களை பிடித்துக் கொண்டு சொன்னார். அந்த அளவுக்கு கலைஞர் அவர்கள் இஸ்லாமிய மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்.

இன்றைக்கு கலைஞர் அவர்களுடைய வழியில் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்களும், இஸ்லாமிய பெருமக்களுக்கு அனைத்து வகையிலும் துணை நின்று வருகிறார். நம்முடைய கழக அரசு ஆட்சிக்கு வந்ததுமே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும் என்று சட்டப்பேரவையில் முதன்முதலில் தீர்மானம் நிறைவேற்றியவர் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். குடியுரிமை திருத்தச்சட்டம் மட்டுமல்ல, ஒன்றிய அரசு, சிறுபான்மை மக்களுக்கு எதிராக என்னென்ன செய்யலாம் என்று தொடர்ந்து திட்டமிட்டு ஒவ்வொரு நாளும் ஒரு திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக, முத்தலாக் சட்டம், என்.ஆர்.சி, இப்படி வருஷா வருஷம் ஏதாவது ஒரு சிக்கலை ஏற்படுத்தி, சிறுபான்மை மக்களை நெருக்கடிக்கு ஆளாக்குகின்ற வேலையை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. ஆனால், அதை எல்லாம் இந்தியாவிலேயே கடுமையாக எதிர்க்கின்ற ஒரு இயக்கம், ஒரு மாநிலம் ஒரு அரசு என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம் தான், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தான். 

குறிப்பாக, இன்றைக்கு ஒரு புது பிரச்சினையை புதிதாக கையில் எடுத்து இருக்கிறார்கள். அதுதான் வக்ஃப் வாரிய திருத்த மசோதா என்று ஒரு விஷயத்தை நடைமுறைப்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.அந்த திருத்தம் மட்டும் அமலுக்கு வந்தால், வக்ஃப் வாரிய சொத்துக்கள் வக்ஃப் வாரியங்களிடம் இருந்து அபகரிக்கப்படுகின்ற அபாயத்திற்கு தள்ள முயற்சிக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, வக்ஃப் வாரியங்களுக்கு ஒன்றிய அரசு சொல்கின்ற ஆட்களை தான் நியமனம் செய்யவேண்டும் என்று இந்த மசோதா குறிப்பிடுகின்றது. குறிப்பாக, முஸ்லிம் அல்லாத நபர்களையும், வக்ஃப் வாரிய உறுப்பினர்களாக சேர்க்கக் கூடிய சூழல் உருவாக இருக்கிறது. அதனால் தான் நம்முடைய தலைவர் அவர்கள், இந்த சட்டத்தை துவக்கத்திலிருந்து கடுமையாக எதிர்த்துக் கொண்டு வருகிறார்கள்.

இஸ்லாமிய மக்களுக்கு எந்த அளவுக்கு திட்டங்களை நம்முடைய கழக அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் நான்  நினைவுபடுத்த விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் முதல்முறையாக ஆட்சிக்கு வந்த போது, மிலாது நபிக்கு விடுமுறை தந்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதேபோல, உருது பேசும் முஸ்லிம் மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டதும் கழக ஆட்சியில் தான். 

வக்ஃப் வாரிய சொத்துக்களை பராமரிக்க முதல் முதலில் மானியம் ஒதுக்கியது திராவிட முன்னேற்றக் கழக அரசு. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் – உருது அகாடமியை தொடங்கியது நம்முடைய அரசில் தான். கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் நினைவாக மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கியதும் திராவிட முன்னேற்றக் கழக அரசு. 

காயிதே மில்லத் மகளிர் கல்லூரியை உருவாக்கியதோடு ஆண்கள் கல்லூரிக்கும் இடம் அளித்தது நம்முடைய அரசு. இஸ்லாமிய மக்களுக்காக இவை அனைத்தையும் செய்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

பொதுவாக, சாதிகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கிய ஒரே தலைவர் நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் என்பதை நீங்கள் மறக்கமாட்டீர்கள். இந்தியாவே திரும்பிப் பார்க்கின்ற வகையில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை வழங்கிக் கொடுத்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். இப்படி கலைஞர் அவர்கள் தனது ஆட்சி காலத்தில், சிறுபான்மை மக்களுக்கு செய்த சாதனைகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த 4 ஆண்டு கால ஆட்சியில், நம்முடைய முதலமைச்சர் அவர்களும் எண்ணற்ற திட்டங்களை இஸ்லாமிய மக்களுடைய நலனுக்காக தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு வருகின்றார். கிட்டத்தட்ட 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு வகையான இஸ்லாமிய பள்ளிவாசல்கள் – தர்காக்கள் – கட்டடங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு சார்பில், நாகூர் சந்தனக்கூடு விழாவுக்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். அதற்காக தர்கா நிர்வாகிகள் அத்தனை பேரும் முதலமைச்சர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். அதுமட்டுமல்ல, நாகூர் தர்காவுக்கும் நேரில் வர வேண்டும் என்று எனக்கு அழைப்பு விடுத்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்று நான் கடந்த நவம்பர் மாதம் நாகூர் தர்காவுக்கு சென்று சந்தனக்கூடு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தோம்.

அது மட்டுமல்ல, நம்முடைய அரசு சார்பில், நாகூர் தர்காவை புனரமைக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முக்கியமாக, ஹாஜிக்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி என்று இதுவரை 3 கோடியே 13 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. முஸ்லீம் மாணவிகளுக்கு 12 கோடியே 17 லட்சம் ரூபாய் அளவுக்கு கல்வி உதவித் தொகை என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை இஸ்லாமிய மக்களுக்காக தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்கள்.

ரம்ஜானுக்காக பள்ளிவாசல்களுக்கு ஆண்டு தோறும் பல ஆயிரம் டன் அரிசியை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார்கள். சென்றாண்டு 7 ஆயிரத்து 40 டன் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது அதிகப்படுத்தப்பட்டு 8 ஆயிரம் டன் அளவுக்கு அரிசி வழங்க நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

இதன் மூலமாக, அரசுக்கு 18 கோடியே 42 லட்சம் ரூபாய் அளவுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டாலும், அதைவிட முக்கியம், இஸ்லாமிய மக்களின் மகிழ்ச்சியே எனக்கு முக்கியம் என்று இந்த உத்தரவை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். நேற்று கூட நாகப்பட்டினத்தில் ஒரு முக்கியமான அறிவிப்பை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் வசதிக்காக, சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் ரூபாய் 65 கோடி மதிப்பீட்டில் ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.

இப்படி எப்போதும், உங்களுக்காக சிந்தித்து, உங்களுக்கான திட்டங்களை தருகின்ற அரசு தான் நம்முடைய திராவிட மாடல் அரசு என்பதை நீங்கள் உணர்வீர்கள். இந்த நேரத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்ன ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டினை வழங்கியதற்காக, கலைஞர் அவர்களுக்கு ஒரு நன்றி அறிவிப்பு விழாவை இஸ்லாமிய பெருமக்கள் ஏற்பாடு செய்திருந்தீர்கள். அப்போது அந்த நன்றி அறிவிப்பு விழாவில் பேசிய கலைஞர் அவர்கள், “இங்கே எனக்கு நீங்கள் எல்லாம் நன்றி சொல்லி பேசினீர்கள். எனக்கு நன்றி சொல்லி, என்னை உங்களிடம் இருந்து பிரித்து விடாதீர்கள். நான் உங்களில் ஒருவனாக இருப்பதற்கு விரும்புகின்றேன், நான் எப்போதுமே உங்களைச் சார்ந்தவன்” என்று கலைஞர் அவர்கள் உரிமையோடு சொன்னார்கள்.

அந்த உணர்வோடு தான், நம்முடைய முதலமைச்சர் அவர்களும் இன்றைக்கு இவ்வளவு திட்டங்களை இஸ்லாமிய மக்களுக்காக தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி, நம்முடைய திராவிட மாடல் அரசு என்றைக்கும் இஸ்லாமிய மக்களுக்கு உற்றத்துணையாக இருக்கும். நீங்களும் இந்த அரசுக்கு ஆதரவாக உற்றத்துணையாக இருக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

 நலத்திட்ட உதவிகளை பெற்ற அத்தனைப் பேருக்கும் என்னுடைய அன்பையும், வாழ்த்தையும் தெரிவிப்பதோடு, மீண்டும் உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய ரமலான் வாழ்த்துகளையும் தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்" என்று தெரிவித்தார்.

Also Read: நீட் சட்ட முன்வடிவு முதல்... : ஜெ.பி.நட்டாவிடம் 9 கோரிக்கைகளை முன்வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!