Tamilnadu

அதற்காகவே இந்த ஆட்சி தொடர வேண்டும் : திராவிட மாடல் அரசை பாராட்டிய தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்!

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பங்கேற்று, காலை உணவு திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் வேறு எந்த மாநிலமும் சிந்தித்துப் பார்க்காத திட்டங்கள் என தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் பேசிய தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்,” திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த இரண்டு திட்டங்கள் ஒன்று மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம்; இன்னொன்று, மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். இவை இரண்டையும் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகம் நிறைவேற்றிய பிறகு இன்று இந்தியாவின் எந்த மாநிலமாக இருந்தாலும் தேர்தல் நடப்பதாக இருந்தால் இந்த வாக்குறுதிகளைக் கொடுத்துதான் வெற்றி அடைகிறார்கள். ஆட்சியைப் பிடிக்கிறார்கள்.

ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்தை முன்மொழியும் மாநிலமாக, கூட்டாட்சித் தத்துவத்துக்கு உரக்கக் குரல் எழுப்பும் மாநிலமாக, தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதற்கான மையப் புள்ளி மாநிலமாக இன்று இந்தியா தமிழகத்தைப் பார்க்கிறது.

மாற்றுக்கருத்துக்கு இடம் இருந்தால் மட்டும்தான் அது ஜனநாயகம். அந்த மாற்றுக் கருத்தை வலிமையாக, இன்னும் உரத்த குரலில் எழுப்புகின்ற ஒரே ஒரு மாநிலமாக தமிழகம் மட்டும்தான் இருக்கிறது.

நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து இந்த ஆட்சி செய்திருக்கின்ற அறிவித்திருக்கின்ற பல திட்டங்களை நமது நண்பர்கள் எடுத்துரைத்தார்கள். மகளிர் உரிமைத் தொகையாகட்டும், காலை உணவு திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி , கனவு இல்லம் திட்டம் இப்படி எத்தனை எத்தனையோ திட்டங்கள். அத்தனையும் இதற்கு முந்தைய ஆட்சிகளில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலமும் சிந்தித்துப் பார்க்காத திட்டங்கள். அதற்காகவே இந்த ஆட்சி தொடர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: அதிகரித்த கடன்: நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு?- அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி