Tamilnadu

உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் : மீனவர்களை நேரில் சந்தித்து உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.3.2025) நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் அவர்கள், நாகப்பட்டினம், நம்பியார் நகர் சிறிய மீன்பிடி துறைமுகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

நம்பியார் நகர் சிறிய மீன்பிடி துறைமுகம் 34.30 கோடி ரூபாய் செலவில் படகு இறங்குதளம், படகு அணையும் சுவர், தெற்கு மற்றும் வடக்கு பக்க அலைதடுப்புச் சுவர்கள், முகத்துவாராம் ஆழப்படுத்துதல், தடுப்புச் சுவர் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு 9.3.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், நம்பியார் நகர் சிறிய மீன்பிடித் துறைமுகத்தில் 700 மீட்டர் கடல் அரிமானம் ஏற்பட்டுள்ளதை தடுப்பதற்காக கூடுதலாக 4 நேர்கல் சுவர் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு 8.3.2024 அன்று முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

நம்பியார் நகர் சிறிய மீன்பிடி துறைமுகத்தில் மீனவப் பெருமக்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் சந்தித்து, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது மீனவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் சுனாமி குடியிருப்புகளை சீர்செய்து தர வேண்டும் என்றும், வங்கி கடனுதவிகளை தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அப்போது, முதலமைச்சர் அவர்கள், மீனவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர், நம்பியார் நகரிலுள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி சிறுவர், சிறுமியர்கள் அளித்த உற்சாக வரவேற்பினை முதலமைச்சர் அவர்கள் ஏற்றுக் கொண்டு, அச்சிறுவர், சிறுமியர்களுடன் உரையாடினார்.

Also Read: இந்திய மக்கள்தொகை 150 கோடியாக அதிகரித்துவிட்டது என்பதால் 4 பிரதமரா நியமிக்கமுடியும்- அப்துல்லா MP கேள்வி!