Tamilnadu
“மழையால் நெல் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்...” -அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (27.2.2025) தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
டெல்டா மாவட்டங்களில் அடுத்த ஓரிரு தினங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதால் அம்மாவட்ட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் சேதமடைமடையாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் 2024-25 கொள்முதல் பருவத்தில் இதுவரை 16,94,796 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவைவிட இது 3,10,288 மெட்ரிக் டன் அதிகமாகும். விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து கால தாமதமின்றி கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த ஆண்டு 2,088 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதலில் ஆறாயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் ஏறத்தாழ 200 கொள்முதல் நிலையங்கள் நடப்பாண்டில் கூடுதலாகத் தொடங்கப்பட்டு நெல் கொள்முதல் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், 28.02.2025 மற்றும் 01.03.2025 ஆகிய இரண்டு நாட்களில் டெல்டா மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதால் இந்த மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் தயார் நிலையில் இருந்து மழையால் நெல் பாதிக்கப்படாமல் கொள்முதல் செய்திடவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பாக வைத்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் காணொலி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு மேலாண்மை இயக்குநர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் ஆட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!