Tamilnadu
தலைசிறந்து விளங்கும் தமிழ்நாடு மருத்துவத்துறை கட்டமைப்பு... மகாராஷ்டிரா சுகாதாரத்துறை குழு நேரில் ஆய்வு!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை நேற்று (21.02.2025) சென்னை, தமிழ்நாடு மருத்துவ சேவை கழக (TNMSC) அலுவலகத்தில் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரகாஷ்ஜி அபித்கர் (Shri.Prakashji Abitkar) அவர்கள், சுகாதாரத்துறை இணை அமைச்சர் மேகனா போர்டிகர் (Smt.Meghana Bordikar) மற்றும் அவர்கள் குழுவினர் சந்தித்து தமிழ்நாடு மருத்துவத்துறை கட்டமைப்பு பற்றி கேட்டறிந்தனர்.
பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியது வருமாறு :
"மகாராஷ்டிரா மாநிலத்தின் பொது சுகாதாரத்துறையின் அமைச்சர் அவர்களும், இணை அமைச்சர் அவர்களும், பெரு மதிப்பிற்குரிய பிரகாஷ்ஜி அபித்கர் (Shri.Prakashji Abitkar) அவர்கள், கனா போர்டிகர் (Smt.Meghana Bordikar) ஆகிய இரு அமைச்சர்களும் அம்மாநிலத்தின் சிறப்பு பொது சுகாதாரத் துறையின் அலுவலர்கள் பெருமதிப்பிற்குரிய மகாராஷ்டிரா மாநில முதலமைச்சரின் செயலாளர் ஸ்ரீகர் பர்தேசி (Shri.Shrikar Pardeshi, IAS) இ.ஆ.ப., பொது சுகாதாரத்துறை செயலர்-I நிபுன் விநாயக் (Shri.Nipun Vinayak,IAS) இ.ஆ.ப., பொது சுகாதாரத்துறை செயலர்-II வீரேந்திர சிங் (Shri.Virendra Singh, IAS) இ.ஆ.ப., மருத்துவம் பொருட்கள் கொள்முதல் ஆணையம் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் அவாத் (Shri.Mahesh Awhad, IAS) இ.ஆ.ப., போன்ற பன்னிரெண்டு உயர் அலுவலர்களோடு தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு குறித்து ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
நேற்றைக்கும் இன்றைக்குமாக அவர்கள் பல்வேறு இடங்களில் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு என்பது 2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களையும், 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும் 2 பன்னோக்கு மருத்துவமனைகளையும், 8,713 துணை சுகாதார நிலையங்களையும், 500 நகர்புற நலவாழ்வு மையங்களையும் கொண்டிருக்கிற ஒரு மகத்தான மருத்துவக் கட்டமைப்பு.
இந்த கட்டமைப்புகளின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய சீரிய வழிகாட்டுதலின்படி, கடந்த 4 ஆண்டுகளாக மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும்-48, இதயம் காப்போம், பாதம் பாதுகாப்போம், நடப்போம் நலம்பெறுவோம், சிறுநீரக பாதுகாப்பு திட்டம், மக்களைத்தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்கள் குறித்தான விளக்கங்கள் எல்லாம் அவர்களுக்கு நம்முடைய துறையின் உயர் அலுவலர்கள் விளக்கியிருக்கிறார்கள். 2 அமைச்சர்கள் கொண்ட இந்த குழுவானது, நேற்றைக்கு நந்திவரத்தில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்த்திருக்கிறார்கள். தொடர்ந்து காஞ்சிபுரத்தின் மாவட்ட தலைமை மருத்துவமனையை பார்த்திருக்கிறார்கள். இன்று (பிப்.21) சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் மருத்துவ சேவையை பார்த்திருக்கிறார்கள். அதேபோல் தற்போது தாய் மற்றும் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு மருத்துவமனை எழும்பூரில் அதையும் பார்த்திருக்கிறார்கள்.
TNMSC என சொல்லப்படுகிற தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் இதனுடைய செயல்பாடு குறித்தும் கேட்டறிந்திருக்கிறார்கள். அந்த வகையில் இரு அமைச்சர்கள் தலைமையிலான இந்த குழுவினர் தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பினை கடந்த 2 நாட்களாக சுற்றிப்பார்த்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார அமைப்பு, கொள்முதல், விநியோகம் மற்றும் மருத்துவ சேவையை வலுப்படுத்தும் விதம் போன்ற சிறந்த நடைமுறைகள் மருத்துவ திட்டங்களை பற்றிய தொகுப்புகளை பெற்றும் அவர்களது மாநிலத்தில் நடைமுறை படுத்தவிருக்கிறார்கள்" என்றார்.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!