Tamilnadu

தமிழ்நாட்டின் மருத்துவத்துறை கட்டமைப்பை பாராட்டிய மகாராஷ்டிரா அமைச்சரவை குழு!

மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரகாஷ்ஜி அபித்கர்,இணை அமைச்சர் மேகனா போர்டிகர் அடங்கிய குழுவினர் தமிழ்நாடு மருத்துவத்துறை கட்டமைப்பு பற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தனர்.

பின்னர் இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

மகாராஷ்டிரா மாநிலத்தின் பொது சுகாதாரத்துறையின் அமைச்சர், இணை அமைச்சர் அடங்கிய பன்னிரெண்டு உயர் அலுவலர்கள் கொண்ட குழுவினர், தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, நமது மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பு குறித்து ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் அவர்கள் பல்வேறு இடங்களில் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்தார்கள்.

குறிப்பாக தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு என்பது 2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களையும், 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும் 2 பன்னோக்கு மருத்துவமனைகளையும், 8,713 துணை சுகாதார நிலையங்களையும், 500 நகர்புற நலவாழ்வு மையங்களையும் கொண்டிருக்கிற ஒரு மகத்தான மருத்துவக் கட்டமைப்பு.

இந்த கட்டமைப்புகளின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய சீரிய வழிகாட்டுதலின்படி, கடந்த 4 ஆண்டுகளாக மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும்-48, இதயம் காப்போம், பாதம் பாதுகாப்போம், நடப்போம் நலம்பெறுவோம், சிறுநீரக பாதுகாப்பு திட்டம், மக்களைத்தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்கள் குறித்தான விளக்கங்கள் எல்லாம் அவர்களுக்கு நம்முடைய துறையின் உயர் அலுவலர்கள் விளக்கியிருக்கிறார்கள். 2 அமைச்சர்கள் கொண்ட இந்த குழுவானது, நேற்றைக்கு நந்திவரத்தில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்த்திருக்கிறார்கள். தொடர்ந்து காஞ்சிபுரத்தின் மாவட்ட தலைமை மருத்துவமனையை பார்த்திருக்கிறார்கள்.

சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் மருத்துவ சேவையை பார்த்திருக்கிறார்கள். அதேபோல் தற்போது தாய் மற்றும் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு மருத்துவமனை எழும்பூரில் அதையும் பார்த்திருக்கிறார்கள். TNMSC என சொல்லப்படுகிற தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் இதனுடைய செயல்பாடு குறித்தும் கேட்டறிந்திருக்கிறார்கள்.

அந்த வகையில் இரு அமைச்சர்கள் தலைமையிலான இந்த குழுவினர் தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பினை கடந்த 2 நாட்களாக சுற்றிப்பார்த்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார அமைப்பு, கொள்முதல், விநியோகம் மற்றும் மருத்துவ சேவையை வலுப்படுத்தும் விதம் போன்ற சிறந்த நடைமுறைகள் மருத்துவ திட்டங்களை பற்றிய தொகுப்புகளை பெற்றும் அவர்களது மாநிலத்தில் நடைமுறை படுத்தவிருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

Also Read: UGC-யின் விதிகள் : மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க ஒன்றிய அரசு முயற்சி: தி இந்து தலையங்கம் குற்றச்சாட்டு!