Tamilnadu

தேசியக் கல்விக் கொள்கையால் ஏற்படும் ஆபத்துகள் என்ன? : பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையால் என்ன பாதிப்பு வரும் என கடலூர் மாவட்டம், திருப்பயரில் தமிழ்நாடு பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார்.

இந்த விழாவில் தேசியக் கல்விக் கொள்கையால் ஏற்படும் ஆபத்து குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:-

நாம் கடைபிடிக்கின்ற சமூகநீதிக் கொள்கையை நீர்த்துப் போக செய்வது. பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இப்போது உதவித் தொகை வழங்குகிறோம். இதை ஒன்றிய அரசின் திட்டம் மறுக்கின்றது.

மூன்றாம் வகுப்பில் பொதுத் தேர்வு - ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு - எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்வு என்று வைத்து பிள்ளைகளை வடிகட்டப் பார்க்கிறார்கள்.

ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறையை கொண்டு வரப் போகிறார்கள். அதாவது ஆல் இண்டியா எக்ஸாம் போல நடக்கும்.

உங்கள் மகனோ, மகளோ 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்தில் உடனே போய் சேர முடியாது. இப்போது மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு வைப்பது போல, பொறியியல் படிப்புக்கும், ஆர்ட்ஸ் காலேஜ்க்கும் தேர்வு வைத்துதான் எடுப்பார்கள். இதை அந்தக் கல்லூரி நடத்தாது. தேசிய அளவில் தேர்வு ஏஜென்சிதான் நடத்தும். இதைவிட கொடுமை என்ன தெரியுமா?

10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படிப்பைத் தொடர விரும்பாத மாணவர்கள் அவர்களாகவே வெளியேறலாம் என்று சொல்கிறார்கள். நான் கேட்கிறேன்… இப்படிச் சொல்வதே படிக்காமல் ‘போ’ என்று விரட்டுவதற்குச் சமமா? இல்லையா?

6-ஆம் வகுப்பு முதல் தொழில் கல்வி என்கிற பெயரால் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போகிறார்கள். குலத்தொழில், ஜாதித் தொழில் என்று மனுநீதி சொல்கின்ற அநீதியாக தொடராமல், படித்து முன்னேற நினைப்பவர்களை மீண்டும் அதை நோக்கித் தள்ளப் பார்க்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துத்தான் தேசியக் கல்விக் கொள்கைய ஏற்க மாட்டோம் என்று உறுதியாக சொல்லுவோம்.

இந்தத் திட்டத்தில் கையெழுத்திட்டால் தான் 2000 கோடி ரூபாய் கிடைக்கும் - பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்று சொன்னாலும் நாங்கள் கையெழுத்திட மாட்டோம். இரண்டாயிரம் கோடி ரூபாய் பணத்துக்காக இன்றைக்கு நாங்கள் கையெழுத்திட்டால், என்ன ஆகும்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! 2000 ஆண்டுக்கு பின்னோக்கி நம்முடைய தமிழ்ச் சமுதாயம் போய்விடும். அந்தப் பாவத்தை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒருபோதும் செய்ய மாட்டான். இங்கே வந்திருக்கின்ற பெற்றோரை... குறிப்பாக தாய்மார்களை கேட்கிறேன். உங்கள் குழந்தைகளின் திறமை வளர வேண்டுமா? இல்லை, மூன்றாவது மொழி திணிக்கப்பட்டு ஒவ்வொரு வகுப்பிலும், படிப்பு தடை படவேண்டுமா?

நம்முடைய குழந்தைகள் திறமை வளர வேண்டும் என்று தானே நினைப்பீர்கள்! இன்னும் தெளிவாக சொல்கிறேன். நாம் எந்த மொழிக்கும் எதிரியல்ல. இந்தி மொழியும் நமக்கு எதிரியல்ல. அதை யார் விரும்புகிறார்களோ அவர்கள் இந்தி பிரச்சார சபாவிற்கு சென்று அல்லது K.V. பள்ளியிலோ - இல்லை வேற வகையிலேயோ படிப்பதை தமிழ்நாடு ஒருபோதும் தடுத்ததில்லை. தடுக்கப் போவதுமில்லை. ஆனால், இந்தியை எங்கள் மேல் திணிக்க நினைக்காதீர்கள். திணிக்க நினைத்தால், தமிழர் என்றொரு இனம் உண்டு. தனியே அவருக்கொரு குணம் உண்டு என்பதை தமிழ்நாடு காட்டிவிடும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: ”ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று சொன்னாலும் கையெழுத்திட மாட்டோம்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!