Tamilnadu

வேங்கைவயல்- ”நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க வேண்டாம்” : உயர் நீதிமன்ற மதுரைக் கிளை காட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022 டிசம்பர் மாதம் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து வெள்ளானூர் காவல் நிலையத்தில் ழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு தமிழ்நாடு குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றினார். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டதோடு, ஏராளமான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதைத்தவிர, பல நபர்களின் அலைபேசி எண்கள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு மூன்று பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் திருமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வேங்கைவயல் விவகாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க வேண்டாம்.அறிவியல் பூர்வமான விசாரணை நடத்தப்பட்டு, உரிய ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை அரசுத் தரப்பால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லையெனில் அதற்கான ஆவணங்களை சமர்பிக்கலாம். இனி போராட்டம் நடத்துவது தேவையற்றது” எனக்கூறி வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Also Read: மக்களின் ஆதரவுடன் 7-வது முறையாக தி.மு.கழகம் ஆட்சி அமைக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !