அரசியல்

மக்களின் ஆதரவுடன் 7-வது முறையாக தி.மு.கழகம் ஆட்சி அமைக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

ஏழாவது முறையாகத் தி.மு.கழகம் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மக்களின் ஆதரவுடன் 7-வது முறையாக தி.மு.கழகம் ஆட்சி அமைக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மக்களின் ஆதரவுடன் ஏழாவது முறையாகத் தி.மு.கழகம் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் எப்பாடு பட்டேனும் நிறைவேற்றித் தரும் உறுதியுடன் செயல்படும் உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு மாவட்டங்கள்தோறும் மக்கள் அளித்து வரும் ஆதரவினையும் வரவேற்பினையும் ஒவ்வொரு முறையும் நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்கிறேன்.

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம ஏலத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டபோது, நாடாளுமன்றத்தில் கழகம் அதனை எதிர்த்து முழங்கியதுடன், மதுரை மாவட்ட மக்கள், வைகை - முல்லைப்பெரியாறு பாசனப் பகுதி விவசாயிகள், சூழலியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரின் கருத்துகளையும் அறிந்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, “நான் முதலமைச்சராக இருக்கும்வரை டங்ஸ்டன் சுரங்கம் அமையாது” என்ற உறுதியையும் வழங்கினேன். டங்ஸ்டன் கனிமம் எடுக்கும் திட்டத்தைத் திரும்பப் பெறுவதாக பா.ஜ.க. அரசு பணிந்தபிறகு, மதுரை மக்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற உங்களில் ஒருவனான எனக்கு அவர்கள் அளித்த வரவேற்பையும், அவர்கள் பொழிந்த அன்பையும் கடந்த கடிதத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருந்தேன். மதுரை மக்கள் காட்டிய அன்பின் மகிழ்வுடன் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டத்திற்கு செல்கிறேன் என்பதையும் அதில் தெரிவித்திருந்தேன்.

ஜனவரி 27 அன்று விழுப்புரம் மாவட்டத்தின் எல்லைக்குச் சென்றபோது, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான முனைவர் க. பொன்முடி தலைமையில் கழகத்தினர் திரண்டிருந்தனர். “ஆழ்கடலில் கண்டெடுக்கப்பட்ட நன்முத்து பொன்முடி” என்று நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்ட முனைவர் பொன்முடி, என் அன்பிற்கும் உரியவர் என்பதைவிட, என் மீது அளவற்ற அன்பும் நம்பிக்கையும் உரியவர். விழுப்புரத்தைத் ‘தளபதி மாவட்டம்’ என்றே அவர் எப்போதும் குறிப்பிடுவார். அதற்கேற்ப வரவேற்பு ஏற்பாடுகளும் அமைந்திருந்தன.

மக்களின் ஆதரவுடன் 7-வது முறையாக தி.மு.கழகம் ஆட்சி அமைக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

பொன்முடி அவர்களின் தலைமையில், கழகத்தின் விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் சேகர் அவர்களுடன் கழக நிர்வாகிகளுடனும் உடன்பிறப்புகளுடனும் திரண்டிருந்து மிகப் பெரிய வரவேற்பை உற்சாகத்துடன் வழங்கினார்கள். தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பைச் சிறப்பாக நிறைவேற்றும் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் சேகரும் அவருடன் ஒருங்கிணைந்து செயலாற்றும் கழகத்தின் மூத்த-இளைய நிர்வாகிகளும் இணைந்து உங்களில் ஒருவனான எனக்கு வழங்கிய வரவேற்பைப் பெற்றுக்கொண்டு என்னுடைய அன்பை வழங்கினேன்.

கழக நிர்வாகிகளின் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்குச் செல்வதற்கு முன்பாக ஒலக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று அங்கு வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவர்களின் பணி, சிகிச்சை முறை ஆகியவற்றைக் கேட்டறிந்தும், பதிவேடுகளைப் பார்த்து உறுதி செய்தும் தெரிந்துகொண்டேன். இந்திய ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படும் இலக்குகளில் மருத்துவத் துறையும் ஒன்று. முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபோதெல்லாம் அந்தக் கட்டமைப்பை வலிமைப்படுத்தினார்.

கிராம மக்கள் சிகிச்சை பெற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகரப் பகுதி மக்களுக்கு அரசு மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனை, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி, அதனுடன் இணைந்த மருத்துவமனை, பெரிய நகரங்களில் பன்னோக்கு மருத்துவமனை என நம் உயிர்நிகர் தலைவர் உருவாக்கிய கட்டமைப்பை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை அமைத்தது உங்களில் ஒருவன் தலைமையிலான திராவிட மாடல் அரசு. ஆரம்ப சுகாதார நிலையங்கள் பலவும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒலக்கூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு, கர்ப்பிணிகள் பரிசோதனைப் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப்பின் கவனிப்பு பிரிவு ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டேன். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டிவிட்டு, நோயாளிகளுக்கான சிகிச்சைகளைக் காலதாமதமின்றி வழங்கவேண்டியதன் அவசியத்தையும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்துப் பெட்டகம் ஆகியவை உரிய முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும அறிவுறுத்திவிட்டுப் புறப்பட்டேன்.

மக்களின் ஆதரவுடன் 7-வது முறையாக தி.மு.கழகம் ஆட்சி அமைக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

திண்டிவனம் புறவழிச்சாலை அருகே அமைந்துள்ள மண்டபத்தில் கழகத்தினரைச் சந்தித்து ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்றபோது, வழியெங்கும் ஆண்களும் பெண்களுமாகப் பொதுமக்கள் திரண்டிருந்தனர். குறிப்பாக, இளைய தலைமுறையினர் அதிகளவில் திரண்டு நின்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவர்களைக் கண்டதும், காரை விட்டு இறங்கி, அவர்களின் வரவேற்பைப் பெற்றபடியே ஆய்வுக்கூட்டம் நடந்த மண்டபம் வரை நடந்து சென்றேன். இளைஞர்களும், இளம் பெண்களும், மாணவ - மாணவியரும் ‘அப்பா.. அப்பா..’ என்று அன்பு பொங்க அழைத்தபோது, அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட சொற்களைக் கேட்டு மகிழ்ந்தேன்.

திண்டிவனத்திற்குப் புதிய பேருந்து நிலையம், தலைமை மருத்துவமனை, பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள், வட்டாட்சியர் அலுவலகம், அறிவுசார் மையம், சிப்காட் தொழிற்சாலை, மருத்துவப் பூங்கா உள்ளிட்ட பல திட்டங்களைத் திராவிட மாடல் அரசு வழங்கியுள்ளதற்குத் திண்டிவனம் பகுதி மக்கள் வெளிப்படுத்திய நன்றியாகவே அவர்களின் வரவேற்பு அமைந்தது. இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்கிற மக்களின் எதிர்பார்ப்பை நம் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான் 2026 தேர்தலில் தங்களின் உழைப்பின் மூலமாக நிறைவேற்ற வேண்டும்.

விழுப்புரம் வடக்கு, தெற்கு ஒருங்கிணைந்த மாவட்டக் கழக நிர்வாகிகளின் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று அவர்களின் கருத்துகளை அறிந்துகொண்டு, அவர்களின் செயல்பாடுகளை மினிட் புத்தகங்கள் வாயிலாக ஆய்வு செய்தேன். நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் அதற்கு முந்தைய தேர்தல்களிலும் எந்தெந்தப் பகுதிகளில் கழகத்திற்கு அதிகளவில் வாக்குகள் கிடைத்துள்ளன, எங்கெங்கே இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அவர்களிடம் விளக்கினேன். கழகத்தின் சார்பில் அதிகளவில் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், மக்களுடனான செயல்பாடுகளை மேற்கொண்ட நகர – ஒன்றிய - பேரூர் கழக நிர்வாகிகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், செயல்பாடுகள் சற்று குறைவாக இருந்த நிர்வாகிகளுக்குக் கூடுதல் ஊக்கம் அளிக்கும் வகையில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன்.

ஜனவரி 28 அன்று விழுப்புரத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவும் மணிமண்டபங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வும் இருந்தன. விழுப்புரம் மாவட்ட விழா ஏற்பாடுகளை விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் டாக்டர் கௌதம் சிகாமணி மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். அவருக்கு மாவட்டக் கழகப் பொறுப்பு வழங்கப்பட்டபோது, முதல் பரிசோதனையாக விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதில் மகத்தான வெற்றியைப் பெறுவதற்கான ஒருங்கிணைந்த உழைப்பையும் வியூகத்தையும் முன்னெடுத்தவர் டாக்டர் கௌதம் சிகாமணி. அதன் தொடர்ச்சியாக, தன் தந்தை பொன்முடி போலவே மாவட்டக் கழகத்தை வலிமையோடு வழிநடத்தும் திறன் கொண்டவராகத் திகழ்கிறார்.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில் இருந்து நிகழ்வு நடைபெறும் இடத்திற்குக் காலையில் நடந்து சென்றபோது, சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். கோரிக்கை மனுக்களை அளித்தனர். இங்கும் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ -மாணவியர் தங்களின் அன்பான குரலில், ‘அப்பா..’ என்றழைத்து மகிழ்ந்ததுடன், பலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களின் அன்பைக் கலை வடிவத்தில் வெளிப்படுத்தினர். இந்து – முஸ்லிம் - கிறிஸ்தவ சமயங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் மதவழக்கப்படி மரியாதை அளித்து, இது எல்லாருக்கும் எல்லாம் தரும் அரசு என்பதை வெளிப்படுத்தினர். கழகத் தொண்டர்கள் வழியெங்கும் திரண்டிருந்து வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். அவர்கள்தானே இந்த 75 ஆண்டு கால ஆலமரமான கழகத்தின் ஆணிவேர்கள்!

மக்களின் ஆதரவுடன் 7-வது முறையாக தி.மு.கழகம் ஆட்சி அமைக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

திராவிட இயக்கத்தின் ஆணிவேராக இருப்பது சமூகநீதிக் கொள்கையாகும். திராவிடர் சங்கம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகிய மூத்த இயக்கங்களின் வழியில் நூறாண்டு கால சமூகநீதிப் போராட்டத்தை இன்றளவும் தொடர்ந்து உறுதியாகவும் வலிமையாகவும் நடத்திக் கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். இடஒதுக்கீட்டின் அளவு படிப்படியாக உயர்ந்து, 69 சதவீதம் என்கிற நிலைக்கு வந்ததற்குக் காரணம், நம் உயிர்நிகர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற பிரிவை இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கி, 20% இடஒதுக்கீட்டை அளித்தவரும் நம் உயிர்நிகர் தலைவர்தான். அ.தி.மு.க. ஆட்சியில் இந்த இடஒதுக்கீட்டுக்காகப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அடக்குமுறை ஏவப்பட்டது. ஆனால், தி.மு.க ஆட்சி அமைந்ததும் இடஒதுக்கீடு வழங்கி சமூகநீதி பாதுகாக்கப்பட்டது. சமூகநீதிப் போராட்டத்தில் அ.தி.மு.க. அரசின் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 21 போராளிகளின் நினைவைப் போற்றும் வகையில் திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்பட்டிருக்கும் நினைவரங்கத்தை விழுப்புரத்தில் திறந்துவைத்து, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் 21 சமூகநீதிப் போராளிகளின் சிலைக்கும் மலர் தூவி, அவர்தம் குடும்பத்தாருக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

திராவிட இயக்க முன்னோடியும், தி.மு.கழகம் தேர்தல் களம் காண்பதற்கு முன்பே பேரறிஞர் அண்ணா தலைமையிலான கழகத்தின் ஆதரவுடன் களம் கண்டவரும், உதயசூரியன் சின்னத்தில் முதன்முதலில் வென்றவருமான முன்னாள் அமைச்சர் ஏ.ஜி. எனப்படும் ஏ.கோவிந்தசாமி அவர்களின் நினைவாக அவரது முழு திருவுருவச் சிலையுடன் திராவிட மாடல் அரசு அமைத்துள்ள மணிமண்டபத்தையும் திறந்து வைத்தேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பேரன்புக்குரிய ஏ.ஜி., அவர்களின் பெருமைகளை இன்றைய தலைமுறை அறிந்துகொண்டு, திராவிட இயக்கம் குறித்தும் அதன் தலைவர்கள் குறித்தும் அவதூறு பேசியே அரசியல் பிழைப்பு நடத்துவோரைக் கருத்தாயுதத்தால் வீழ்த்தவும் ஏ.கோவிந்தசாமி அவர்களின் நினைவு மணிமண்டபம் செம்மாந்து நிற்கிறது.

இரு மண்டபங்களையும் திறந்து வைத்தபிறகு, விழுப்புரம் மாவட்டத்திற்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தும் புதிதாக 11 திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் வெளியிட்டு, ஒன்றிய பா.ஜ.க. அரசால் நிதி நெருக்கடி நீடித்தாலும், அதனையும் எதிர்கொண்டு மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்றியே தீருவோம் என்ற உறுதியை வழங்கினேன்.

உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதற்குக் காரணம், மக்களின் நலன் காப்பதில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் செயல்படுவதுதான். அரசியல் கண்ணோட்டத்தில் எதிரணியினர் பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், கழக அரசின் சாதனைகளைப் பொறுக்க முடியாமல் புலம்பிக் கொண்டிருந்தாலும், மக்கள் அவர்களைப் புறக்கணித்து தங்கள் நலன் காக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் பக்கமே நிற்கிறார்கள்.

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் ஆதரவு நமக்குத்தான் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. அந்த நம்பிக்கையை நமக்கு வழங்குகின்ற மக்களுக்கு என்றும் துணை நிற்போம். அவர்களின் ஆதரவுடன் ஏழாவது முறையாகத் தி.மு.கழகம் ஆட்சி அமைக்கும் என்ற வெற்றிக்கு அச்சாரமாக விழாக்கோலம் கண்டது விழுப்புரம் மாவட்டம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளிப்படும் இந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாக பிப்ரவரி 6, 7 தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறேன். அப்போது உடன்பிறப்புகளின் உற்சாக முகங்களை உங்களில் ஒருவனான நான் கண்டு மகிழ்வேன்.

banner

Related Stories

Related Stories