Tamilnadu

பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. எச்சரிக்கை... தேவையான தகவல் அளிக்காவிட்டால் அங்கீகாரம் சஸ்பெண்ட்!

பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அதன் அங்கீகாரம் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி சஸ்பெண்ட் செய்யப்படும் அல்லது திரும்பப் பெறப்படும் என எச்சரிக்கை செய்துள்ளதுடன், 6-வது அல்லது 7-வது சம்பள கமிஷன் நிர்ணயம் செய்த ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-26ம் கல்வியாண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரத்தை பெற அபராதத்துடன் ஜனவரி 31 ந் தேதிக்குள் விண்ணப்பக் கட்டணத்துடனும், பிப்ரவரி 7-ம் தேதிக்குள் 50 ஆயிரம் அபராதம் செலுத்தியும் தனியார் பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் ஆண்டு தோறும் மாணவா் சோ்க்கைக்கான அங்கீகாரத்தை சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரிகள் பெற வேண்டும். இதற்கான வழிகாட்டுதலை முறையாகப் பின்பற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும். கல்லூரிகள் அளிக்கும் விண்ணப்பத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தினால் நியமிக்கப்படுமு் குழு ஆய்வு செய்து, பல்கலைக்கழகத்தின் இணைப்பு அனுமதியை வழங்கும்.

கல்லூரியில் உள்ள வகுப்பறை, ஆய்வகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும், மாணவா்களின் எண்ணிக்கு ஏற்ப ஆசிரியர் நியமன எண்ணிக்கையும் ஆய்வுச் செய்யப்படும்.

2025-26 ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரத்தை பெறுவதற்கும் தொழில்நுட்ப படிப்புகளில் இளங்கலை, முதுகலைப் படிப்பிற்கு அனுமதி பெறுவதற்கான நிபந்தனைகள் குறித்து https:https://www.annauniv.edu/cai/index.php என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். பொறியியல் கல்லூரிகள் அனுமதி பெறுவதற்கு ஜனவரி 31 ந் தேதி வரையில் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். எனினும் அபராதத்துடன் பிப்ரவரி 7 ந் தேதி வரையில் ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரையிலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் https://www.annauniv.edu/cai/index.php என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விபரம் ஏற்கனவே பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு, ஆதார் எண் பயன்படுத்தி ஒருங்கிணைந்த அடையாள எண் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதியதாக சேர்க்கும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் மூலம் இணைக்கப்பட்ட ஒருங்கிணைந்த அடையாள எண் பெற வேண்டும்.

ஒவ்வொரு ஆசிரியர்களின் சுயவிபரங்களையும் அவர்களின் தற்பொழுதைய செல்போன் எண், முகவரியுடன் சுய கையொப்பம் பெற்று அளிக்க வேண்டும். விதிகளின் படி ஆய்வக வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி மற்றும் அனுபவம் பெற்றிருப்பதுடன், பல்கலைக் கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக்குழுவின் விதிகளின் 6 வது அல்லது 7 வது சம்பளக்குழுவின் பரிந்துரையின் படி சம்பளம் கட்டாயம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களின் விபரங்கள் அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார்கார்டு போன்றவற்றை ஆய்வு செய்யப்படும்.

தனியார் பொறியியல் கல்லூரிகள் தேசிய தரவரிசை எண் (NIRF ) எண்ணைப் புதுப்பிக்க வேண்டும். பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் மேலாண்மை கல்லூரிகளின் முந்தைய 3 ஆண்டுகளுக்கான வருடாந்திர செலவு விவரங்கள், பி.இ ,பிடெக், பிஆர்க் படிப்புகளில் கடந்த 4 கல்வி ஆண்டுகளில் படித்த மாணவர்களின் விபரம், M.E/M.Tech/M.B.A/M.CA/M.Arch முதுகலைப் படிப்பில் உள்ள மாணவர்களின் விபரத்தையும் இணைக்க வேண்டும்.

ஆன்லைன் விவரங்களை ஆய்வு செய்து இணைப்பு அங்கீகாரம் வழங்குவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும்.

கல்லூரிகள் ஆன்லைன் மூலம் சமர்பித்த விவரங்களை கல்லூரிகளால் சாப்ட் காப்பி மற்றும் பேப்பரிலும் எடுத்து பராமரிக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகம் கேட்கும் போது கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தில் கல்லூரியின் முதல்வர் மற்றும் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட வேண்டும்.

ஆன்லைன் விவரங்களை கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்காத தனியார் கல்லூரிகளுக்கு 2025-26 கல்வியாண்டிற்கான இணைப்பு வழங்குவதற்கு எந்த சூழ்நிலையிலும் பரிசீலிக்கப்படாது.

முதுகலைப் பாடத்திட்டத்திற்கு Ph.D உடன் ஒரு பேராசிரியர் அல்லது இணைப் பேராசிரியர் அந்தத் துறையின் தகுதி கட்டாயம், தவறினால் அந்த இணைப்பு நீட்டிக்கப்படாது.

தேவையான தகவல்களை அளிக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி சஸ்பெண்ட் செய்யப்படும் அல்லது திரும்பப் பெறப்படும்.

பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விவரங்களும் தங்களுக்குத் தெரிந்தபடி உண்மையானவை என்பதையும், அதில் எந்தப் பகுதியும் தவறானது அல்ல என்பதையும் உறுதிசெய்யும் வகையில், அறக்கட்டளையின், நிறுவனத்தின் தலைவர், செயலாளரால் ஒரு பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் பணியாற்றி வருவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. அதனைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தின் சார்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்கள் நியமனம் மோசடியாக நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 295 பொறியியல் கல்லூரிகளில் 700 ஆசிரியர்கள் போலியாக பல கல்லூரிகளில் பெயர்களை பதிவு செய்ததாக கூறப்பட்டது. அதன் மீது ஆட்சிமன்றக்குழுவில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: கிண்டி கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மையத்தின் மேம்பாட்டிற்கு ரூ. 12 கோடி நிதி : அரசாணை வெளியீடு!