Tamilnadu
“இந்தியாவின் Medical Hub தமிழ்நாடுதான்...” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
சென்னை தரமணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் பல்நோக்கு மருத்துவமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நடிகர் சிவகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். திறப்பு விழாவை முன்னிட்டு மருத்துவமனை சார்பில் 100 இலவச இருதய அறுவை சிகிச்சைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த மருத்துவமனை துவக்க விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “இந்தியாவில் 60-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளை நிறுவி ஐஸ்வர்யா குழுமம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் கூடுதல் சிறப்பாக துவக்க விழாவை முன்னிட்டு 100 இருதய அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மருத்துவத்திற்காக வரத் தொடங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் பார்க்கும் நிலை தற்போது மாறி, வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து மருத்துவம் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களிலேயே மருத்துவத்திற்காக வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு 14 லட்சத்திற்கும் அதிகமானோர் தமிழகத்திற்கு தான் வருகிறார்கள். மருத்துவமனைகளின் தரமும் ,மருத்துவ கட்டமைப்புகளின் தரமும் தமிழ்நாட்டில் உயர்ந்துள்ளது. இந்தியாவிற்கே தமிழ்நாடு மெடிக்கல் ஹப்பாக செயல்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகளுக்கு நிகராக தனியார் மருத்துவமனைகளும் தமிழ்நாட்டில் புரட்சி செய்து கொண்டு வருகிறது. ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ திட்டத்தின் மூலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு உடனடியாக ரூ. 1 லட்சம் காப்பீடாக வழங்கப்பட்டு, இலவச மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல லட்சக்கணக்கான உயிர்கள் தமிழ்நாடு முழுவதும் காப்பாற்றப்பட்டு வருகிறது.
248 அரசு மருத்துவமனைகளிலும், 473 தனியார் மருத்துவமனைகளிலும் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் ஏறத்தாழ 3 லட்சம் உயிர்கள் தமிழ்நாட்டில் காப்பாற்றப்பட்டுள்ளது.
மூளைச்சாவடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக தருபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை செலுத்தப்படும் எனும் திட்டத்தை அறிவித்ததும் பிற மாநிலங்களிலிருந்தும் இந்த திட்டத்தை குறித்து விசாரித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவமனைகள் ஒருங்கிணைந்து உயிர் காக்கும் சாதனையை படைத்து வருகிறது.” என்றார்.
Also Read
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!