Tamilnadu

“கோமியம் குடித்தால் காய்ச்சல் நீங்கும்” - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேச்சால் வெடித்த சர்ச்சை!

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சென்னை மேற்கு மாம்பலத்தில் மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது இந்த விழாவில் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி பேசுகையில், "அப்பாவுக்கு ஜுரம் இருந்தபோது மருத்துவரை கூப்பிடலாம் என்று சொன்னார். அப்போது வந்த ஒரு சந்நியாசி மாட்டு கோமியத்தை குடிக்க சொன்னார். உடனே மாட்டின் கோமியத்தை குடித்தார். குடித்த 15 நிமிடங்களில் ஜுரம் போய்விட்டது. மாட்டு கோமியதம் பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு பிரச்னைகளை எதிர்க்க கோமியம் சிறந்த மருந்து" என்றார்.

ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது. தற்போது நவீன மருத்துவ உலகில், இதுபோன்ற மூடநம்பிக்கைகளை ஒரு ஐஐடி இயக்குநர் பொதுவெளியில் கூறியிருப்பது கண்டனங்களை எழுப்பி வருகிறது. மேலும் இவரது பேச்சுக்கு தமிழ்நாடு மாணவர் கழகத்தினர், அரசியல் தலைவர்கள், இணையவாசிகள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எந்த அறிவியலும் மாட்டு கோமியத்தை குடிக்க சொன்னதில்லை. அறிவியலுக்கு எதிரான, அடிப்படை ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தை ஐஐடி இயக்குநர் கூறியிருப்பதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read: சென்னை மக்கள் கவனத்திற்கு... குடியரசு தின விழாவை முன்னிட்டு 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்!