Tamilnadu

பொங்கலன்று கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேர்வு - ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் !

ஆண்டுதோறும் தை 1-ல் தமிழ்நாட்டில் பொங்கல் விழா அனுசரிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் மட்டுமின்றி, உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் கொண்டாடும் இந்த பண்டிகையை ஒவ்வொரு முறையும் ஒன்றிய பாஜக அரசு குறிவைக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் சரியாக பொங்கலன்று ஒன்றிய அரசின் முக்கிய தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருவதையடுத்து அந்த தேதி மாற்றியமைக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் ஒன்றிய அரசின் UGC-NET தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கும் தமிழ்நாடு முழுவதுமின்றி திமுக, சி.பி.எம்., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் இந்த போக்குக்கு தற்போது சி.பி.எம். எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன பதிவு வருமாறு :

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்கு திருவிழா கால விடுமுறையை கொண்டாட முடியாத உளவியல் தாக்குதலையும், தமிழ் பண்பாட்டின் மீதான ஒவ்வாமையையும் ஒருசேர வெளிப்படுத்தும் செயல். எனவே இந்த தேர்வுகள் அனைத்தையும் மறு தேதிக்கு மாற்றுக.

பொங்கல் விடுமுறையில் கேந்திரிய வித்யாலயா தேர்வுகள் வேறு தேதிகளுக்கு மாற்றுமாறு கடிதம் :

சென்னை, மதுரை, திருச்சி பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஜனவரி 13, 16, 17, 18 தேதிகளில் 6 ஆம் முதல் 11 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் அறுவடைத் திருநாள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் பண்பாட்டுடன் இணைந்தது. தமிழ்நாடு அரசு ஜனவரி 14 முதல் 18 வரை விடுமுறை அறிவித்துள்ளது.

கேந்திரிய வித்யாலயா குழந்தைகள் மட்டும் பொங்கல் விடுமுறையின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் போய் விடக் கூடாது. இது மாணவர்களை உளவியல் ரீதியாக பாதிக்க கூடும். ஆகவே தேர்வுத் தேதிகளை மாற்றி பொங்கல் விடுமுறைக்கு பின்னர் நடத்துமாறு வலியுறுத்தி கேந்திரிய வித்யாலயா மண்டல துணை ஆணையாளர் டி.மணிவண்ணன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

Also Read: ”முற்றிலும் முரணான தகவலை ஒன்றிய அமைச்சர் வெளியிடலாமா?” : அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கண்டனம்!