Tamilnadu
”ஈராயிரம் ஆண்டுகளாக திருத்தப்படாத ஒரே நூல் திருக்குறள்” : கவிப்பேரரசு வைரமுத்து பெருமிதம்!
கடல் அலைகள் தாலாட்டும் குமரிக்கடல் நடுவே அய்யன் திருவள்ளுவருக்கு 2000-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் நாள் 133 அடியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சிலை அமைத்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி வரும் டிசம்பர் 30-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசின் சார்பில் பெருவிழா கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12.11.2024 அன்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை
வெள்ளி விழாவையொட்டி ரூ.37 கோடி செலவில் அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னிலை உரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, ”தமிழுக்கு அதிகாரம் தந்தவர் வள்ளுவ ஆசான். தமிழ்நாட்டிற்கு அதிகாரம் தந்தவர் எங்கள் தளபதி மு.க.ஸ்டாலின். தமிழின் அதிகாரமும், தமிழர்களின் அதிகாரமும் இன்று ஒன்றுகூடுகிற சங்கமத்தை பார்க்கிறேன். கண்ணுக்கு இனிமையான திருவிழா இது.
ஒவ்வொரு நாட்டிற்கும் அடையாளம் உண்டு. குடும்பங்களுக்கு அடையாளம் உண்டு. மனிதனுக்கு அடையாளம் உண்டு. கட்சிக்கு அடையாளம் உண்டு. தமிழ்நாட்டிற்கு சில அடையாளங்கள் உண்டு. தமிழர்களின் மொழி அடையாளம் தமிழ். தமிழர்களின் அறிவு அடையாளம் என்று சொன்னால் அது திருக்குறள். தமிழர்களின் ஞான அடையாளம் திருக்குறள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டு 75 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த 75 ஆண்டுகளில் 101 முறை அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. ஆனால், எழுதப்பட்டு ஈராயிரம் ஆண்டுகளுக்கு பிறகும்கூட திருக்குறள், ஒரு திருக்குறளை மாற்றவில்லை, ஒரு சீர், அசை, எழுத்தை மாற்றவில்லை. ஈராயிரம் ஆண்டுகளாக திருத்தப்படாத ஒரே நூல் திருக்குறள்தான்.
அரசன், மதம், அரசாங்கம் என எந்த ஆதரவும் இன்றி காலத்தால் மிதந்து மிதந்து தன் ஞானத்தால் கரையேறிய நூல், தமிழன் எழுதிய திருக்குறள் என்பதற்காக நாம் பெருமைப்படலாம். எல்லாவற்றுக்கும் அடிப்படை அறம்தான்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!