
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது, குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மாநிலங்களை குறிவைத்து நிதி உள்ளிட்டவைகளை கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது. இதற்கு பாஜகவுக்கு கடும் கண்டனங்கள் எழும் நிலையிலும், தனது போக்கை ஒன்றிய பாஜக அரசு மாற்றிக்கொள்ளவில்லை.
அதோடு ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று வேண்டும் என்றே ஒன்றிய அரசின் தேர்வுகளை பாஜக வைத்து வருகிறது. இதற்கு கண்டனங்களும் கோரிக்கைகளும் வலுத்த பிறகே தேர்வு தேதியை மாற்றி வைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இதனை வாடிக்கையாக வைத்து வரும் ஒன்றிய பாஜக, இந்த ஆண்டும் இதனை அறிவித்துள்ளது.

அப்படிதான் இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம் (ICAI) ஜனவரி மாதம் CA இண்டர்மீடியட் மற்றும் இறுதித் தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டிருந்தது. இதில் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இவை தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கல், திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் திருநாள் ஆகிய தேதிகளில் வந்ததால் மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களிடம் இருந்து எதிர்ப்புகளும் அதிருப்தியும் எழுந்தன.
இதையடுத்து பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு அந்த தேர்வு ஜன.19-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கான காரணமாக, "மகாராஷ்டிராவில் மாநகராட்சித் தேர்தல் நடப்பதால் தேர்வு மாற்றப்படுகிறது" என்று விளக்கம் அளித்துள்ளது. எப்படியிருந்தாலும் தேர்வு தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது முடிந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான (VSSC) தேர்வுகள் பொங்கல் திருநாளான ஜன;15 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனங்களும், தேர்வு தேதியை மாற்றி வைக்கக் கோரியும் கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், மற்றொரு அதிர்ச்சியையும் ஒன்றிய பாஜக வழங்கியுள்ளது.
அதாவது யூனியன் வங்கி (Union Bank of India) தனது அனைத்து மண்டல மற்றும் பிராந்திய மேலாளர்களுக்கான வணிக ஆய்வுக் கூட்டத்தை வரும் ஜன.16 மற்றும் 17 (2026) ஆகிய தேதிகளில் லக்னோவில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அதிகாரிகள் ஜனவரி 15-ஆம் தேதி மதியமே லக்னோ வந்தடைய வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இப்படியாக பொங்கல் அன்று பொங்கல் வைக்காமல், மாணவர்களுக்கு தேர்வும், அதிகாரிகளுக்கு கூட்டமும் வைக்க வேண்டுமென்றே பாஜக திட்டமிட்டு தமிழ்நாட்டு மக்களை மனதளவில் பாதிக்கப்பட வைக்கிறது. மாணவர்கள் தேர்வு எழுதும்போது, சிலருக்கு பொங்கல் அன்று வீட்டில் இல்லையே என்றே ஏக்கமும் இருக்கும், அதிகாரிகளுக்கு, நல்ல நாள் அதுவுமா தங்கள் குடும்பத்தோடு இருக்க முடியவிலையே என்ற வேதனையும் இருக்கும்.
ஒன்றிய பாஜக அரசின் இந்த செயலுக்கு தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.








