Tamilnadu
தந்தை பெரியார் மறைந்த 51 ஆண்டுகளில் நாம் சந்தித்த தடைகளும் - வெற்றி முத்திரைகளும் - கி.வீரமணி அறிக்கை!
தந்தை பெரியாரின் இறுதிப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை. நெஞ்சில் தைத்த அந்த முள்ளை அகற்றினார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தந்தை பெரியார் பணியைத் தொடர சூளுரைப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
நமது அறிவு ஆசான் உடலால் மறைந்து 51 ஆண்டுகள்!
ஆம், அய்ம்பதாண்டுகள் நிறைவு பெற்றன!!
தந்தை பெரியாருக்குப் பின் அன்னை மணியம்மையாரின் சிறப்புமிக்க தலைமை!
ஒப்பாரும், மிக்காரும் இல்லாத அந்த ஒரே தலைவர் இடத்தை யாராலும் நிரப்பப்பட முடியாது என்பது மறுக்க முடியாத உண்மையென்றாலும், அவரது Legacy - தடமும், தாக்கமும், அவரை 95 ஆண்டுகாலம் வாழ வைத்த அன்னையார் அவர்களும், கட்டுக்கோப்பான முறையில் இயக்கத்தை அவர் நடத்திச் சென்ற முறையும், அவர் வடிவமைத்துத் தந்துள்ள அறிவாயுதங்களும், பேராயுதங்களும் என்றும் நமக்குள்ள கலங்கரை வெளிச்சங்கள் என்பதால், சபலமில்லா அந்த ஈரோட்டுப் பாதையில் நாம் நடக்கும்போது, அச்சமில்லை; எதிர்ப்புகள் எங்கிருந்து வந்தாலும், அவற்றை எதிர்கொள்ளும் துணிவும், கொள்கைத் தெளிவும், கருஞ்சட்டைப் பட்டாளத்தின் கடமை உணர்வும் என்றும், எப்போதும் நம்மிடம் உள்ள அசையா ‘‘சொத்துக்கள்!''
நேர்மை உள்ளவர்கள் எக்கட்சி, எவ்வியக்கத்தவராக இருப்பினும், நம்மை உளப்பூர்வமாக வரவேற்று, ஊக்கப்படுத்தத் தரும் ஆதரவும், அரவணைப்பும் நமது அஞ்சாமைக்குக் காரணமான அரண்கள்!
எனவே, அவர்களுக்கு எமது தொடர் உழைப்பினால் நன்றி செலுத்துவோம். கொள்கைக் குழப்பம் நமக்கு ஒருபோதும் ஏற்பட வாய்ப்பே இருந்ததில்லை. ஈரோட்டுப் பாதை இணையற்ற பாதை!
=> பாதை - ஈரோட்டுப் பாதை - இணையற்ற பாதை!
இன்னல்கள் வரினும் இன்முகத்தோடு ஏற்கச் செய்யும் பக்குவமுள்ள தொண்டர்களான தோழர்களோடு பயணம் – நம்முடன் ஒருங்கிணைந்து களமாடும் கடமையாற்ற என்றும் ஆயத்தமாக உள்ள பாசறை வீரர்கள் அவர்கள்.
நம் அய்யா தந்த அறிவாயுத ஏடுகள் என்பவை நமது கொள்கையை ‘முரசொலி'க்கச் செய்யும் சமூக ‘விடுதலை'க் குரலின் ‘உண்மை' முழக்கங்கள்!
‘பெரியார் பிஞ்சு'களும்கூட சுவைத்து கற்கும் வாய்ப்பகங்கள் - ‘ரெடிமேட்’ - ஆயத்தங்களின் அணிவகுப்புகளாக நம்மை அழைத்துச் செல்கின்றன!
நம் அறிவாசான் தந்தை பெரியார் உடலால் மறைந்த நிலையில், அன்று மகிழ்ந்து கொண்டாடிய மனிதநேயமற்ற மமதை ஆரியம் குதூகலித்தது!
‘இனி இந்த இயக்கத்தின் கதை முடிந்தது - எல்லாம் நமது ஏகபோக ராஜ்ஜியம்' என்று போட்ட கணக்கு தப்புக் கணக்கு என்று இந்த அரை நூற்றாண்டு வரலாறு நிருபித்துக் காட்டியுள்ளது.
நமது கொள்கை எதிரிகளும், கோணல் மதியினரும் குவலயமே விளங்கிக் கொள்ளும் வகையிலும் ‘அது தப்பான கணக்கு' என்று செயலில் காட்டியுள்ளோம். இயக்க அமைப்பு, கொள்கை தாக்கம், ஆக்கம்மூலமும் அன்னையாரும், அவரது அய்ந்தாண்டு வரலாற்று சாதனை காலத்திற்குப் பின், கழகக் கொள்கையாளர்களின் வியத்தகு கூட்டு முயற்சிகளினால், நம் கொள்கை எதிரிகள், ‘‘இனி அந்த இயக்கம் ‘இருக்காது;' என்று எதிர்பார்த்தவர்கள் - ‘இருக்கிறார்களே!' அதுவும் மேலும் வலிவுடன் - இளைஞர், மகளிர், மக்கள் ஆகியோரின் பேராதரவுடன் இயங்கி நமக்கு அறைகூவல் விடுக்கிறார்களே; இவர்களை மேலும் தலைதூக்க விடாமல், பொய் சாக்குப் பைகளில் போட்டு அடைப்பது எப்படி'' என்று நாளையும் யோசித்தாலும், அவற்றையும் எதிர்கொள்ளும் ஆற்றல் நம் இயக்கத்திற்கு உண்டு என்று காட்டத் தவறமாட்டோம்!
பிரச்சாரப் பணிகள், நூல்கள் வெளியிடுதல், களப் பணிகள், போராட்டங்கள் அளப்பரியன!
=> வரலாறானார் அன்னையார்!
தனி மனித ஆசாபாசமும், எந்தத் தனி மனித எதிர்பார்ப்பும் இல்லாதவருக்கு எப்போதும் ஏமாற்றம் எதுவும் கிடையாது.
‘சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்'தான் என்பதுதானே பழமொழி!
ஓர் அரிமா நோக்கு...!
(1) அன்னையாரின் தலைமை, கட்டுப்பாட்டினை கற்றுக் கொடுத்த கடமை வீரர்களின் பாசறையாக அய்யாவுக்குப் பின் மேலும் தொடர்ந்தது!
(2) ‘நெருக்கடி காலத்தில்' (Emergency) இயக்கத்தினை நடத்தி எதிரிகளது விஷமத்தை முறியடித்து, இயக்கத்தினைக் காப்பாற்றி நிலை நாட்டியது அன்னையாரின் தலைமை.
(3) ‘இராவண லீலா' நடத்தி பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து, பாருக்கு உணர்த்திய பாங்கின் பெருமிதம்!
(4) அய்யா கடைப்பிடித்த அணுகுமுறை – இரட்டைக் குழல் இயக்கமாக தாய்க் கழகத்தினை நடத்திய விவேகமான வியூகம்.
எல்லாம் 5 ஆண்டுகாலத்தில் வந்த சோதனைகளை சாதனைகளாக்கின!
அன்னையார் பிறகு வரலாறானார்!
=> எத்தனை எத்தனை சாதனைகள்!
அதன் பிறகு அப்பப்பா நினைத்தாலே நம் நெஞ்சம் படபடக்கும். அடுக்கடுக்கான அறைகூவல்கள் - முடிக்கவேண்டிய, முன்னுரிமையுடன் களங்காண வேண்டிய பணிகள் - அவற்றோடு மலைபோன்ற அச்சுறுத்த முயன்ற அனுபவங்களும், நிகழ்வுகளும் ஏராளம்! ஏராளம்!!
நமது ‘மானமிகு சுயமரியாதைக்காரரான' கலைஞர் அவர்கள் கூறிய அற்புதமான உவமைதான் நம் நினைவுக்கு வருகிறது, ‘‘நெருப்பாற்றில் மெழுகுப் படகினை ஓட்டி கரை சேர்க்கவேண்டிய கடுஞ்சோதனைகள் அடங்கியவை.''
வருமான வரித்துறை பாக்கி என்ற வழக்குகள்மூலம் இயக்கத்தினை முடக்க முயன்ற இடியாப்பச் சிக்கல் ஒருபுறம். கொள்கைக் களத்தில் நமது முன்னோர்கள் பெற்றுப் பாதுகாத்து நம்மிடம் தந்த சமூகநீதி - இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் வகையில், ய பொருளாதார அளவுகோல் என்ற மிகப்பெரிய கத்தி தலைமேல் தொங்கியது – எம்.ஜி.ஆர். ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆணையின்மூலம்.
(5) மண்டல் பரிந்துரை அறிக்கை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒன்றிய அரசில் கொணர ஏற்பட்ட கடும் பாரம், அதையொட்டிய நமது தொடர் முயற்சிகள், இந்தியா முழுவதும் - தலைநகர் டில்லியிலும் ஏற்பட்டு, வடக்கு - தெற்கு என்ற பேதமிலா ஒடுக்கப்பட்டோரின் ஓர் அணித் திரட்டல். (42 மாநாடுகள், 16 போராட்டங்கள்).
(6) அதே எம்.ஜி.ஆர். ஆட்சி தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, 50 சதவிகித ஆணை பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்திய பின், 68+1 = 69 ஆக உயர்ந்த மகிழ்ச்சி தரும் நிலையை மறையச் செய்து, தமிழ்நாடு நடைமுறையை ஒழித்துக் கட்ட - நமது கொள்கை எதிரிகளால் - ஆரியத்தினால் எடுக்கப்பட்ட நீதிமன்ற படையெடுப்புகள் போன்ற பலமான அறைகூவல்களை எதிர்கொண்டு, 69 சதவிகிதத்திற்குத் தகுந்த சட்டப் பாதுகாப்புக்காக நாம் எடுத்த முயற்சிகளை பல்வேறு அவமானங்களையும், அவதூறுகளையும் தாங்கி, ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் செய்து முடித்த நமது வினையாற்றல் என்ன சாதாரணமா?
(76 ஆவது சட்ட திருத்தம்).
(7) எம்.ஜி.ஆர். ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நுழைவுத் தேர்வை எதிர்த்துக் களமாடினோம்; முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் ஆட்சியில் நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற இருபால் இளைஞர்களின் வயிற்றில் பாலை வளர்த்தோம்.
இன்று அதை அனுபவிப்பவர்களுக்கு இந்த வரலாறு தெரியாதே!
(உணவை சுவைத்து உண்ணுபவர்கள் எவராவது உழவர்களை நினைக்கிறார்களா? அதுபோலத்தான் இன்றும்).
மற்றும் இயக்கக் கட்டமைப்புகள், பெரியார் அறக்கட்டளைகள்மூலம் கல்விப் பணிகள் பெருகி, ‘பெரியார் மணியம்மை அறக்கட்டளை'மூலமும் ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற தத்துவப்படியான நமது எளிய, அரிய பணிகள்!
தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றினார் நமது மானமிகு முதலமைச்சர்!
இவையெல்லாம் ஒருபுறம் என்றாலும், மறுபுறம் அய்யா விட்டுச் சென்ற மிகப்பெரிய பணி நமக்கு - ஜாதி, தீண்டாமை ஒழிப்பின் அடையாளமான, மனித உரிமைகளில் முக்கியமான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற கலைஞரின் சட்டம் முடக்கப்பட்ட நிலை!
அச்சட்டத்தினை நடமாடச் செய்த பெருமை – நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘திராவிட மாடல்' ஆட்சியின் தனித்ததோர் வரலாற்றுச் சாதனை!
பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அவர் அகற்றி சாதனை சரித்திரம் படைத்தார்.
தந்தை பெரியார் அவர்களது போராட்டத்திற்கான வெற்றிக் கனியைப் பறித்து, அனைவருக்குமே தந்த அரியதோர் சாதனை - அவரது ஆட்சியின் தலையாய சாதனையாகும்!
‘‘எனது போராட்டங்களின் வெற்றி சற்று காலதாமதமாகலாமே தவிர, ஒருபோதும் தோல்வியுறாது'' என்ற தந்தை பெரியாரின் கணிப்பு நிருபணம் ஆகியது!
அன்றைய முதலமைச்சர் மானமிகு கலைஞரின் ஆதங்கத்தை, இன்றைய மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்கி, தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றினார்.
நம் மக்களின் சூத்திரப் பட்டத்தை ஒழிக்க அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபொழுது எப்படி சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் தந்து, ‘மான மீட்ப'ரானாரோ, அதேபோல, கலைஞர் ஆட்சியின் தொடர் பணியாக, இன்றைய நமது திராவிட நாயகர் முதலமைச்சர், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனங்கள்மூலம், அய்யா பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை - அதாவது ‘சூத்திர', ‘பஞ்சம' பிறவி இழிவான - மனித உரிமைப் பறிப்பினை ஒழித்து, சமத்துவ, சுயமரியாதை சமூகம் உருவாக - புது யுகத்தை நமக்குக் காட்டி, ஜாதி, தீண்டாமையின் வேரை அறுத்த முயற்சியில், வெற்றிக் கனியை பெரியார் நினைவிடத்தில் சமர்ப்பித்தார்.
புதியதோர் சரித்திரம் படைத்தார்.
தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தில், எதைப் பற்றி கவலைப்பட்டார்களோ, அந்தக் கவலையையும் போக்கினார் இன்றைய முதலமைச்சர்.
இப்படி எத்தனை எத்தனையோ கூற முடியும்!
=> ‘திராவிட மாடல்’ ஆட்சியைக் கட்டிக் காப்போம்!
இது ‘திராவிடப் பேரியக்கம்' என்ற பெரும் குடும்பத்தின் ‘ஆட்சிச் சாதனைகள்!'
கட்டுப்பாடு காக்கும் - எதையும் தாங்கும் இதயம் கொண்டோர் பாசறையின் - பதவி நாடா - நன்றியை எதிர்நோக்கா ஒரு விசித்திர இயக்கத்தின் சாதனைகள் இவை!
பதவியில் யாரை அமர்த்தினால் இவை சாத்தியமாகுமோ, அவர்களை ஆட்சியில் அமர்த்துவதோடு, பாதுகாப்பதும் நமது உயிர்க் கடமை!
அவ்வாட்சியை மீண்டும் வளரச் செய்யும் – வரச் செய்யும் - பாதுகாவலர்களின் பட்டாளமே திராவிடர் கழகம் என்ற தாய்க்கழகமான பாசறை - பாடி வீடு!
இடையில் வைக்கம் வெற்றிக் கொண்டாட்டம் போன்ற ஊக்க மாத்திரைகளும் ஏராளம்! ஏராளம்!!
தொடர்வோம் நம் பணியை தொய்வின்றி!
அணிவகுத்துப் பணி முடிப்போம்!
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!