முரசொலி தலையங்கம்
24.12.2024
அம்பேத்கரும் நேருவும் வரலாற்றின் பக்கங்கள் - 2
அம்பேத்கருக்கும் நேருவுக்குமான முதல் சந்திப்பு 1939 ஆம் ஆண்டு நடை பெற்றது. காங்கிரஸ் கட்சியின் போராட்டக் குழுவின் தலைவராக இருந்த நேரு, பம்பாயில் இரண்டு நாட்கள் அம்பேத்கரைச் சந்தித்துப் பேசினார். அது முதல் இருவருக்கும் நெருக்கமான நட்பு இருந்தது. அதே ஆண்டு, காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகுவது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக இரண்டு நாட்கள் தொடர்ந்து அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியதும் இதே ஆண்டு நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி அதன்பிறகு பதவி விலகியது.
1941 ஆம் ஆண்டு இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் அம்பேத்கர் உறுப்பினர் ஆக்கப்பட்டார். 1942 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய வைஸ்ராய் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினராக அண்ணல் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அவருக்கு தொழிலாளர் நலத் துறை வழங்கப்பட்டது. 1946 வரை இப்பொறுப்பை வகித்தார்.
1946 ஆம் ஆண்டு வங்காள சட்டமன்றத்தில் இருந்து இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அம்பேத்கர் அனுப்பி வைக்கப்பட்டார். 15.12.1946 அன்று அரசியலமைப்பு அவையில் முதன்முறையாகப் பேசினார். நாடு பிரிவினை அடைந்தபோது அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி, பாகிஸ்தானுக்குப் போய்விட்டது. அதனால் அவர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த டாக்டர் எம்.ஆர்.ஜெயகருக்குப் பதிலாக பம்பாய் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி சார்பாகவே அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(22.7.1947) சுதந்திர இந்தியாவுக்கான அரசியல் சட்டத்தின் நகலைத் தயாரிக்கும் பொருட்டு அரசியல் நிர்ணய சபையானது ஒரு குழுவை 1947 ஆகஸ்ட் 29 அன்று அமைத்தது. அதன் தலைமைப் பொறுப்பு அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது. ஏழு உறுப்பினர்கள் இருந்தாலும், அதனை எழுதி முடிப்பது என்பது அம்பேத்கர் அவர்களுக்கே முழுப்பொறுப்பாக இருந்தது. 1948 பிப்ரவரியில் முழுமையாக எழுதி வழங்கினார் அண்ணல்.
இப்படி தான் எழுதி வழங்கியதற்கு காங்கிரஸ் கட்சி அளித்த முழு ஒத்துழைப்பை வெளிப்படையாகப் பாராட்டி அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பேசினார்கள். இதை அமித்ஷாக்கள் அறிவார்களா?
"பட்டியல் சாதியினரின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, நான் அரசியல் நிர்ணய சபையில் சேர்ந்தேன். ஆனால் அதிகமான பணி எனக்குத் தரப்பட்டது. வரைவுக் குழுத் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுஅதிகமாக அதிர்ச்சி அடைந்தேன். என்னை விட திறமைசாலிகள் இந்த வரைவுக்குழுவில் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு தலைமைப் பதவி தந்ததற்கு நன்றி" என்று சொன்ன அம்பேத்கர் அவர்கள்,
"அரசியல் நிர்ணய சபையில் காங்கிரஸ் கட்சி இருந்ததால் குழப்பம் இல்லை. அது அவை நடவடிக்கைகளில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் அளித்தது. காங்கிரஸ் கட்சி கட்டுப்பாடாக நடந்து கொண்டதால் வரைவுக்குழு அரசியல் சாசன உருவாக்கத்தை முறையாக வழிநடத்திச் செல்ல முடிந்தது.சபையில் சாசன வரைவு, சிக்கல் இல்லாமல் பரிசீலிக்கப்பட்டதற்கான பாராட்டுகள் காங்கிரஸ் கட்சியையே சேரும்"என்று மனப்பூர்வமாகப் பாராட்டினார். இன்று புதிதாக அம்பேத்கருக்காக கண்ணீர் வடிக்கும் அமித்ஷாக்கள் அறிவார்களா?
இந்து சட்ட மசோதாதான் அம்பேத்கர் - நேரு நட்பில் நெருடலை ஏற்படுத்தியது, இந்து சட்ட மசோதாவை 1951 பிப்ரவரி 5 அன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார் சட்ட அமைச்சர் அம்பேத்கர். மூன்று நாட்கள் விவாதம் நடந்தது. அடுத்த கூட்டத் தொடரில் விவாதம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் மீண்டும் விவாதம் தொடங்கியது. அன்றைய அமைச்சர்கள் சிலரே இந்து சட்ட மசோதாவை எதிர்த்தார்கள். 'இந்து சட்ட மசோதாவை நிறைவேற்றுவேன், இல்லாவிட்டால் மரணம் அடைவேன்' என்றே சொன்னார் பிரதமர் நேரு. சனாதன சக்திகளின் எதிர்ப்பு அதிகம் ஆனது. நாடாளுமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சட்ட அமைச்சர் அம்பேத்கர் வாழ்ந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்கள். அம்பேத்கருக்கு கொலை மிரட்டல் கடிதங்களும் வந்தது.
இந்து சட்ட மசோதாதான் அம்பேத்கர் - நேரு நட்பில் நெருடலை ஏற்படுத்தியது.
இந்து சட்ட மசோதாவை 1951 பிப்ரவரி 5 அன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார் சட்ட அமைச்சர் அம்பேத்கர். மூன்று நாட்கள் விவாதம் நடந்தது. அடுத்த கூட்டத் தொடரில் விவாதம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் மீண்டும் விவாதம் தொடங்கியது. அன்றைய அமைச்சர்கள் சிலரே இந்து சட்ட மசோதாவை எதிர்த்தார்கள். 'இந்து சட்ட மசோதாவை நிறைவேற்றுவேன், இல்லாவிட்டால் மரணம் அடைவேன்' என்றே சொன்னார் பிரதமர் நேரு. சனாதன சக்திகளின் எதிர்ப்பு அதிகம் ஆனது. நாடாளுமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சட்ட அமைச்சர் அம்பேத்கர் வாழ்ந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்கள். அம்பேத்கருக்கு கொலை மிரட்டல் கடிதங்களும் வந்தது.
நேருவின் அமைச்சரவையில் இருந்து கொண்டே எதிர்த்தவர்களில் முக்கியமானவர் இன்றைய மோடியால் போற்றப்படும், வல்லபாய் படேல் அவர்கள். இந்து மகாசபைத் தலைவராக இருந்து கொண்டே காங்கிரஸ் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த சியாம் பிரசாத் முகர்ஜியும் அதனை எதிர்த்தார். அன்றைய சபாநாயகர் மாவலன்கர் எதிர்த்தார். குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்தும் எதிர்த்தார். இந்து சட்ட மசோதாவை ஆதரித்து குடியரசுத் தலைவருக்கே பிரதமர் நேரு கடிதம் எழுதினார். 'என்னுடைய அரசு இந்து சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதை இலட்சியமாகக் கொண்டுள்ளது' என்று 28.11.1948 அன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு அறிவித்தார். தனது ஆதரவை 19.12.1949 அன்று மீண்டும் உறுதி செய்தார் பிரதமர் நேரு.
ஆனால் எதிர்ப்புகள் அதிகம் ஆனதால் இந்த எதிர்ப்புக்கு அன்றைய பிரதமர் நேருவும் கட்டுப்பட வேண்டியதாயிற்று. இந்து சட்ட மசோதா கிடப்பில் போடப்பட்டது. 1951 செப்டம்பர் 27 அன்று அம்பேத்கர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகினார். விலக வேண்டிய சூழலை உருவாக்கியவர்கள் படேல், சியாம் பிரசாத் முகர்ஜி உள்ளிட்ட பழமைவாத சக்திகள் தானே? அதிலும் குறிப்பாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முதலாளிகள் சிலர் இதனைக் கடுமையாக எதிர்த்ததாக அம்பேத்கரின் மனைவி சவிதா அம்பேத்கர் தனது நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். (டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை, எதிர் வெளியீடு, பக்கம் 245) அம்பேத்கர் பெயரைச் சொன்னால் அமித்ஷா அலறுவது இதனால்தான்!