முரசொலி தலையங்கம்
23.12.2024
அம்பேத்கரும் நேருவும் வரலாற்றின் பக்கங்கள் - 1
அண்ணல் அம்பேத்கருக்கு ஆதரவாக மாண்புமிகு பிரதமர் மோடியும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவும் பேசுவதைக் காணச் சகிக்கவில்லை. அம்பேத்கரை நேரு மதிக்கவில்லையாம்! மோடி சொல்கிறார்!
தான் பிரதமர் ஆனதும், தன்னை வளர்த்து ஆளாக்கிய அத்வானிக்கும், ஜோஷிக்கும் 'அல்வா' கொடுத்தவர் மோடி. தொகுதிகளே தர மறுத்தார்கள். ஆனால், இந்திய நாடு விடுதலை அடைந்தபோது தான் அமைத்த அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியில் இல்லாத அண்ணல் அம்பேத்கருக்கு சட்ட அமைச்சர் பதவியை வழங்கிய பெருந்தகையாளர்தான் பண்டித நேரு.
காங்கிரஸ் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேராத நீதிக்கட்சியைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகத்துக்கு நிதி அமைச்சர் பொறுப்பையும், அகாலி தளத்தைச் சேர்ந்த பல்தேவ் சிங்குக்கு பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பையும், இந்து மகா சபையைச் சேர்ந்த ஷ்யாம் பிரசாத் முகர்ஜிக்கு தொழில் துறை அமைச்சர் பொறுப்பையும் வழங்கியவர்தான் பிரதமர் நேரு.
நிதி - சட்டம் - பாதுகாப்பு - தொழில் ஆகிய நான்கு தூண்களையும் மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு வழங்கி அமைச்சரவை அமைத்தவர்தான் பிரதமர் நேரு.
அண்ணல் காந்திக்கும் - அண்ணல் அம்பேத்கருக்கும் கொள்கை ரீதியான முரண்கள் அதிகம் உண்டு என்பதை நாடு அறியும். அவர்கள் இருவருமே இது குறித்து அதிகம் எழுதி இருக்கிறார்கள். அதேநேரத்தில் அம்பேத்கரை அமைச்சராக்கும் நேருவின் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார் என்பதுதான் இன்றைய காலக்கட்டம் அறிய வேண்டிய மிக முக்கியச் செய்தியாகும்.
அம்பேத்கரின் வரலாற்றை எழுதிய தனஞ்சய் கீர் குறிப்பிடுகிறார்... "நேரு, அம்பேத்கரை அவருடைய அலுவலக அறைக்கு அழைத்தார். சுதந்திர இந்தியாவின் புதிய அமைச்சரவையில் சட்ட அமைச்சராக சேர ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்டார். அம்பேத்கர் அமைச்சராவதற்கு ஒப்புக் கொண்டார். பின்னர் காந்தியிடம் அமைச்சர் பட்டியலை அளித்தார் நேரு. காந்தியும் அதற்குத் தன்னுடைய ஒப்புதலை வழங்கினார். பிரிட்டிஷ் காரர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை பெற இருந்த காங்கிரஸ் தலைவர்கள் அம்பேத்கருடன் இப்போது நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினர்" என்று எழுதுகிறார்.
ஆட்சி அதிகாரம் வந்ததும், யாரையும் கண்டுகொள்ளாமல் போய்விடவில்லை நேரு. அதற்கு முன் அரசியல் முரணோடு இருந்தவர்களையும் அரவணைத்து அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளக் கூடியவராக நேர்மையாளராக இருந்தார் நேரு. அதனால்தான் பா.ஜ.க.வினருக்கு அவரைப் பிடிக்கவில்லை.
'எதற்கு அம்பேத்கர் பேரைச் சும்மா சும்மா சொல்கிறீர்கள், அவர் பெயரைச் சொல்வது பேஷனாகிவிட்டது' என்று மாண்புமிகு அமித்ஷா எரிச்சல் அடைந்து சொன்ன இதே அவையில், அண்ணல் அம்பேத்கர் மறைந்த போது பிரதமர் நேரு ஆற்றிய உரை கண்ணீர் மயமானது மட்டுமல்ல, இந்தியாவின் உச்சியில் போய் நிறுத்திய உரையாகும். அம்பேத்கரின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக் கொண்ட நேருவாக அப்போது பேசினார் அன்றைய பிரதமர்.
"பல துறைகளில் முக்கிய சேவை செய்துள்ள டாக்டர் அம்பேத்கர் காலமாகியதை வருத்தத்துடன் அறிவிக்கிறேன். அவருடைய உயர்ந்த குணங்கள், கல்வி கேள்விகள், தமது மனதுக்குப் பிடித்தமானதை நடத்திவைப்பதில் அவர் காட்டிய உறுதி முதலியன குறிப்பிடத் தக்கவை. பல காலமாக முந்தைய முறைகளின் கீழ் அவதியுற்று வந்தவர்களின் விடியலுக்காக அவர் உண்மை உணர்ச்சியுடன் பாடுபட்டார்.
இந்திய அரசியல் சட்டத் தயாரிப்பில் அவர் எடுத்துக்கொண்ட பிரதான பங்கை மறக்க முடியாது. அவரது மற்ற பணிகளைவிட இதுவே பல காலம் போற்றப்படும்.
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் தீவிர உணர்ச்சிக்கு அவர் ஒரு சின்னமாக விளங்கினார். இதை நாம் அனைவரும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அவர் கலகம் செய்து எதிர்த்த மாசை இந்து சமூகத்திலிருந்து அகற்ற நமது பொது நடவடிக்கைகளிலும் சட்டத்தின் மூலமாகவும் இந்தச் சபையில் இடம்பெற்றுள்ள எல்லா கட்சியினரும் முயன்றுவந்திருக்கிறோம். சட்டத்தின் மூலமாக மட்டும் இதை அடியோடு அகற்ற முடி யாது. பழக்க வழக்கங்கள் ஆழ வேரூன்றியவை. ஆனால், தீண்டாமை கடைசிக் கட்டத்தை அடைந்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை. சட்டமும் பொதுஜன அபிப்ராயமும் இன்னும் உறுதிகாட்டி, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாள் நெருங்கிவருகிறது.
அவருடன் அரசு வேலையில் ஒத்துழைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்கு முன் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. ஆனால், அரசியல் நிர்ணய சபை வேலையில் நட்பு ஏற்பட்டது. பிறகு அரசில் சேரும்படி அவரை அழைத்தபோது பலர் ஆச்சரியப்பட்டனர். ஆனால், அவர் பொறுப்பேற்று அரசியல் சட்டத் தயாரிப்பு வேலையைச் செவ்வனே நடத்திவைத்தார். அவ்வப்பொழுது சில வேற்றுமைகள் இருந்தன. ஆனாலும் பல ஆண்டுகள், அவருடன் அரசில் சேர்ந்துழைப்பது சாத்தியமாயிற்று. அவர் ஒரு பிரதான புருஷர். அவரது மரணம் நமக்கு வருத்தத்தைத் தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு சபையின் அனுதாபத்தைத் தெரிவிப்போம்.
ஹிந்து சட்ட சீர்திருத்தப் பிரச்சினையில் அம்பேத்கர் எடுத்துக்கொண்ட சிரமத்துக்கும் காட்டிய அக்கறைக்கும் அவர் என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ளப்படுவார். தான் வகுத்த ரீதியில் அல்லாமல் பகுதி பகுதியாக ஹிந்து சட்டம் நிறைவேறியதை அம்பேத்கர் கண்டது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஹிந்து சமூகத்தின் கொடுமைப்படுத்தும் அம்சங்களை எதிர்த்துப் புரட்சியின் சின்னமாக விளங்கியவர், நாடு அவரைப் பெரிதும் நினைவில் வைத்திருக்கும்" என்றார் நேரு.
அம்பேத்கரை, சமூகத் தலைவராக அல்ல, அரசியல் தலைவராக அல்ல, கொள்கைத் தலைவராகப் போற்றிப் பேசினார் பிரதமர் நேரு அவர்கள்.
- தொடரும்...