Tamilnadu

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட 300 இந்தியர்கள் யார்? : ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவுமென்பொருள் மூலம் இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஆயிரம் பேரின் செல்போன் வேவு பார்க்கப்பட்டதாக கடந்த 2021ல் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. பெகாசஸ் மென்பொருளுக்கான இணைப்பை ரகசியமாக வாட்ஸ் அப் மூலம் அனுப்பி 300 இந்தியர்கள் உட்பட ஆயிரத்து 400 பேர் வேவுபார்க்கப்பட்டதாக "வாட்ஸ்அப்" நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் பெகாசஸ் நிறுவனம் சட்டவிரோதமாக உளவு மென்பொருளை அனுப்பியதை அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்நிலையில், சமூக வலைத்தளப் பதிவொன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, சட்டவிரோத ஸ்பைவேர் மோசடியில் இந்தியர்களின் 300 வாட்ஸ்அப் எண்கள் எவ்வாறு இலக்காக்கப்பட்டன என்பதை அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளதால், உளவுபார்க்கப்பட்ட 300 இந்தியர்கள் யார் என்பது குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வேவு பார்க்கப்பட்ட 2 ஒன்றிய அமைச்சர்கள் யார்? 3 எதிர்க்கட்சி தலைவர்கள் யார்? பத்திரிகையாளர்கள் யார், யார்? எந்த தொழிலதிபர்கள் கண்காணிக்கப்பட்டனர் என்பதை ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை கவனத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்துமா? உரிய வழக்குகள் பதிவு செய்யப்படுமா? என்றும் ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பி உள்ளார்.

Also Read: ”சுதந்திரமான – நியாயமான தேர்தல் முறையை ஒழிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!