Tamilnadu

“பாம்பின் நிழலில் உள்ள தவளைதான் மக்கள் அதிமுக” - குட்டி ஸ்டோரி சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி !

சென்னை பிராட்வேயில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. துறைமுகம் சட்டமன்றத் தொகுதி சார்பில் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு 2000 நபர்களுக்கு ஐந்து கிலோ அரிசி, சேலை, இனிப்பு மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ,சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், முன்னாள் சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் ஆல்போன்ஸ் மற்றும் பகுதி செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள்,உறுப்பினர்கள், மகளிர் அணியினர், பொதுமக்கள்,கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “அன்பை பரிமாறும் விழாவாக கிறிஸ்துமஸ் பண்டிகையாக உள்ளது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 4ம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி.

நானும் ஒரு பெருமையான கிறிஸ்தவன் என்று சொன்னதால் சங்கிகளுக்கு எல்லாம் வயித்தெரிச்சல். நீங்கள் என்னை கிறிஸ்தவன் என்று நினைத்தால் நான் கிறிஸ்தவன், இந்து என்று நினைத்தால் இந்து, முஸ்லிம் என்று நினைத்தால் முஸ்லிம் என்று நான் சொன்னேன். அனைவருக்கும் பொதுவானவன் நான். அனைத்து மதங்களும் அன்பைத்தான் போதிக்கிறது. மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவோர் மக்கள் மத்தியில் பொய்யைச் சொல்லி வெறுப்பை பரப்புவார்கள். அவர்கள் உண்மையை பேசமாட்டார்கள்.

மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்கள்தான், வெறுப்பை பரப்பவர்கள்தான் என்று நினைத்தோம். ஆனால் சமீபத்தில் ஒரு நீதிபதி மத வெறுப்புக் கருத்துகளை பொதுவெளியில் பேசியதை நாம் பார்த்தோம். இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புக் கருத்துக்களை பேசியிருக்கிறார். அந்த நீதிபதியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தனர். அதற்குக் கூட அதிமுக ஆதரவு அளிக்கவில்லை. அந்த அளவுக்கு பாஜக மீது அவர்களுக்கு பயம்.

அரசியலமைப்பிற்கு எதிராக பேசியுள்ள நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் தீர்மானத்திற்கும் கூட ஆதரவளிக்காத அதிமுகவிற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். பாஜக கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கும் அதிமுக ஆதரவளித்துள்ளது இதன் மூலம் அவர்கள் கூட்டணி வலுவாக உள்ளது என்று தெரிகிறது.” என்றார்.

தொடர்ந்து, “சட்டமேதை அம்பேத்கரை பற்றி அமித்ஷா பேசியது தொடர்பாக எடப்பாடியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘ஜெயக்குமார் கூறியதுதான் எனது நிலைப்பாடு’ என்று கூறியுள்ளார். இப்படிப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? உலக வரலாற்றில் இது போன்ற விளக்கத்தை யாரும் கேட்டிருக்க முடியாது.

ஜெயக்குமாரும் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது பாஜகவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார். பாஜகவிற்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு எப்போதும் தெரியும். திமுக, அமித்ஷாவைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறோம். இனிமேல் பாஜகவுடன் அதிமுக கள்ளக் கூட்டணி என்று சொல்லத் தேவையில்லை. நல்ல கூட்டணியாகவே மக்கள் எடுத்துக்கொண்டார்கள். எல்லாருக்கும் தெரியும் நல்ல கூட்டணியாகவே அது அமைந்திருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பாஜகவை எதிர்த்த விமர்சித்த ஒரு தீர்மானம் கூட இல்லை. ஒரு ஊரில் கடுமையான வறட்சி, அந்த வறட்சியால் நிலங்கள் எல்லாம் வெடித்துப் போய் உள்ளது. அங்கு பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று வருகிறது. சூடு தாங்க முடியாமல் பாம்பு தனது தலை மற்றும் உடலைத் தூக்கிக் கொண்டு வாலை மட்டுமே தரையில் வைத்து நகர்கிறது. அந்தப் பாம்பின் நிழலில் ஒரு தவளை ஒதுங்குகிறது. பாம்பு கீழே குனிந்து தவலையைப் பார்த்தால் தவளையின் நிலைமை என்ன என்று நமக்குத் தெரியும். தவளையின் கதை அவ்வளவு தான்.

இன்னொரு கதை...

ஒரு தாய் மானும் குட்டை மானும் பாலைவனத்தில் நடந்த சென்று கொண்டிருக்கிறது. கடுமையான வெயில், தாங்க முடியவில்லை. குட்டி மணல் நடக்க முடியவில்லை. தாய் மான் நின்று கொண்டு அதன் நிழலில் குட்டி மானை ஓய்வெடுக்கச் சொல்லுகிறது. கொளுத்துகிற வெயிலில் தான் தாங்கிக் கொண்டு குட்டிமானுக்கு நிழல் கொடுக்கிறது தாய்மான்.

இரண்டு நிழல்களைப் பற்றிச் சொல்லியுள்ளேன் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. பாம்பின் நிழலில் உள்ள தவளையைப் போன்றுதான் மக்கள் அதிமுகவைப் பார்க்கிறார்கள். பாஜக எனும் பாம்பு கீழே பார்த்தால் தவளையின் கதை முடிந்து விட்டது.

திமுகவை சிறுபான்மை மக்கள் தாய்மானின் நிழலில் இளைப்பாறும் குட்டியாக பார்க்கிறார்கள். இது அன்பால் செய்கிற உதவி, இதற்கு ஈடு இணை கிடையாது. 2026 இல் திமுக கூட்டணி 200 இடங்களில் ஜெயிக்க வேண்டும் என்று முதல்வர் சொல்லியுள்ளார். சிறுபான்மை மக்கள் மீது உள்ள நம்பிக்கையில் கூறியுள்ளார். அந்த நம்பிக்கை நிச்சயம் நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.” என்றார்.

Also Read: சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச வீடியோக்கள்... புகாரின்பேரில் கேரள இளைஞரை கைது செய்த சென்னை போலீஸ்!