Tamilnadu

விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை... "எந்த விவசாயியும் விடுபடக்கூடாது" - அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்!

சென்னை தலைமைச் செயலகத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழ்நாட்டில் நடப்பு டிசம்பர் 2024 மாதத்தில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து அனைத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்கள், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தின்போது தமிழ்நாடு டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் காரணமாக 2,86,069 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 73,263 ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளது என்று அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதனைத் தொடர்ந்து பெய்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக 2,25,655 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 45,634 ஹெக்டர் பரப்பில் தோட்டக்கலைப்பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஆக மொத்தம் இதுநாள் வரை 6,30,621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.

அதோடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி மற்றும் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 2906 மெ.டன் வேளாண் விளைபொருட்கள் சேதமடைந்துள்ளது என்றும், பயிர் சேதப்பரப்பு கணக்கீட்டுப் பணியினை 17.12.2024 க்குள் முடித்து, மாநில பேரிடர் நிவாரணத் தொகையினை விவசாயிகளுக்கு விரைவாக பெற்றுத் தரும் வகையில் உரிய கருத்துரு அரசிற்கு விரைவில் அனுப்பப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும் கணக்கீட்டின் போது பாதிப்படைந்த எந்த விவசாயியும் விடுபடக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டினை ஈடுகட்டும் விதமாக, பயிர் காப்பீட்டின் கீழ் விரைவாக இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிப்பதற்காக புள்ளியியல் துறை மற்றும் பயிர் காப்பீடு நிறுவனங்களுடன் 17.12.2024 கூட்டம் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

Also Read: தமிழ்நாடு அரசு எனக்கு ஊக்கம் அளித்ததோடு நிறைய உதவிகளையும் செய்துள்ளது - செஸ் சாம்பியன் குகேஷ் நெகிழ்ச்சி!