Tamilnadu

"துபாயை போல கோவையில் செயற்கை நுண்ணறிவு மாடல்கள் " - அமைச்சர் PTR கூறியது என்ன ?

கோவையில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு(AI) சிறப்பு மையத்தினை தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்து ஆலோசித்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த ஆட்சியாளர்கள் அப்படியே போட்டு சென்ற கோவை எல்காட்டை ,உச்சநீதிமன்றம் வரை சென்று திறந்துள்ளோம். இந்த துறைக்கு பொறுப்பேற்ற பின்னர் மாதம் ஒரு முறை வெளிநாடு சென்று மார்கெட் செய்து தமிழகத்திற்கு நிறுவனங்களை ஈர்த்து வருகிறேன்.

கோவையில் சென்னை அளவிற்கு ஐடி நிறுவனங்களை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டின் குளோபல் பின்சிட்டி போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டைடல், மினி டைடல் பார்க்குகளின் செயல்பாடு நன்றாக இருக்கின்றது.

துபாய் போன்ற நாடுகளில் உள்ளது போல கோவையிலும் செயற்கை நுண்ணறிவு மாடல்கள் உருவாக்கப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவால் வேலை வாய்ப்பு இழப்பு ஏற்படவே 20 ஆண்டுகளுக்கும் மேலாகும். இந்த AI துறையில் நாம் இப்போதுதான் 5 ம் வகுப்பில் இருக்கிறோம்.

இந்தியாவிற்கு மென்பொருள் துறையில் அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. உலக அளவில் இந்த துறையில் அளவில்லா வாய்ப்புகள் கொட்டிக்கிடங்கின்றது. சீனாவில் இருந்து எல்லோரும் வெளியே வருகின்றனர். இங்கு மனிதவளம் இருப்பதால் நமக்கு உலக அளவில் அளவில்லா வாய்ப்பு இருக்கின்றது. செயற்கை நுண்ணறிவு துறையில் இலக்கை அடைய நிறைய முதலீடுகள் தேவை" என்று கூறினார்.

Also Read: ”மீனவர்கள் விடுதலை இருநாடு உறவுகளை மேம்பட உதவும்”: இலங்கை அதிபருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்