Tamilnadu

TN Fact Check : குகேஷுக்கு ரூ.5 கோடி, மாரியப்பனுக்கு பரிசு இல்லையா? : பரவும் பொய் செய்தி -உண்மை என்ன?

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் போட்டியானது சிங்கப்பூரில் கடந்த நவ.25-ம் தேதி தொடங்கி கடந்த டிச.12-ம் தேதி நிறைவடைந்தது. 14 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டித் தொடரில், தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் குகேஷும், சீன வீரர் டிங் லிரனும் நேருக்கு நேர் போட்டியிட்டனர். இதில் குகேஷ் வெற்றி பெற்று, முதல் இளம் உலக சாம்பியன் என்ற பட்டத்தை வென்றார்.

தற்போது இளம் சாம்பியன் குகேஷுக்கு வாழ்த்து குவிந்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். இந்த சூழலில் குகேஷ்-க்கு ரூ.5 கோடி, தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் மாரியப்பனுக்கு பரிசு வழங்கவில்லை என்று போலி செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று ஆதாரங்களோடு தமிழ்நாடு Fact Check செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு Fact Check வெளியிட்டுள்ள செய்தி வருமாறு :

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ்-க்கு தமிழ்நாடு முதல்வர் ரூ.5 கோடி பரிசுத் தொகை அறிவித்தார். இந்நிலையில், குகேஷ்-க்கு 5 கோடி ரூபாய் அறிவித்த அரசு தடகள வீரர் மாரியப்பனுக்கு வெறும் வாழ்த்து மட்டும் கூறிவிட்டு பரிசுத் தொகை வழங்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது.

* கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற 'ரியோ பாரா ஒலிம்பிக்' தொடரில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.2 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.

* அடுத்ததாக, 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற போது தமிழ்நாடு முதல்வர் ரூ.2 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார்.

* மேலும், குரூப்- 1 பிரிவில் மாரியப்பனுக்கு தமிழ்நாடு காகித நிறுவனத்தின் துணை மேலாளர் பணி வழங்கப்பட்டது.

* 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற போது தமிழ்நாடு முதல்வர் ரூ.75 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்தார்.

* மேலும் 2024-ம் செப்டம்பர் மாதம் பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக ரூ.1 கோடி பரிசுத் தொகை தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்.

* தடகள வீரர் மாரியப்பன் அவர்களுக்கு பரிசுத் தொகை, போட்டிகளில் பங்கேற்றல், மருத்துவ செலவுகள் என சுமார் ரூ7.5 கோடி அளவிற்கு தமிழ்நாடு அரசால் உதவிகள் செய்யப்பட்டுள்ளது என்று SDAT தெரிவித்துள்ளது.

ஆனால், தடகள வீரர் மாரியப்பனுக்கு முதல்வர் வாழ்த்து மட்டுமே கூறியதாக இனரீதியான வதந்திகள் பரப்பப்படுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தரப்பில், 07.05.2021 முதல் 30.11.2024 வரை சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகள் உள்ளிட்ட 3,345 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.104.22 கோடி உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் 585 விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும், உயர்நிலைப் போட்டிகளில் பங்கேற்றல் மற்றும் மருத்துவச் செலவு உட்பட பல்வேறு செலவினங்களுக்கும் ரூ. 13.33 கோடி வழங்கப்பட்டுள்ளது.

Also Read: விஸ்வகர்மா திட்டமும், தமிழ்நாடு அரசின் ’கலைஞர் கைவினைத் திட்ட’மும் ஒன்றா? : TN Fact Check விளக்கம்!