Tamilnadu

இடைவிடாத நிவாரணப்பணி : கொட்டும் மழையில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பதிவானதன் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையொட்டி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேற்று (13.12.2024) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக, கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்து தேவையான அறிவுரைகள் வழங்கினார்.

குறிப்பாக, தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் அணைகளின் நீர் இருப்பை கண்காணிக்க வேண்டும், அணைகளில் இருந்து நீரினை திறந்து விடும் போது பொது மக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் முன்னதாகவே தங்க வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதனைத்தொடர்ந்து கனமழை பெய்துவரும் பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடியில் இரண்டு நாட்களாக அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டுவருகின்றார். இன்றைய தினம் ஆய்வை மேற்கொண்ட அமைச்சர் கீதா ஜீவன் மீன்வளக்கல்லூரி அருகே பெரியநாயகபுரத்தை சேர்ந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதேபோல், கனமழையின் காரணமாக கேம்ப்-1 பகுதியில் செயின் தாமஸ் பள்ளி நிவாரண முகமை பார்வையிட்டு அங்கு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார். மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம், எம்ஜிஆர் நகர் குடியிருப்பு பகுதி, பாளையங்கோட்டை ரோடு பைபாஸ் மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை பார்வையிட்டு, தண்ணீரை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Also Read: தமிழ்நாட்டுக்கு வந்து தமிழராகவே வாழ்ந்த வீரமாமுனிவரின் பிறந்தநாள்... அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை !