Tamilnadu

”கட்அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது”: கழக நிர்வாகிகளுக்கு அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தல்

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கழக நிர்வாகிகளுக்கும் - தொண்டர்களுக்கும் விடுத்த அறிக்கைக்கிணங்க கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் யாரும் கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் "திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கழக நிர்வாகிகள் அனைவரையும் நான் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன்.

பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைப்பதை என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது அறவே நிறுத்தப்பட வேண்டும். எனவே, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது என்று மீண்டும் அறிவுறுத்த விரும்புகிறேன்.

இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நான் பங்கேற்கும் நிகழ்ச்சியாகவோ, கூட்டமாகவோ இருந்தால் அதில் நான் பங்கேற்க மாட்டேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். தலைமைக் கழக, மாவட்டக் கழக, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, வட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் எனது இந்த அறிவுரையை கிஞ்சிற்றும் மீறாமல் கடைப்பிடித்து திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டார்.

என கழகத் தலைவர் அவர்களின் மேற்சொன்ன அறிக்கையினை ஒருசில இடங்களில் - ஒரு சிலர் பின்பற்றாத வகையில் நடந்து கொள்வதாக தலைமைக் கழகத்திற்கு தகவல்கள் வந்துள்ளன. இது கழகக் கட்டுப்பாட்டை மீறுகின்ற செயலாகும்.

எனவே, இனி வருங்காலங்களில், எந்தவொரு இடத்திலும் முதலமைச்சர் கழகத் தலைவர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொள்ளும் கழகப்பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் - போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தலைமைக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Also Read: ஃபெஞ்சல் புயல் மீட்பு பணி : மக்களை இயல்பு நிலைக்கு மீட்டுவரும் திராவிட மாடல் அரசு - அமைச்சர் அறிக்கை!